Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``பா.ஜ.க வென்றது... ஆனால், நாங்கள் தோற்றுவிட்டோம்!" - வடகிழக்கு இந்தியாவிலிருந்து ஒரு குரல்

செய்தி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மேகாலயா மாநிலத்திலிருந்து முழுமையாக நீக்கியுள்ளது மத்திய பா.ஜ.க அரசு. மேலும், அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளிலும் இச்சட்டத்தை நீக்கியுள்ளது. அடுத்து அஸ்ஸாமின் சில பகுதிகளிலிருந்து இதை நீக்கலாமா? என்று ஆலோசித்து வருகிறது. இது பா.ஜ.க அரசின் மிகப் பெரிய சாதனை. 

இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அதன் பின்னணி குறித்தும், வடகிழக்கு மாநிலங்களில் இது எந்த மாதிரியான எதிர்வினையை உருவாக்கியிருக்கிறது என்பதையும் ஆராய வேண்டிய அவசியமிருக்கிறது. 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் அத்தனையும் அவ்வளவு அழகு. அங்கு நடக்கும் அரசியல் அத்தனையும் அவ்வளவு அழுக்கு. அந்த அரசியலைப் அறிந்துகொள்வது கொஞ்சம் கடினம். அவர்களின் மொழி, கலாசார, பண்பாடுகளைப் புரிந்துகொள்வது கஷ்டம். ஆனால், அவர்களும் நம்மைப் போன்ற சாதாரண மக்கள் என்பதையும், சுதந்திர இந்தியாவின் பிரஜைகள் என்பதையும், நமக்கு இருக்கும் அத்தனை அடிப்படை ஜனநாயக உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு என்பதை உணர்ந்துகொண்டு இதைப் படித்தால், அவர்களின் வாழ்வையும், வலியையும், அரசியல் சூழலையும் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடியும். 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள்

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் - (Armed Force Special Power Acts - AFSPA) : 

1958யில் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் ராணுவத்தினருக்கு அபரிமிதமான அதிகாரத்தை வழங்குகிறது. யாரையும் எந்தக் கேள்வியும், வாரண்ட்டும் இல்லாமல் கைது செய்யலாம். எந்தக் கேள்வியும் இல்லாமல் ஒருவரை சுட்டும் கூட தள்ளலாம். எந்த வாரண்ட்டும் இல்லாமல், எந்த இடத்துக்குள்ளும் நுழையலாம் என  ஆயுதப்படை வீரர்களுக்கு கிட்டத்தட்ட சர்வாதிகாரத்தை வழங்கும் சட்டம் இது. 

தமிழ்நாட்டுச் சூழலிருந்து இந்த சட்டத்தின் தீவிரத்தன்மையை உணர்வது சற்று கடினம்தான். இந்தச் சட்டத்தின் வீரியத்தை உணர ஓர் எடுத்துக்காட்டு. இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி 16 ஆண்டுகாலம் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட இரோம் ஷர்மிளா குறித்து அறிந்திருப்பீர்கள். அவரை அந்த முடிவுக்குத் தள்ளிய ஒரு சம்பவம் `மலோம் படுகொலை'.

இரோம் ஷர்மிளா

2000-ம் ஆண்டு. நவம்பர் 2-ம் தேதி. சில நாள்களுக்கு முன்னர் இந்திய ஆயுதப்படைக்கும், மணிப்பூரிலிருக்கும் ஆயுதப் போராட்டக் குழுவுக்கும் தீவிரமான சண்டை நடந்தது. அதில் ஆயுதப்படைக்கு சேதாரம் அதிகமாக இருந்தது. இதனால் பெரும் கோபத்திலிருந்தது ஆயுதப்படை. மணிப்பூரின் மலோம் எனும் இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தம் இருந்தது. `தேசிய வீரக் குழந்தை' விருது வென்றிருந்த சீனம் சந்திரமணி உட்பட அங்கு பத்து பேர் நின்றுகொண்டிருந்தனர். துப்பாக்கிகளோடு வந்த ஆயுதப்படை வீரர்கள், போராட்டக்குழு மீதிருந்த கோபத்தைத் தீர்த்துக்கொள்ள அந்த அப்பாவி மக்கள் 10 பேரையும் கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றனர். சொந்த நாட்டு ராணுவமே, சொந்த மக்களை சுட்டுக் கொன்ற கொடூர நிகழ்வு அது. இது ஒரு பானை சோற்றுக்கான ஒரு பருக்கை மட்டுமே. இதைவிட பல மோசமான சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் அங்கு அரங்கேறிக்கொண்டிருக்கும். 

