Published:Updated:

உதவலாம் வாருங்கள்

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம்.

பிரீமியம் ஸ்டோரி

அன்பார்ந்த வாசகர்களே...

உங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

உதவலாம் வாருங்கள்

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

ங்கள் பூர்விகம் சிதம்பரம் அருகிலுள்ள பரங்கிப் பேட்டை. தற்போது நாங்கள் கடலூர் ஓ.டி-யில் வசித்து வருகிறோம். எங்கள் குலதெய்வம் நொண்டி வீரன் ஆவார். உறவினர்கள் சிலர், `மதுரை வீரனே குலதெய்வம்' என்கிறார்கள். இரண்டு தெய்வங்களும் ஒன்றா. வீட்டில் மதுரை வீரன் படத்தை வைத்து வழிபடலாமா?

பரங்கிப்பேட்டையில் உள்ள அகரம் கிராமத்தில் பனை மரம் ஒன்றையே குலதெய்வமாக பாவித்து வணங்கி வந்தோம். தற்போது, அந்த பனை மரம் விழுந்து விட்டது. அந்த இடத்தில் மூன்று செங்கற்களை நட்டு வைத்து, வருடத்துக்கு ஒருமுறை பொங்கல் வைத்து வழிபடுகிறோம். இதுகுறித்து விவரம் அறிந்தவர்கள் வழிகாட்டினால் உதவியாக இருக்கும்.

குலதெய்வ துதிப்பாடல் எவரிடமேனும் இருந்தால் அதையும் பகிர்ந்து உதவுங்களேன்.

- வி.மணி, மாலுமியார்பேட்டை

எனக்கு யாகங்களின் பலன்களும் மற்றும் அவற்றில் போடப்படும் சமித்துகள் குறித்தும் விவரம் தேவை. இதுபற்றிய விளக்கங்கள் கொண்ட புத்தகம் ஏதேனும் உண்டா, எங்கு கிடைக்கும். தொலைபேசி அல்லது முகவரித் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

- டி.எஸ்.செந்தில்குமார், தருமபுரி

காசிக்கு நிகரான தமிழகத் தலங்கள் குறித்து தகவல் திரட்டி வருகிறேன். குறிப்பிட்ட தலங்கள்

பற்றிய புத்தகங்கள் இருந்தால், பகிர்ந்து உதவுங்களேன்.

- வி.கே.சுப்புலட்சுமி, அம்பாசமுத்திரம்

வீண்பயம், மன சஞ்சலம் ஆகியவற்றால் பாதிக்கப் பட்டிருக்கிறார் என் நண்பர் ஒருவர். இந்தப் பிரச்னை தீர, எந்தத் தலத்துக்குச் சென்று வழிபடவேண்டும்.

- கே.சங்கரன், விருதுநகர்

சென்னை-மயிலாப்பூரில் உள்ள சிவாலயங்களில் ஒன்று வாலீஸ்வரர் திருக்கோயில். வாலி வழிபட்ட ஆலயம் இது. இதேபோல், வாலி வழிபட்டு அருள்பெற்ற வேறு சிவத்தலங்கள் தமிழகத்தில் வேறு எங்கெல்லாம் உள்ளன. தகவல் அறிந்தவர்கள், விவரத்தைப் பகிர்ந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

- ந.குணசேகரன், நெய்வேலி.

நெல்லை-திருக்குற்றாலம் அருள்மிகு குற்றாலீஸ்வரர் திருகோயிலின் புராணத்தை சொல்லும் தலபுராணப் புத்தகங்கள் என்னென்ன. குற்றாலக் குறவஞ்சி எழுதிய திரிகூடராசப்ப கவிராயர், குற்றாலீஸ்வரர் மீது துதிநூல்கள் ஏதேனும் இயற்றி உள்ளாரா.

- கோ.இசக்கியப்பன், சென்னை-21

மகாலட்சுமிதேவிக்கு உரிய துதிப்பாடலான சூக்தத்தை தமிழில் எவரேனும் வெளியிட்டுள்ள னரா. சூக்தம் - தமிழ்ப் பாடல் தொகுப்புகள் அடங்கிய புத்தகம் எங்கே கிடைக்கும். வாசக அன்பர்கள் விவரம் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

- கோ.சங்கரி, கருங்குளம்

அறுபத்து மூவரில் ஒருவரான கண்ணப்ப நாயனார் திருக்காளத்தி தலத்தில் ஈசனருள் பெற்ற திருக்கதை நமக்குத் தெரியும். அவர் அவதரித்த தலம் - பொதப்பி எனும் ஊர் என்பார்கள். இந்த ஊர் எங்கு உள்ளது. அங்கே, கண்ணப்ப நாயனாருக்கு ஆலயம் ஏதேனும் உள்ளதா.

- இ.வேல்முருகன், சென்னை-107

உதவலாம் வாருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதவிக் கரம் நீட்டியோர்...

`நட்டாற்றீஸ்வரர் கோயில் - ஆற்றுக்கு நடுவே அமைந்த இந்தக் கோயில் குறித்த விவரம் தேவை' என்று கோவை வாசகர் எம். பழனிவேல் கேட்டிருந்தார். அவருக்கு திருப்பூர் வாசகர் சி.மணிவண்ணன் கீழ்க்காணும் விவரத்தைப் பகிர்ந்துள்ளார்:

ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி அருகில் உள்ள ஊர் காங்கயம்பாளையம். இங்குதான் காவிரியின் நடுவில் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு நட்டாற்றீஸ்வரர்.

வாதாபி, வில்வலன் ஆகிய அசுரர்களை அழித்ததால், அகத்தியரை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. அந்த தோஷம் நீங்குவதற்காக காவிரியின் நடுவில் அமைந்திருந்த நாபிக்குன்றம் என்ற இந்த ஸ்வேத மலையின் மீது ஏறி, மண்ணால் லிங்கம் அமைத்து 12 நாள்கள் தொடர்ந்து வழிபட்டு விமோசனம் அடைந்தார் அகத்தியர்.

பிற்காலத்தில், சுந்தர சோழன் இந்த தலத்தில் ஆலயம் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்தியதாகச் சரித்திரம் கூறுகிறது.

ராமேஸ்வரத்துக்கு இணையான சிறப்பு இந்தத் தலத்துக்கும் உண்டு என்கிறார்கள். இங்கு முருகப்பெருமான், தெற்கு நோக்கிய பிரமசார்யனாய் பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் அருட்கோலத்தில் அருள்வது, வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனம் என்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு வந்து அகத்திய மகரிஷி போலவே 12 நாள்கள் தொடர்ந்து நட்டாற்றீஸ்வரரை வழிபட்டால், தடைகள் யாவும் நீங்கி விரைவில் கல்யாண மாலை தோள்சேரும்.

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:

`உதவலாம் வாருங்கள்'

சக்தி விகடன், 757, அண்ணாசாலை

சென்ன-600 002

Email: sakthi@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு