’சுற்றுலாப் பயணிகள்கிட்ட திட்டு வாங்கிதான் எங்க பொழப்பே ஓடுது!’ - கலங்கும் ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள்

விடுமுறை நாள்களில் சுற்றுலா திட்டமிடும்போது தவிர்க்க முடியாத சுற்றுலாத் தலமாக ஒகேனக்கல் திகழ்கிறது. மீன் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த இடமாகவும் இச்சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது.

hogenakkal

பரிசலில் சென்று சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இந்த பரிசல் ஓட்டும் தொழிலாளர்களின் நிலையோ மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. முதலில் இரண்டு ஷிப்ட் முறையில் இயங்கிய பரிசல் துறை, மாற்றப்பட்டு தற்போது ஒரே ஷிப்டாக இயங்குகிறது.

hogenakal
 

இந்த முறையில் பரிசல் ஓட்டுவது உங்களுக்கு சிரமம் இல்லையா என நாம் கேட்டபோது "இங்க மொத்தம் 400 பரிசல்கள் இருக்குங்க, ஆனால், ஓடுறதோ வெறும் 200 தான். மீதி இருக்குற பரிசல்கள் ஓட்ட முடிவதில்லை. லைப் ஜாக்கெட் இல்லாததே இதுக்கு காரணம். குறைந்த பட்சம் 900 லைப் ஜாக்கெட்டாவது வேணும். ஆனா எங்களுக்கு கொடுத்துள்ளதோ வெறும் 350 தான். இதனால சுற்றுலாப் பயணிகள் 1.30 மணி நேரத்துக்கு மேல காத்திருக்க வேண்டியிருக்கு. அந்த கோவத்த அவங்க எங்க மேலதான் காட்டுறாங்க. கடுமையா திட்டுறாங்க. சுற்றுலா பயணிகள்கிட்ட திட்டு வாங்கிதான் எங்க பொழப்பே ஓடுது’ என்று குமுறுகிறார் ஒரு பரிசல் ஒட்டி.

அங்கு வேலை பார்க்கும் பெண் பணியாளரிடம் பேசினோம், ’ காலைல 7 மணிலருந்து ராத்திரி 7 மணி வரைக்கும் வேலை பாக்குறோம். ஒரு நாளும் எங்களுக்கு லீவு இல்லை. எங்களுக்கு சம்பளமா 233 ரூபா தரணும் ஆனா 203 ரூபா தா தராங்க’ என்றார்.

உங்களுடைய தேவை என்ன என வயது முதிர்ந்த பரிசல்ஓட்டியிடம் கேட்டபோது ’அதிகமா தண்ணி வந்தாலோ, சுத்தமா தண்ணி வரலைன்னாலோ பாதிக்கப்படுவது என்னமோ நாங்கதாங்க. எங்களுக்கு பரம்பரை பரம்பரையா இதுதான் தொழில். எங்களுக்கு விவசாயம் பாக்க தெரியாது, கம்பெனியும் இங்க இல்ல சுத்தி காடுதான் இருக்கு, அதனால தண்ணி இல்லாத காலத்துல குறைந்தபட்ச இழப்பீடாவது அரசாங்கம் தரணும்னு கேட்டுக்குறோம். இத நம்பி தான் எங்க வீட்ல சாப்பாடு, புள்ளைங்க படிப்பு எல்லாமே, இத அரசாங்கத்துக்கிட்ட வாங்கித் தாங்கனு கேக்குறோம்’ என்கிறார்.

நம்மை மகிழ்விக்கும் பரிசல் ஓட்டிகளின் நிலைமை இப்படி இருக்கிறது. இவர்களின் கோரிக்கையை அரசாங்கம் கருத்தில் கொள்ளுமா????

Do you like the story?

Please Appreciate the Author by clapping!