சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்! | The last date for applying minority students scholarship is extended to September 30

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (04/09/2017)

கடைசி தொடர்பு:21:30 (04/09/2017)

சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் இம்மாதம் இறுதிவரை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது. 

சிறுபான்மை உதவித் தொகை

சிறுபான்மை மாணவர்களின் பள்ளிக் கல்வியை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசின் சார்பாக கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் கிறிஸ்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் ஆகிய மதங்களைச் சேர்ந்த சிறுபான்மை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் சார்பாக இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. 

2017-18-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிப் படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்புக்கான கல்வி உதவித் தொகையைப் புதிதாகப் பெறவும் ஏற்கெனவே உதவித் தொகையைப் பெறுபவர்கள் அதனைப் புதுப்பிக்கவும் கடந்த 30-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்தக் கால அவகாசத்தை நீட்டிப்புச் செய்து மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார். 

அதன்படி, 1 முதல் 10-வது வரையிலான பள்ளிப் படிப்பு மற்றும் 11 மற்றும் 12-வது பள்ளி மேற்படிப்புக்கான கல்வி உதவித் தொகைக்காகப் புதிதாக அல்லது புதுப்பிக்க வேண்டிய விண்ணப்பங்களை ஆன் லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 30-ம் தேதி வரை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறுபான்மை மாணவ மாணவிகள் கல்வி உதவித் தொகையைப் பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.