Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஹானேவின் தவறுகள்... குல்தீப் மேஜிக்... கொல்கத்தா வென்ற கதை! #KKRvRR

6 4 4 4 4 6 4 4 6 4 - இது பிரஷித் கிருஷ்ணா வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் இருந்து ஷிவம் மவி வீசிய மூன்றாவது ஓவரின் கடைசி பந்து வரை திரிபாதி, பட்லர் இருவரும் இணைந்து அடித்த ரன்கள். இப்படி அடித்தும் ராஜஸ்தான் ஏன் தோற்றது? ரஹானே ஏன் முதல் ஓவரை கௌதமுக்கு கொடுத்தார்? ரஹானே ஏன் பட்லருக்கு ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை? ரஹானே ஏன் கூக்ளியில் ரிவர்ஸ் ஸ்வீப் முயற்சித்தார்? ராஜஸ்தான் தோல்விக்கு அணியின் கேப்டன்தான் காரணமா? கன்சிஸ்டன்ட் பட்லரை குல்தீப் சொல்லி வைத்து தூக்கியது எப்படி?! #KKRvRR மேட்ச் ரிப்போர்ட்... 

 #KKRvRR

சைனாமேன் குல்தீப் ராக்ஸ்... கொல்கத்தா ராஜஸ்தானை தோற்கடித்த மொமன்ட்ஸ்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் இரு அணிகளும் 12 புள்ளிகளுடன் இருந்ததால், எப்படியும் இந்தப் போட்டியில் வென்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தன. கொல்கத்தா அணியில் பியூஸ் சாவ்லாவுக்குப் பதிலாக ஷிவம் மவி வாய்ப்புப் பெற்றார். ராஜஸ்தான் அணியில் ராகுல் திரிபாதி, சோதி, அனுரீத் சிங் பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். ஈடன் கார்டனில் டாஸ் வென்ற கொல்கத்தா, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

ஷிவம் மவி வீசிய முதல் பந்திலேயே திரிபாதியை பெவிலியனுக்கு அனுப்பியிருக்கலாம். ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் இருந்த நித்திஷ் ராணா, எளிதான கேட்ச்சை தவறவிட்டார். ஆனாலும், மவியின் பெளன்ஸருடன் கூடிய இன் ஸ்விங் பந்துகளை பேட்டில் வாங்கவே தடுமாறினர் திரிபாதி. This is wounderful pace to watch என்று சொல்லி முடிப்பதற்குள், அடுத்த ஓவரில் பிரஷித் கிருஷ்ணா தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு (19) ரன்களை  விட்டுக்கொடுத்தார். தடுமாறிக்கொண்டிருந்த திரிபாதி நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தார்.

 #KKRvRR

ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு லைன் அண்ட் லென்த் எவ்வளவு முக்கியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக தன் முதல் ஓவரை வீசிய மவி, ஒரு வேகப்பந்துவீச்சாளர் எப்படி பந்துவீசக் கூடாது என்பதற்கு உதாரணமாக தன் இரண்டாவது ஓவரை வீசினார். முதல் இரு பந்துகளில் பவுண்டரிகள் செல்வதைப் பார்த்ததுமே, காலில் சுடு தண்ணீரை ஊற்றியதுபோல விக்கெட் கீப்பிங்கில் இருந்து ஓடி வந்து மவியிடம் ஏதோ பேசினார் தினேஷ் கார்த்திக். `நீங்க என்ன வேணாலும் பிளான் பண்ணுங்க. என்னைத் தடுக்க முடியாது’ என தெளிவாக இருந்த ஜாஸ் பட்லர், ஸ்வீப், கட், ஸ்கூப், டிரைவ், லாஃப்ட் என சகலவிதங்களிலும் 4,6 என வெரைட்டியில் மிரட்டி, டீரீம் லெவன், ஃபேன்டஸி லீக் ரசிகர்களின் நெஞ்சில் பால் வார்த்தார். அந்த ஓவரில் 28 ரன்கள். Most expensive over of IPL 2018.

`இது சரிப்பட்டு வராது’ என சுனில் நரைன் கையில் பந்தைக் கொடுத்தார். அவருடன் அடுத்த எண்டில் இருந்து பந்துவீச ரஸெலை டிக் செய்தார் டிகே. நரைன்- ரஸெல் ஜோடி பட்லர் – திரிபாதி ஜோடியின் வேகத்துக்கு ஸ்பீட்பிரேக் போட்டது. மீண்டும் ஒருமுறை ஷார்ட் பால் டெக்னிக் வொர்க் அவுட்டானது. ஷார்ட் பாலை புல் ஷாட் அடிக்கிறேன் என அவசரப்பட, பந்து திரிபாதியின் கிளவுஸில் பட்டு தினேஷ் கார்த்திக்கின் கிளவுஸில் சிக்கியது. திரிபாதி 27 ரன்களில் அவுட். பவர்பிளே முடிவில் ஸ்கோர் 68/1.

 #KKRvRR

சைனாமேன் குல்தீப் ராக்ஸ்... கொல்கத்தா ராஜஸ்தானை தோற்கடித்த மொமன்ட்ஸ்!