பல ஆயுதப்போராட்டக் குழுக்கள் இருப்பது, சீனா, பூட்டான் போன்ற அண்டை நாடுகளின் எல்லை இருப்பது என பல காரணங்களுக்காக வடகிழக்கு மாநிலங்களில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதாக பன்னெடுங்காலமாக சொல்லி வந்தன அரசுகள். இந்த நிலையில் மேகாலயாவில் முழுமையாகவும், அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளிலும் இந்தச் சட்டத்தை நீக்கியிருப்பதாக அறிவித்துள்ளது மத்திய அரசு. இதற்கு காரணம் கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் வன்முறைகள் பெருமளவு குறைந்திருப்பதாக சொல்லியிருக்கிறது. 

வடகிழக்கு இந்தியப் போராட்டம்

இது உண்மையில் கொண்டாடப்பட வேண்டிய வெற்றியா?

வடகிழக்கு மாநிலத்தைத் தவிர்த்து இதைப் பெரும்பாலானவர்கள் ஆரவாரத்தோடு கொண்டாடத்தான் செய்கிறார்கள். இதை வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க-வின் மிகப் பெரிய வெற்றியாக கருதுகிறார்கள். 

மத்திய அரசின் இந்த நடவடிக்கை உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்றாலும்கூட, இது வெறும் சுய விளம்பரத்துக்கான கண்துடைப்பு நாடகம் தான் என்ற கருத்தும் அந்தப் பகுதியிலிருந்து ஒலிக்கிறது. 

``மேகாலயாவிலிருந்து இந்தச் சட்டத்தை நீக்கியிருப்பது...ஏதோ பெரிய விஷயம் போல் இந்தியா முழுக்க பார்க்கப்படுகிறது. ஆனால், இது அப்படி கொண்டாடப்பட வேண்டிய வெற்றியே அல்ல. ராணுவமும், இந்திய அரசும் தங்கள் மீதான பார்வையை மாற்ற ஆடியிருக்கும் ஒரு கபட நாடகம்தான் இது. 

சுஷாந்த தலுக்டர் - வடகிழக்கு மாநிலம்மேகாலயாவில் மிகக் குறைந்த அளவிலேயே போரட்டக் குழு இருக்கிறது. அந்த மாநிலம் முழுக்கவே, போராட்டக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது மாநில காவல்துறைதான். ராணுவத்துக்கு அங்கு வேலையே இல்லை. அங்கு குறிப்பிடும்படியான வன்முறைச் சம்பவங்கள் எல்லாம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அங்கு AFSPA அவசியமே இல்லை. அந்தச் சட்டம் அமலில் இருந்ததும் கூட மேகாலயாவின் அஸ்ஸாம், அருணாச்சல் மாநில எல்லையில்தான். அஸ்ஸாமிலிருக்கும் ஆயுதக் குழுக்கள் மேகாலயா எல்லையிலிருக்கும் காடுகளுக்குள் அவ்வப்போது போவது உண்டு. அந்தப் பகுதியிலிருந்து தான் இந்த சட்டத்தை நீக்கியுள்ளனர். 

அதேபோல், அருணாச்சலில் மூன்று காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்தும் இந்தச் சட்டத்தை நீக்கியுள்ளது. இதுவும் அஸ்ஸாம் எல்லைப் பகுதியில் வருவதுதான். அஸ்ஸாமில் இதை நீக்குவது குறித்து அஸ்ஸாம் மாநில அரசு முடிவு செய்ய வேண்டுமென்று சில ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு சொன்னது. ஆனால், மாநில அரசு மொத்த அஸ்ஸாமையுமே "தொந்தரவான பகுதி" (Disturbed Area) என்று அறிவித்துவிட்டு, சட்டத்தை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டது. ஆனால், அஸ்ஸாம் மாநில அரசு என்பது மத்திய அரசின் கைப்பாவைதான். 

மூன்றாண்டுகளுக்கு முன்பே திரிபுராவில் அன்றைய ஆளும் மாநில அரசே AFSPA சட்டத்தை மாநிலத்திலிருந்து முழுமையாக நீக்கியது. அது மிக முக்கியமான நகர்வு. ஆனால், அது இவ்வளவு விளம்பரமாக்கப்படவில்லை. ஆனால், இன்று மத்திய அரசின் இந்த நடவடிக்கைப் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இது ஒரு நல்ல நகர்வு அவ்வளவுதான். " என்று யதார்த்த நிலையை விளக்குகிறார் அஸ்ஸாமைச் சேர்ந்த பத்திரிகையாளர் சுஷாந்தா தலுக்டர் (Sushanta Talukdar). 

