Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``நாங்ககூடதான் டேபிள் டென்னிஸ் ஆடுவோம்னு ஏளனமா சொல்வாங்க!’’ - காமன்வெல்த் சாம்பியன் சத்யன்

ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மூன்று  பதக்கங்களுடன் திரும்பியிருக்கிறார் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன். கலந்துகொண்ட நான்கு பிரிவுகளில் மூன்று பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கிறார் இந்த 25 வயது இளைஞர். இந்த வெற்றிகள் ஒன்றும் ஆச்சர்யம் கிடையாது. ஏனெனில், சத்யன் ஆஸ்திரேலியாவுக்குப் பயணப்படும் முன்னரே பல பதக்கங்கள் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், அவர்தான் இந்தியாவின் நம்பர் 1 டேபிள் டென்னிஸ் பிளேயர். காமன்வெல்த் ஆண்கள் குழுப் பிரிவில் நைஜீரியாவை வீழ்த்திய இந்திய அணியின் ஸ்டார் பிளேயர் சத்யன். ஒற்றையர் பிரிவின் கால் இறுதியில் சறுக்கியவர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் பட்டையைக் கிளப்பி வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தினார். இந்த வயதில் `இந்தியாவின் நம்பர் 1' வீரர் அந்தஸ்து, மூன்று காமன்வெல்த் பதக்கங்கள் எனப் பயணிக்கும் சத்யனின் உழைப்பு அசாத்தியமானது!

சத்யன்

கடந்த நவம்பர் மாதம் நடந்த மிகப்பெரிய டேபிள் டென்னிஸ் தொடரான ஸ்பேனிஷ் ஓப்பனை வென்றார் சத்யன். சர்வதேச ப்ரோ தொடர்களை வெல்வது என்பது எளிதல்ல. அதுவும், ஐபிஎல் போல் டேபிள் டென்னிஸுக்கு லீக் நடத்தும் ஐரோப்பாவில், ப்ரோ தொடரை வெல்வது அபூர்வம். அதை அநாயாசமாகச் செய்துமுடித்தார் சத்யன். ஆனால், அந்த வெற்றி பெரிய ஆச்சர்யமாகப் பார்க்கப்படவில்லை. ஏனெனில், தன் பெல்ஜியம் ஓப்பன் வெற்றியின் மூலம் ஓராண்டுக்கு முன்னரே அனைவரின் புருவங்களையும் உயர்த்தியவர். அந்த டேபிளின் முன் எப்படியான அதிர்ச்சிகளைத் தன்னால் ஏற்படுத்த முடியும் என்பதை உணர்த்தியவர். 

8 வயதில் தமிழக `அண்டர் 12' அணிக்கு விளையாடத் தொடங்கிய சத்யன், 12 வயதில் இந்தியாவுக்காகக் களம் கண்டுவிட்டார். 2008 இளைஞர் காமன்வெல்த் போட்டியில் தங்கம், 2010 ஜூனியர் ஆசிய விளையாட்டில் வெண்கலம் என தன் ஆரம்ப காலத்திலேயே சர்வதேச அளவில் பல வெற்றிகளைக் குவித்தார். இவரது திறமையைக் கண்ட பயிற்சியாளர்கள், ஜூனியர் காலகட்டத்திலேயே சீனியர் பிரிவில் விளையாடச் செய்தனர். சத்யன் மீது அவ்வளவு நம்பிக்கை. 

12-ம் வகுப்பு முடிக்கும் வரை எல்லாம் நல்லபடியாகவே இருந்தன. அதன் பிறகு ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்படும் பயம் சத்யனின் பெற்றோருக்கும் ஏற்பட, பொறியியல் படிப்பில் சேர்க்கப்பட்டார். 4:30 மணிக்கு எழுந்து ஒரு மணி நேரம் ஃபிட்னஸ் பயிற்சி. 6 மணிக்கு கல்லூரிப் பேருந்தில் பயணம். மீண்டும் மாலை 4:30 மணியிலிருந்து 8 மணி வரை பயிற்சி என அவரின் பயிற்சி நேரமும் முறையும் மாறின. இவற்றுக்கு மத்தியில் வெறும் ஐந்து மணி நேரம் மட்டுமே தூக்கம். ஒரு விளையாட்டு வீரனுக்குப் பயிற்சி, ஃபிட்னஸ் ஆகியவற்றைவிட, தூக்கமும் ஓய்வும் மிக முக்கியம். சத்யன் அவற்றை மிஸ்செய்தார். இருப்பினும், அவை தன் ஆட்டத்தைப் பாதிக்காமல் பார்த்துக்கொண்டார். 

