``ரஜினி தனியாகத்தான் தேர்தலைச் சந்திப்பார்!'' - `கராத்தே’தியாகராஜன்

ரஜினி  - கராத்தே தியாகராஜன்  சந்திப்பு

டிகர் ரஜினிகாந்தை தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் சந்தித்துப் பேசியுள்ளார். இருவருக்கும் இடையேயான இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்துமுடிந்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், ``நட்பு ரீதியிலான சந்திப்பு  இது " என்று கூறியுள்ளார். ஆனால், உண்மையில் இந்தச் சந்திப்பில் தற்போதைய தமிழக அரசியல் சூழல் மற்றும் தலைவர்களின் மனநிலை குறித்து இருவரும் விரிவாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக கராத்தே தியாகராஜனைத் தொடர்பு கொண்டு சில கேள்விகளை முன் வைத்தோம்.

``நடிகர் ரஜினிகாந்தைத் திடீரென சந்தித்துப் பேசியுள்ளீர்கள். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் இந்தச் சந்திப்பு நடந்துள்ளதே...?'' 

``கல்லூரி நாள்களிலிருந்தே ரஜினியின் நட்பில் இருக்கிறேன். 1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், ரஜினியின் ஆதரவைப் பெறுவதற்காகப் பலமுறை அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அந்தச் சமயத்தில், ஒருபக்கம் ரஜினியிடம் பேசிக் கொண்டிருந்தபோதே தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினையும் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அப்படி உருவானதுதான் 1996 தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி. பெரும்பாலான நேரங்களில் அரசியல் நிலவரம் குறித்து ரஜினி என்னிடம் விவாதிப்பார். நானும் எனக்குத் தெரிந்ததைக் கூறுவேன். அப்படியான நிலையில் உருவான நட்பின் அடிப்படையில்தான் தற்போதைய சந்திப்பும் நடந்துள்ளது."    

 ``ரஜினியின் அரசியல் நடவடிக்கையில் ஸ்திரத்தன்மை இல்லை என்று சொல்லப்படுகிறதே... அது குறித்து?"

``தமிழக அரசியல் களத்தை உன்னிப்பாகக் கவனித்திருந்தால் இதனை நன்கு அறிந்துகொள்ள முடியும். ரஜினி பலமுறை தன்னுடைய கருத்தை மிக ஆணித்தரமாகக் கூறியுள்ளார். நேற்று அரசியலுக்கு வந்துவிட்டு பணபலத்தைப் பயன்படுத்தி பதவியைப் பிடித்தவர் டி.டி.வி தினகரன். அப்படிப்பட்டவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது ரஜினி வருவதில் தவறு ஒன்றும் இல்லை. 

குறிப்பாக இரும்புப் பெண்மணி என்று சொல்லப்பட்ட ஜெயலலிதாவே ரஜினியின் ஆதரவை எதிர்பார்த்தவர்தான். மேலும் தி.மு.க  தலைவர் கருணாநிதியும் ரஜினியை அரசியலுக்கு வருமாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக ஜெயா டிவி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில், பங்கேற்ற ரஜினி ,ஜெயலலிதாவின் அருகிலேயே தி.மு.க தலைவர் கருணாநிதியைப் பாராட்டிப் பேசினார். 

அது மட்டுமன்றி அண்மையில், மிக வலிமையாக `இந்த சிஸ்டம் சரியில்லை' என்று மிக போல்டாக  தனது கருத்தைப் பதிவு செய்தார். அவருடைய அரசியல் ஸ்திரத்தன்மைக்கு மேலும் பலவற்றைச் சொல்லிக்கொண்டேபோகலாம்"

ரஜினிகாந்த் 

``ரஜினிக்குப் பின்னால் பி.ஜே.பி இருப்பதாகச் சொல்லப்படுகிறதே. குறிப்பாக ஆடிட்டர் குருமூர்த்தி ரஜினிக்கு நெருக்கமாக  இருப்பதாகவும் சொல்லப்படுகிறதே?"

``ரஜினிக்கு பி.ஜே.பி-யின் ஆதரவு இருப்பதாகச் சொல்வது முற்றிலும் தவறான கருத்து. ஆடிட்டர் குருமூர்த்தி ரஜினிக்கு 30 வருடமாக நெருக்கமானவர். அதேபோன்று சிதம்பரமும் அவருடைய நட்பில் இருக்கக்கூடியவர். பல தலைவர்கள் அரசியல் மாச்சர்யங்களைக் கடந்து அவருடன் நட்பில் இருக்கிறார்கள். அதையெல்லாம் வைத்து அவரை பி.ஜே.பி-க்கு ஆதரவானவர் என்று கூறுவது தவறான கருத்து. அவர் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கமாட்டார். தனியாக மட்டுமே தேர்தலைச் சந்திப்பார் என்பது என்னுடைய கருத்து."      

``அரசியல் களத்துக்கு வந்துள்ளார்... ஆனால், மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசவேத் தயங்குகிறாரே? குறிப்பாக மத்தியில் உள்ள பி.ஜே.பி-யை எதிர்ப்பதில் அதிகம் தயக்கம் காட்டுகிறாரே?" 

``அப்படிச் சொல்லிவிட முடியாது. நியாமான விஷயங்களுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், அவர் முழுமையாக அரசியல் களத்துக்கு இன்னும் வரவில்லை. இருப்பினும் மக்கள் பிரச்னைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். குறிப்பாக நீட் தேர்வு மையங்களை வெளி மாநிலங்களில் அமைத்தது தவறு எனத் தனது குமுறலை வெளிப்படுத்தினார். அதனால் நியாயமான விஷயத்துக்கு ஆதரவாக அவருடைய வாய்ஸ் எப்போதும் இருக்கும்."

``அவரது அடுத்தகட்ட மூவ் குறித்து ஏதேனும் பேசினாரா?"

``அரசியல் தலைவர்கள் சிலரைச் சந்திப்பார் என்பது என்னுடைய கணிப்பு. கூட்டணிக்காக அல்ல. மரியாதை நிமித்தமாக இது இருக்கலாம். இது தொடர்பாக அவர் எதுவும் என்னிடம் கூறவில்லை."

Do you like the story?

Please Appreciate the Author by clapping!