டி-20-யை ஒன்டே போல ஆடும் ரஹானே மிடிலில் இருக்கும் வரைக்கும்தான் ரன்ரேட் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது ஏனோ, கொல்கத்தா பெளலர்களுக்குப் புரியவில்லை. ரிவர்ஸ் ஸ்வீப்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்பது ரஹானேவுக்கும் புரியவில்லை. அதுவும் லெக் ஸ்டம்ப் லைனில் விழுந்த கூக்ளியை பாயின்ட் திசை நோக்கி ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய நினைத்ததெல்லாம் கொடூரம். இந்த பாதகச் செயலுக்கு விலையாக, ஸ்டம்ப்களைப் பறிகொடுத்தார் ரஹானே (11 ரன்கள்). குல்தீப் சுழலில் ரஹானே அவுட்டானதும், ராஜஸ்தான் ரசிகர்களே சந்தோஷப்பட்டனர். கேப்டன் செய்த அதே தவறைச் செய்தார் பட்லர். அவரும் ரிவர்ஸ் ஸ்வீப் முயற்சித்தார். பந்து அவர் எதிர்பார்த்ததைவிட கொஞ்சம் பெளன்ஸாக, அது ஷார்ட் தேர்ட்மேன் ஏரியாவில் இருந்த சியர்லஸ் கைகளில் சிக்கியது. 39 ரன்களில் ஆட்டமிழந்து, தொடர்ந்து ஆறு அரைசதம் அடித்தவர் என்ற சாதனை படைக்கும் வாய்ப்பை மிஸ் செய்தார் பட்லர். பெரிதும் நம்பிய சஞ்சு சாம்சனை எல்பிடபுள்யு முறையில் வெளியேற்றினார் சுனில் நரைன். அதுவும் விடாப்பிடியாக ரிவ்யூ கேட்டு…!

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே குல்தீப்பின் வேரியேஷன்களில் திணறும்போது, ஆல் ரவுண்டர்(!) ஸ்டூவர்ட் பின்னிதான் என்ன செய்வார் பாவம். எப்படி அடிக்கலாம் என்பதற்குப் பதிலாக, எப்படி அவுட்டாகலாம் என யோசித்துக் கொண்டிருந்தவருக்கு தோதான இடத்தில் ஒரு பந்தை வீசினார் குல்தீப். Wrong turn. இறங்கி அடிக்கிறேன் என பின்னி டவுன் தி லைன் வர, தோனி வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார் டிகே. தன் கடைசி ஓவரில் around the wicket-ல் இருந்து வீசி பென் ஸ்டோக்ஸை caught and bold செய்தார் அந்த சைனாமேன். Kuldeep Strikes again. 4-0-20-4. இது ஐ.பி.எல் போட்டிகளில் அவரது கரியர் பெஸ்ட்.  மற்ற விக்கெட்டுகளைவிட பட்லருக்கு எதிராக அவர் தனியாக பிளான் வைத்திருந்ததுதான் பாராட்டுக்குரிய விஷயம். ``பலனளிக்கிறதோ இல்லையோ டி-20 போட்டிகளில் ஒவ்வொரு பந்துக்கும் ஒரு திட்டம் வைத்திருக்க வேண்டும். வேரியேஷன்களை மாற்ற வேண்டும். எப்படியும் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் அடிப்பார் எனத் தெரியும். அதற்கேற்ப வேரியேஷன்களை மாற்றினேன். அவ்வளவுதான்!’’ என்றார் ஆட்ட நாயகன் விருது வென்றபின் குல்தீப். 

Kuldeep strikes for KKR

டெத் ஓவர்களில் ரன்ரேட் திகிடுமுகிடாக எகிறுவதே டி-20-யின் பியூட்டி. ஆனால், டெயிலெண்டர்கள் களத்தில் இருக்கும்போது, ரன்ரேட் எப்படி எகிறும்? ஜெயதேவ் உனத்கட் மட்டும் ரூ.11.5 கோடிக்கு நியாயம் சேர்க்கும் வகையில் 18 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார். 800 மீட்டர் ஓட்டத்தில் முதல் ஒரு ரவுண்டை மட்டும் அசுர வேகத்தில் சுற்றிவிட்டு, அடுத்தடுத்த ரவுண்டில் அன்னநடை போட்டால் என்ன ரிசல்ட் கிடைக்குமோ, அதே ரிசல்ட்தான் ராஜஸ்தான் இன்னிங்ஸிலும் கிடைத்தது. விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்த அணி, அடுத்த 15 ஓவர்களில் 83 ரன்களை எடுப்பதற்குள் எல்லா விக்கெட்களையும் இழந்துவிட்டது. கொல்கத்தாவுக்கு ராஜஸ்தான் நிர்ணயித்த இலக்கு 143.