சத்யன்

ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் 10 சர்வதேச தொடர்களிலாவது விளையாடினார். 2013-ம் ஆண்டு நடந்த பிரேசில் ஓப்பன் தொடரில் 21 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். போட்டிகளில் பங்கேற்றதால் செமஸ்டர் பரீட்சைகளைத் தவறவிட்டார். அதையும்கூட எந்தக் கஷ்டமும் இல்லாமல் எளிதில் க்ளியர் செய்தார். இப்படி தன்னுடைய பிரச்னைகள் எதையும் பெரிதுபடுத்திப் பார்க்காமல், தடைகளை எளிதில் உடைத்தெறிந்தார். ஆனால், அடுத்து விழுந்தது பெரிய அடி.

2015-ம் ஆண்டு நவம்பரில் கெளஹாத்தியில் நடந்த தேசிய அளவிலான போட்டிக்கு விளையாடச் சென்றிருந்தார் சத்யன். அந்தத் தொடருக்குப் பிறகு அறிவிக்கப்படும் தேசிய தரவரிசையில், முதல் நான்கு இடங்களுக்குள் இருப்பவர்கள் ரியோ ஒலிம்பிக் தொடரின் தகுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள். அப்போது நல்ல ஃபார்மில் இருந்த சத்யன், அந்தத் தொடரில் பங்கேற்றிருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், அவரின் தந்தை உடல்நலக் குறைவால் காலமாக, சென்னை திரும்பிவிட்டார் சத்யன். ஒலிம்பிக் வாய்ப்பு தவறியது. 

இந்த இடத்திலும் அவர் மனதளவில் சறுக்கிவிடவில்லை. பயிற்சியைக் கடுமையாக்கினார். தன் ஆட்ட நுணுக்கங்களைச் சரிசெய்தார். அதுவரை ரிஸ்க் இல்லாத `சேஃப் கேம்' ஆடிக்கொண்டிருந்தவர், தன் கேம் ப்ளானை மாற்றினார். சர்வீஸ்களை ரிசீவ் செய்வதில் அதிகம் கவனம் செலுத்தினார். தன் வேகத்தை பன்மடங்கு கூட்டினார். ஒவ்வொரு தொடரிலும் எதிராளிகளுக்கு ஏற்ப ரிஸ்க் எடுக்கத் தொடங்கினார். 

சத்யன்

முதலில் தன்னைவிட தரவரிசையில் பின்தங்கி இருந்த வீரர்களுக்கு எதிராக, அடுத்து தனக்குச் சமமான வீரர்களுக்கு எதிராக, அதன் பிறகு தன்னைவிட பெரிய வீரர்களுக்கு எதிராக தன் புதிய ஆட்ட முறையைப் பண்படுத்தினார். `இதுதான் சத்யன்' என நினைத்து, இவரை எதிர்த்து விளையாடியவர்களுக்கு ஆச்சர்யம், அதிர்ச்சி! 2016-ம் ஆண்டு பெல்ஜியம் ஓப்பனில் அனைவரையும் `அதிர்ச்சி' மோடிலேயே வைத்திருந்தார். `பெல்ஜியம் ஓப்பன் பட்டத்தை வென்ற அண்டர்டாக்' என்று ஊடகங்கள் பாராட்டின. சரத் கமல் எகிப்து ஓப்பனை வென்ற பிறகு, ப்ரோ தொடரை வெல்லும் இரண்டாவது இந்தியன்; அதுவும் ஒரு தமிழன்!

அந்த வெற்றியின்மூலம் டாப் 150-க்குள் நுழைந்தார் சத்யன். 2017, ஜூலை மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியில் 36-ம் நிலையில் இருக்கும் வீரர் சென் சி நான், சத்யனிடம் வீழ்ந்தார். தரவரிசையில் ஜெட் வேகத்தில் உயர்ந்துகொண்டிருந்தார் சத்யன். அடுத்து ஸ்பேனிஷ் ஓப்பன் தொடரைக் கைப்பற்ற, இரண்டு ப்ரோ தொடர்களை வென்ற முதல் இந்தியன் என்ற பெருமை பெற்றார். டிசம்பர் மாதம் தரவரிசைப் பட்டியல் வெளியானபோது சத்யன் பெற்றிருந்த ரேங்க் - 49. தான் பார்த்துப் பார்த்து வளர்ந்த சரத் கமல் பெயருக்கு முன்னால் இவரது பெயர். சத்யன், இந்தியாவின் நம்பர் 1 டேபிள் டென்னிஸ் வீரர். அதே சரத் கமலோடு இணைந்து காமன்வெல்த் வெள்ளி. கனவுகள் நினைவான தருணம் சத்யனின் கண்களிலிருந்து இன்னும் அகலவில்லை. 

