வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (14/02/2018)

கடைசி தொடர்பு:11:49 (26/06/2018)

தம்பிதுரைக்கு பெண்ணியம் குறித்த புரிதல் இல்லை..! ஆ.ராசா அறிவுரை

மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, பெண்ணியத்தையும் பெண்ணுரிமை பற்றியும் புரிதல் இல்லாமல் பேசுகிறார். அவர், பெரியார் பற்றி எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறினார்.

பேருந்துக் கட்டண உயர்வை முழுவதுமாக ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தி.மு.க-வும் அதன் தோழமைக் கட்சிகளும் தமிழக மாவட்டத் தலைநகரங்களில் நேற்று கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தின. அந்த வகையில், நேற்று இரவு  புதுக்கோட்டையில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஆ.ராசா வந்திருந்தார். கூட்டத்துக்குச் செல்வதற்கு முன், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய ஆ.ராஜா, 'ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறந்ததை எதிர்ப்பவர்கள், ஆணாதிக்க எண்ணம் கொண்டவர்கள். பெண் விடுதலைக்கு எதிரானவர்கள் என்று தம்பிதுரை கூறியுள்ளது, பெண்ணியம்குறித்த புரிதல் அவருக்கு இல்லை என்பதைக் காட்டுகிறது. பெண் என்பதால் என்ன குற்றம் செய்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டுமா?

அதை எதிர்ப்பவர்களைப் பெண் இனத்துக்கு எதிரானவர்கள் என்று கூறுவதா? பெண்ணியத்தையும் பெண்ணுரிமை பற்றியும் புரிதல் இல்லாமல் தம்பிதுரை பேசியுள்ளார். அவர், முதலில் பெரியார் கூறியதையும் அவர் எழுதிய புத்தகங்களையும் படிக்க வேண்டும்.
முரசொலி மாறன், வளரும் நாடுகளுக்காகப் பாடுபட்டு, தோகா மாநாட்டில் தோகா ஒப்பந்ததைப் பெற்றார். இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். அவரையும் ஜெயலலிதாவையும் ஒரே தட்டில் வைத்து ஒப்பிடக் கூடாது. 

2ஜி வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் மன்மோகன் சிங் மீது நான் குற்றச்சாட்டுகளைக் கூறவில்லை. மன்மோகன்சிங் அமைதியாக இருந்தார்  என்றுதான் கூறினேன். பேசவேண்டிய நேரத்தில் அவர்கள் பேசியிருந்தால், சில விஷயங்களைச் செய்யவேண்டிய நேரத்தில் செய்திருந்தால், 2 ஜி என்ற இந்த வழக்கே வந்திருக்காது. ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது தி.மு.க-வுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது' என்று கூறினார்.

பிறகு, திலகர் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தி.மு.க ஆட்சி செய்த காலத்தில், பேருந்துக் கட்டணம் உயர்த்தாமல் ஆட்சி செய்ததையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்றியதையும் விளக்கிப் பேசினார். பிறகு, சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பு விவகாரத்துக்குத் தாவினார். "இந்தப் பொதுக்கூட்டம் வாயிலாக ஒரு விசயத்தைப் பதிவுசெய்கிறேன். தமிழ்நாட்டை கொள்ளை அடித்தவர் ஜெயலலிதா.

அவர் படத்தை சட்டசபையில் திறந்திருப்பது வெட்கக்கேடு. ஒன்று, ஜெயலலிதா படத்தை நீக்குங்கள். அல்லது, அங்கிருக்கும் மற்ற தலைவர்களின் படத்தை நீக்குங்கள். சட்டமன்றத்தின் மாண்பைக்  குலைக்காதீர்கள்.  மத்தியில் ஆளும் பா.ஜ.க., மதச்சார்பற்ற இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. சிறுபான்மை சமூகத்தினரை இதுதான் சாப்பிட வேண்டும். இது சாப்பிடக் கூடாது என்று தனி விருப்பத்தில் தலையிட இவர்கள் யார்? மாட்டுக்கறிக்கு தடை விதிக்கிறார்கள். கேட்டால், பசு எங்கள் தெய்வம் என்கிறார்கள். நான் கேட்கிறேன், பாம்பையும்தானே தெய்வமாக வழிபடுகிறீர்கள்.

மும்பையில் பாம்புக் கறி விற்கப்படுகிறதே. அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? ஒருமுறை நான் மும்பை சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் சாப்பிடச்சென்றோம். அங்கு, விதவிதமான பாம்புகளை காரசாரமான மசாலாக்கள் கலந்து வைத்திருந்தார்கள். என்னுடன் வந்திருந்தவர்கள் சாப்பிடப் பயந்தார்கள். நான் வெரைட்டியாக பாம்புகறி வாங்கி சாப்பிட்டேன்' என்று ராசா கூறியபோது, மேடையில் உள்ளவர்களும் கூட்டத்தில் உள்ளவர்களும் ரசித்துச் சிரித்தார்கள்.