நாடாளுமன்றத்தில் அம்மாவின் சிலை திறக்கப்படும்... சி.ஆர் சரஸ்வதி தடாலடி! | Jayalalithaa's portrait will be opened in parliament too says CR saraswathi

வெளியிடப்பட்ட நேரம்: 10:23 (13/02/2018)

கடைசி தொடர்பு:11:13 (13/02/2018)

நாடாளுமன்றத்தில் அம்மாவின் சிலை திறக்கப்படும்... சி.ஆர் சரஸ்வதி தடாலடி!

ஜெயலலிதாவின் உருவப்படம்

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் இன்று சட்டசபையில் திறந்துவைக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்துவைத்தார். இந்த நிலையில் பலவேறு கட்சிகள் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் திறந்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

இதுபற்றி டி.டி.வி தினகரன் அணியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி நம்மிடம் பேசியபோது, " அம்மாவின் படத்தை சட்டசபையில் திறந்து வைத்தது மகிழ்ச்சியான விஷயம். ஆனால், அம்மாவுக்கு எதிராக கோர்ட்டில் தீர்ப்பு வழங்கியபோது தனது வீட்டில் பட்டாசு வெடித்து, ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடிய ஓ.பி.எஸ் மற்றும் கூடவே இருந்து துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் அம்மாவின் படம் திறக்கப்பட்டது என்பதைத்தான் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சட்டசபையில் அம்மாவின் படம் திறந்ததை பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த விஜயதாரணி ஆகியோர் வரவேற்றுள்ளனர். இந்த இருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றபடி அம்மா படத்திறப்புக்கு எதிராக இருப்பவர்கள் எல்லாம் யார்? ஊழல் செய்யாத நல்லவர்களா? 2-ஜி வழக்கில் தி.மு.க-வுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துவிட்டால், தி.மு.க நல்ல கட்சியாகிவிடுமா? ஊழலின் மொத்த உருவமே தி.மு.க-தான். அன்று அம்மாவுடன் கூட்டணி வைக்க அலைந்தவர்கள்தான் கம்யூனிஸ்ட்கள். பதவிக்காக அடுத்தவர்களைத் தேடி வந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று அம்மா உருவப்படத் திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். பா.ம.க-வைச் சேர்ந்த அன்புமணி மேல் எவ்வளவு ஊழல் வழக்குகள் இருக்கின்றன.... இவங்க எல்லாம் அம்மாவைப் பார்த்து ஊழல்வாதின்னு சொல்றாங்க. 

சி.ஆர்.சரஸ்வதி

கோர்ட்ல அம்மாவுக்கு எதிராகத் தீர்ப்பு சொல்லியிருக்கலாம். ஆனால், அம்மா ஜெயிலுக்கு சென்று வந்தபின்பு நடந்த தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது. அப்படி என்றால் என்ன அர்த்தம். மக்கள் மனதில் அம்மா என்றுமே நல்லவர்தான். மக்களுக்கு எதிராக எந்த ஒரு செயலையும் அம்மா செய்தது கிடையாது. அதனால்தான் மக்கள் மனதில் அம்மா, 'தன்னிகரில்லாத் தலைவியாக' வாழ்ந்து வருகிறார். போயஸ் கார்டன் இல்லம் அரசியலுக்கு வந்து சம்பாதித்த சொத்து கிடையாது. அவர் சினிமாவில் கோலோச்சிய காலத்திலேயே வாங்கியது. ஆனால், இன்று பல கட்சிகள் மக்கள் பணத்தை எப்படியெல்லாம் கொள்ளை அடித்து வருகின்றன. எங்கள் அம்மாவைப் பற்றிக் குறை கூறுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? எங்கள் அம்மாவைப் பொறுத்தவரை 'அவர் ஊழல்வாதியோ, லஞ்சவாதியோ கிடையாது. மக்களுக்காக அனைத்தையும் துறந்து எளிமையாக வாழ்ந்தவர்.

இவர்களுக்கு சட்டசபையில் உருவப்படம் திறந்தது மட்டுமல்ல... நாடாளுமன்றத்தில் சிலை வைப்பதற்காகவும் போராடி வருகிறோம். விரைவில் அதுவும் நிறைவேறும். சட்டசபையில் உருவப்படம் திறந்தது எங்களுக்கு மட்டுமல்ல... அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், அ.தி.மு.க கட்சியை அழிக்க வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் படத்திறப்பு என்பதைத்தான் எங்களாலும் தமிழக மக்களாலும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்