காட்டடி பேட்ஸ்மேன்கள் நிறைந்த அணிக்கு 120 பந்துகளில் 143 ரன்கள் இலக்கு என்பது ஒரு விஷயமே அல்ல. முடிந்தவரை நல்ல ரன்ரேட்டில் ஜெயிக்க வேண்டும் என்பதே கொல்கத்தாவின் அஜெண்டா. `அடிச்சவரை லாபம். எதைப் பத்தியும் கவலைப்படாம சுத்து’ என சுனில் நரைனிடம் சொல்லி அனுப்பி இருப்பார்கள் போல. கொல்கத்தா தரப்பில் குல்தீப் சுழல் ஜாலம் நிகழ்த்தியதால், முதல் ஓவரை வீச வந்தார் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கெளதம். பல போட்டிகளில் அவர் முதல் ஓவரை வீசியிருக்கிறார்தான். ஆனால், அவரிடம் பெரிதாக டெக்னிக் இல்லை. தவிர, ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசப்படும் ஆஃப் ஸ்பின்னை சுனில் நரைன் அலேக்காக தூக்கி அடிப்பார் என்பதை ஏனோ ரஹானே கணிக்கத் தவறிவிட்டார். கௌதமுக்குப் பதில் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸை விட்டு ஆட்டம் காட்டியிருக்கலாம். இரண்டாவது ஓவரிலேயே சுனில் அவுட்டாகிவிட்டார்தான் என்றாலும், என்ன செய்ய வேண்டுமோ அதை முதல் ஓவரிலேயே செய்துமுடித்துவிட்டார்.

 

 #KKRvRR
 

முதல் பந்திலேயே மிரட்டலாக மிட் விக்கெட்டில் சிக்ஸர். ராஜஸ்தான் ஃபீல்டர்கள் சுதாரிப்பதற்குள் அடுத்த பந்தில் ஸ்கொயர் லெக் பக்கம் பவுண்டரி. என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்குள், மூன்றாவது பந்தில் லாங் ஆன் பக்கம் சிக்ஸர். ரஹானே பதறுகிறார். டீப் மிட் விக்கெட், லாங் ஆன் திசைகளில் கேட்ச் பிடிக்க ஏதுவாக இரண்டு ஃபீல்டர்களை நிறுத்துகிறார். இதற்கு சம்மந்தமே இல்லாத கவர் திசையில் அடுத்த பந்தை சுனில் நரைன் பவுண்டரி அடித்தபோது, ஈடன் கார்டனில் இருந்தவர்கள் இருப்பு கொள்ளவில்லை. 4 பந்துகளில் 20 ரன். மவி ஓவரில் பட்லர் வெளுத்ததைப் போல, கெளதம் ஓவரில் வெச்சு செஞ்சார் சுனில் நரைன். அதனால்தான், பென் ஸ்டோக்ஸ் வீசிய ஷார்ட் பாலில் சுனில் நரைன் கொடுத்த கேட்ச்சைப் பிடித்ததும் வெறித்தனமாகக் கொண்டாடித் தீர்த்தார் கெளதம். இந்த ஆட்டிட்யூட் நல்லதுக்கில்ல ப்ரோ!

நல்ல லென்த்தில் விழும் பந்துகளை விளாசும் பேட்ஸ்மேன்கள், ஷார்ட் பால்களில் விக்கெட்டை இழப்பதுதானே இந்த சீசனின் ஹைலைட். சுனில் நரைனைப் போலவே, உத்தப்பாவும் ஒரு ஷார்ட் பாலில் ஏமாந்தார். இரண்டு ஸ்லிப், பாயின்ட், கல்லி என ஆஃப் சைடில் அத்தனை ஃபீல்டர்களையும் நிறுத்தியபோதும் கட் ஷாட் மூலம் பவுண்டரி அடித்த நித்திஷ் ராணா, சோதி வீசிய பந்தை சரியாக கணிக்கத் தவறி, எல்பிடபுள்யு ஆனார். தினேஷ் கார்த்திக் – கிறிஸ் லின் ஜோடி ரொம்பவே நிதானமாக, பொறுப்புடன் ஆடியது. லூஸ் பால்களை பவுண்டரிக்கு விரட்டியது. வெற்றிக்கான ரன் ரேட்டும் குறைந்தது.

#KKRvRR

இனி அடித்து ஆடலாம் என நினைத்தபோது கிறிஸ் லின் (45 ரன்) அவுட். அவருக்குப் பின்னாடியே தினேஷ் கார்த்திக்கும் dug out சென்றிருப்பார். எல்பிடபிள்யு-க்கு ராஜஸ்தான் ரிவ்யூ கோரியது. ஆனாலும், `அம்பயர்ஸ் கால்’ புண்ணியத்தில் தப்பித்தார். ரஸ்ஸெல் இறங்கி பட்பட்டென பவுண்டரிகளை தட்டிவிட்டார். ஜாப்ரா ஆர்ச்சர் பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்தார் டிகே. இரண்டு ஓவர்கள் மீதமிருந்த நிலையில், கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மற்றுமொரு ஒன்சைட் மேட்ச். ஆட்ட நாயகனாக குல்தீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொல்கத்தா 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் தோற்றாலும், பிளே ஆஃப் செல்ல ராஜஸ்தானுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement