இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் பிரசாரத்தில் சோனியா காந்தி..! சூடுபிடிக்கும் கர்நாடகத் தேர்தல்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக வாரணாசியில் கடைசியாகப் பிரசாரம் செய்த சோனியா காந்தி, கர்நாடகத் தேர்தலுக்காக இன்று மீண்டும் பிரசாரம் செய்கிறார். 

சோனியா காந்தி

கர்நாடக சட்டசபைத் தேர்தல்  வருகிற 12-ம் தேதி நடக்கிறது. 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகக் கர்நாடகத் தேர்தல் இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். எனவே, காங்கிரஸைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோர் அங்குத் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். பா.ஜ.க, காங்கிரஸ் என இரு தரப்பிலும் கடுமையான போட்டி நிலவுகிறது. 

இந்த நிலையில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைத் தொடர்ந்து அமைக்க வேண்டும் என்று மோடிக்கு எதிராகத் தேர்தல் பிரசாரக் களத்தில் இறங்கியிருக்கிறார் சோனியா காந்தி. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் 2016-ல் பிரசாரம் செய்தபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 

முன்னதாக, உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த ஆண்டு பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலின்போதும் இந்த ஆண்டு நடைபெற்ற திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் தேர்தலின்போதும் சோனியா பிரசாரம் எதுவும் செய்யாமல் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட சோனியா முடிவு செய்துள்ளார். எனவே, பிஜாப்பூரில் உள்ள சரவாடா கிராமத்தில் இன்று நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் சோனியா பங்கேற்று உரையாற்றுகிறார். சோனியா பிரசாரம் செய்யும் அதே பிஜாப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!