இந்த முன்னேற்றம் அவருக்கு சிறு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ஆனால், அவர் திருப்திப்பட்டுக்கொள்ளவில்லை. உலக அளவில் டாப் - 20 ரேங்குகளுக்குள் வரவேண்டும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டும், அன்று மிஸ்செய்த ஒலிம்பிக் அரங்கில் கால் பதிக்கவேண்டும் என இரு மடங்கு உழைப்பைக் கொட்ட தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். ``எனக்குத் தெரிஞ்சவங்க நிறைய பேர் `என்ன பண்ணிட்டு இருக்க?'னு கேட்டுட்டு, டேபிள் டென்னிஸ்னு சொன்னதும், `நாங்ககூடதான் விளையாடுவோம்'னு ஏளனமா சொல்வாங்க. இந்த ஸ்போர்ட்ல சாதிக்க முடியாதுனு நினைச்சாங்க. ஆனா, `என்னால எந்த அளவுக்கு சாதிக்க முடியும்னு அவங்க முன்னாடி நிரூபிக்கணும்' என்று ஒரு மாதம் முன்பு சொல்லியிருந்தார் சத்யன். இதோ அவரது மூன்று பதக்கங்கள் அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டன. 

sathyan

ஜெர்மன் லீகில்!

ஐரோப்பிய நாடுகளில், ஐபிஎல் போல் டேபிள் டென்னிஸ் லீக் போட்டிகளும் நடக்கும். அதில் ஜெர்மனியின் புண்டஸ்லிகா மிகவும் பிரசித்திபெற்றது. சைனீஸ் சூப்பர் லீக்குக்கு அடுத்து அதுதான் உலகிலேயே மிகப்பெரிய தொடர். அந்தத் தொடரில் விளையாடும் ASV Grunwettersbach அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார் சத்யன். இந்தத் தொடரில் விளையாடுவது அவரது விளையாட்டு வாழ்க்கையின் மிக முக்கிய மைல்கல். இதற்கு முன் அவர் போலந்தின் Bydgoszcz க்ளப்புக்காக விளையாடிவந்தார்.

பயிற்சியாளர் ராமன்

சத்யனின் பயிற்சியாளர் எஸ்.ராமன், இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்; காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். 1998-ம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. சேத்துப்பட்டில் உள்ள தன் வீட்டு மாடியிலேயே அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ராமன், `அதிநவீன டேபிள் டென்னிஸ் சென்டர்' தொடங்கி அனைத்து வயதினருக்கும் பயிற்சியளிக்கிறார். உள்ளூர் வீரர்கள் மட்டுமல்லாது, ஹைதராபாத்திலிருந்துகூட பல வீரர்கள் இவரிடம் பயிற்சி பெறுகின்றனர். ``சத்யனுக்கு காமன்வெல்த் பதக்கம் இப்பவே நிச்சயம் ஆகிடுச்சு. தங்கம் வாங்க கடுமையா உழைக்கிறார். வாங்கிடுவார்" என்று நம்பிக்கை தருகிறார் ராமன். 

sathyan

பார்ட்னர் சரத் கமல் 

பொதுவாகவே டாப் பொசிஷனுக்குப் போட்டிபோடும் வீரர்களிடையே ஈகோ மோதல் இருக்கும். ஆனால், சரத் கமல்-சத்யன் இருவரும் மிகச் சிறந்த நண்பர்கள். சரத் கமல் பற்றிப் பேசும்போது அவ்வளவு எமோஷனலாகப் பேசுகிறார் சத்யன். ``என்னோட ஃபேவரிட் பிளேயர் அவர். அவர்கூட விளையாடுவது கனவு மாதிரி இருக்கு. எனக்கு எல்லாவிதங்களிலும் அவர் உதவியா இருப்பார். ஜெர்மன் லீக்ல நான் ஆடுறதுக்குக்கூட அவர்தான் முக்கியக் காரணம். இன்னிக்கு நாங்கலாம் சரியான வசதிகளோடு பயிற்சி செய்றோம். ஆனா, அவர் அதெல்லாம் இல்லாமயே சாதிச்சவர்" என்று சிலாகிக்கிறார்.

இவர்கள் இருவருக்குமிடையிலான நட்பும் புரிதலும்தான், காமன்வெல்த் தொடரில் வெள்ளிப்பதக்கம் கிடைக்கக் காரணமாக அமைந்தன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement