வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (24/02/2018)

கடைசி தொடர்பு:16:00 (24/02/2018)

`வெளிநாடுகளில் ஏற்கெனெவே மருத்துவம் படித்து வருபவர்களுக்கு நீட் கட்டாயமில்லை’ - மத்திய அரசு விளக்கம்

வெளிநாட்டில் இளநிலை மருத்துவப் படிப்பைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்கள், வரும் மே 2018 முதல் `நீட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேநேரம், வெளிநாடுகளில் ஏற்கெனெவே மருத்துவம் படித்து வருபவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீட்

இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற பட்டப்படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்கள் ‘நீட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அன்று மருத்துவக் கவுன்சில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், வெளிநாட்டில் இளநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை, மருத்துவப் படிப்பை வெளிநாட்டில் தொடர்ந்து வரும் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பைத் தொடர இருக்கும் மாணவர்களுக்குப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தக் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த 22-ம் தேதி விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

அதில், `வெளிநாட்டில் இளநிலை மருத்துவப் படிப்பைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்கள், வரும் மே முதல் முதல் நீட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். ஆனால், தற்போது வெளிநாடுகளில் இளநிலை மருத்துவம் படித்து வரும் மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதத் தேவையில்லை. அதேபோல், வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு படித்த மாணவர்கள், இந்தியாவில் உயர் படிப்பை தொடரவும் மருத்துவத் துறையில் பணி புரியவும் இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் ‘ஸ்கிரீனிங் டெஸ்ட்’ எனும் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்தத் தேர்வு நடைமுறையில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.