Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உதவலாம் வாருங்கள்

உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள்.

அன்பார்ந்த வாசகர்களே...

ங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங் கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

உதவலாம் வாருங்கள்

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க் கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லிய மாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஜோதிட விளக்கங்கள், நவகிரக வழிபாடு மற்றும் பலன்கள் குறித்த விளக்கங்கள், சகுன சாஸ்திரம், ரோக சாஸ்திரம் முதலான பல தகவல்கள் அடங்கிய தொகுப்பு `பலித ஜோதிடம்’ எனும் புத்தகம். இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும், என்ன விலை என்று தகவல் அறிந்தவர்கள், விவரம் பகிர்ந்துகொண்டால், உதவியாக இருக்கும்.

-எம்.பாஸ்கரன், திருவாரூர்

ஜாதகத்தில் சந்திரன் பலமின்றி திகழ்வதால் மனம் சார்ந்த பிரச்னைகள், மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே, சந்திரன் வழிபட்ட சிவத் தலங்களை தரிசித்து வாருங்கள் என்கிறார், எங்கள் ஜோதிடர்.

அதன்படியே சில தலங்களை விசாரித்து அறிந்து தரிசித்து வந்தேன். சந்திரன் வழிபட்ட சிவத் தலங்கள் குறித்து விவரம் அறிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால், அந்தத் தலங்களுக்கும் சென்று வருவேன்.

- கே.குமார், மதுராந்தகம்

உதவலாம் வாருங்கள்

நான் ஸ்தல விருட்சங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறேன். பாலை விருட்சம் எந்தத் தலத்துக்கு உரியது என்ற விவரம் தேவை. மேலும், ஒவ்வொரு ராசிக்கும் உரிய விருட்சங்கள் உண்டு என்றும் ஒரு தகவல் படித்தேன். அதுகுறித்து விரிவான விளக்கங்களுடன் நூல்கள் ஏதேனும் இருந்தால், தகவல் பகிருங்களேன்.

- கோ.வாசுதேவன், குறிச்சி

அடியார்கள் சிலர், சிவாலய மூலவருக்கு, எவ்வித கட்டணமுமின்றி ருத்திராட்சப் பந்தல் அமைத்துத் தருவதாக நண்பர்கள் கூறினார்கள். பட்டீஸ்வரம் அருகே ஒரு கோயிலுக்கு ருத்திராட்சப் பந்தல் அமைக்க ஆசை. உதவ விருப்பம் உள்ள அடியார்களின் தொடர்பு எண்கள், முகவரி இருந்தால் தந்து உதவுங்களேன்.

- அ.ராஜா, சென்னை-44

திண்டிவனம் அருகில் ஏதோவொரு தலத்தில் வேலுக்குச் சிறப்புத் திருவிழா நடைபெறுவதாக அறிந்தேன். அது எந்தத் தலம். அந்த விழாவுக்கான புராணக் காரணம் என்ன. விவரம் தெரிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

- வி.ராமநாதன், திருச்சி-2

பறவைகளில் மயில் வந்து வழிபட்ட தலம் மயிலாடுதுறை, திருமயிலை. கழுகுகள் வழிபட்ட ஊர் கழுகுமலை, திருக்கழுக்குன்றம். அதேபோல் கிளிகள் வழிபட்ட திருத்தலம் எது என்பதை அறிய ஆவலாக உள்ளேன். தகவல் தந்து உதவுங்களேன்.

-க.வேல்முருகன், சென்னை-55

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதவிக் கரம் நீட்டியோர்...

`நெல்லைக்கு அருகில், இரட்டை லிங்கங்கள் அருளும் கோயிலே எங்கள் குடும்பத்துக்கான சாஸ்தா கோயில் என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அப்படியான கோயில் எங்குள்ளது என்று தெரியவில்லை. விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்’ - என்று சென்னை வாசகர் எம்.முருகேசன் கேட்டிருந்தார். அவருக்குத் திருநெல்வேலியைச் சேர்ந்த தி.சபாபதி, கீழ்க்காணும் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில், மலையடிவாரத்தில் அமைந்துள்ளது மலையான் குளம். இந்தக் கிராமத்தில் உள்ள அருள்மிகு பாடகலிங்க ஸ்வாமி திருக்கோயிலில் இரட்டை லிங்கங்களை தரிசிக்கலாம்.

அரசி ஒருத்தியின் பாடகம் இருந்த இடத்தில் தோன்றியதால், லிங்க மூர்த்திகளில் ஒருவருக்கு ஶ்ரீபாடகலிங்கம் என்று திருநாமம்; மற்றவருக்கு ஶ்ரீமகாலிங்கம் என்று திருப்பெயர்.

லிங்கத் திருமேனிகளுக்குப் பின்னால் ஶ்ரீசித்திர புத்திர தர்மசாஸ்தாவும் அருகிலேயே பாடகலிங்க நாச்சியாரும் அருள்பாலிக்கிறார்கள். முன் மண்டபத்தில் ஶ்ரீபாடகலிங்க பிள்ளையார் அருள்கிறார்.

கோயிலின் ஸ்தல விருட்சம், வில்வம்; தீர்த்தம்- பாடகலிங்க தெப்பம். கோயிலுக்கு வந்து, ஶ்ரீபாடகலிங்கம், ஶ்ரீமகாலிங்கம் மற்றும் சாஸ்தாவை பிரார்த்திக்க, எண்ணிய காரியங்கள் ஈடேறுமாம். சுற்றுவட்டார ஊர்களிலும்... தங்களுடைய சாஸ்தா எந்த தெய்வம் என்று தெரியாதவர்கள், இவரையே தங்களின் சாஸ்தாவாக ஏற்று வழிபட்டு வருகிறார்கள். அதேபோல் கல்யாணம், கிரகப்பிரவேசம், வளைகாப்பு என்று வீட்டில் எந்தவொரு சுபநிகழ்ச்சி நடந்தாலும், முதல் பத்திரிகையும் அழைப்பும் கோயிலுக்குதான்!

`சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள - சிறுநீரக நோயைத் தீர்க்கவல்ல பரிகாரத் தலமான ஊட்டத்தூர் குறித்து சென்னை வாசகி கே.மீனாட்சி கேட்டிருந்தார். அந்தத் தலம் குறித்து சென்ற இதழில் விரிவான தகவல்களைப் பகிர்ந்திருந்தோம்.

அந்தத் தலம் குறித்து கூடுதல் தகவல்களை, பெண்ணாடம் வாசகர் ராஜசேகரன், கொடுமுடி வாசகர் கே.இ.செளந்திரம், சென்னை-சின்மயாநகர் வாசகர் டி.என்.காந்திமதி நாதன் ஆகியோர் அனுப்பியிருந்தனர். தகவல்கள், குறிப்பிட்ட வாசகிக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:

`உதவலாம் வாருங்கள்'

சக்தி விகடன், 757, அண்ணாசாலை

சென்ன-600 002

Email: sakthi@vikatan.com