1980களிலும், 90களிலும் இருந்த போராட்டச் சூழல் இன்று வடகிழக்கில் இல்லை. அன்று பலமாக இருந்த பல ஆயுத அமைப்புகளும் இன்று அடங்கிப் போய்விட்டன. 90களுக்குப் பிறகான உலகமயமாக்கலும், சுதந்திரக் காற்றையே சுவாசிக்காமல் AFSPA சட்டத்தின் பிடியிலேயே பிறந்து, வளர்ந்து அதற்குப் பழகிப் போன ஒரு தலைமுறையும் உருவாகிவிட்டது, வடகிழக்குப் பிரச்னையின் போக்கையே பெருமளவு மாற்றியிருக்கிறது. 

`` 2009-ம் ஆண்டு ஜூலை, 23-ம் தேதி. காலை 10.30 மணி. மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் நகரம். மார்க்கெட் பகுதி. கமாண்டோக்கள் ஒருவனைப் பிடிக்க துரத்துகிறார்கள். அவன் தப்பித்து ஓடுகிறான். அவனைச் சுடுகிறார்கள். அது குறிதவறி அங்கு நடந்து வரும் ஒரு லிர்டாங் - போடோ செயற்பாட்டாளர்பெண்ணின் மீது படுகிறது. சின்ன சத்தம். ரத்தம் வெள்ளத்தில் வீங்கிய தன் வயிற்றோடு கிடக்கிறார். ரபீனா தேவி என்ற அந்தப் பெண் 5 மாத கர்ப்பிணி. தன் கணவனைப் பார்க்க,  தன் ஒன்றரை வயது  மகனோடு போய்க் கொண்டிருந்தார். தன் அம்மாவைப் பார்த்து அழுதபடியே அந்தப் பையன் நின்று கொண்டிருந்தான். சில நிமிடங்கள் கமாண்டோக்கள் சுற்றிப் பார்க்கிறார்கள். அங்கு ஒரு டீ கடையில் ஒருவர் டீ குடித்துக்கொண்டிருக்கிறார். அவர் ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டக் குழுவில் இருந்தவர். பக்கத்திலிருந்த ஒரு மருந்துக் கடை குடோனுக்கு அவரை அழைத்துச் செல்கிறார்கள். சில நிமிடங்கள். சில சத்தங்கள். சோங்கம் சஞ்சித் (Chongkham Sanjit) எனும் அவர் பிணமாகக் கொண்டு வரப்படுகிறார். அன்றைய கணக்கு முடிக்கப்படுகிறது. 

இது போட்டோ ஆதாரங்களோடு கிடைக்கவே அந்த கமாண்டோக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால், இன்றுவரை அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது எங்கள் வடகிழக்குப் பிரச்னையின் சிறு துளி. மணிப்பூரில் மட்டும் இதுபோன்ற 1500 போலி என்கவுண்டர் வழக்குகள் இருக்கின்றன. 

நெஞ்சு வலி என்று சொன்னால், தலைவலிக்கு மாத்திரை கொடுக்கிறது மத்திய அரசு. மேகாலயாவில் AFSPAயை நீக்கியிருப்பது மிகச் சாதாரணமான விஷயம். அந்த மாநிலத்தில் AFSPAவின் பங்கு பெரிதாக ஒன்றுமில்லை. இவர்கள் உண்மையில் செய்வதென்றால் அஸ்ஸாமிலும், நாகாலாந்திலும், மணிப்பூரிலும் அல்லவா நீக்கியிருக்க வேண்டும்? 

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்... பல ஆண்டுகளாகப் போராடி, போராடி நாங்கள் சோர்ந்துவிட்டோம். எங்கள் தலைமுறை பிழைப்பிற்கான வழியைத் தேடத் தொடங்கிவிட்டது. ஆயுதப் போராட்டங்கள் எங்கள் பகுதியில் நீர்த்துப் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், எங்கள் மீதான வன்முறையும், ஒடுக்குமுறையும் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. பிரதமர் மோடியிடம் 2015-ம் ஆண்டு, ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு  நாகாலாந்து போராட்டக் குழு  மாநில முன்னேற்றத்துக்கான, உரிமைகளுக்கான ஒரு  ஒப்பந்தம் போட்டது. பிரதமரும், அதை செய்து தருவதாக உறுதியளித்தார். ஆனால், மூன்றாண்டுகளாகியும் இன்றுவரை அதிலிருந்த ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. அஸ்ஸாமிலும் இதேபோன்ற ஒரு ஒப்பந்தம் "Assam Accord" இருக்கிறது. அதற்கும் மத்திய அரசு எதையும் செய்யவில்லை.

மணிப்பூர் - போராட்டம்

மணிப்பூர். 2004-ம் ஆண்டு, ஜூலை - 11-ம் தேதி. தங்கஜம் மனோரமா எனும் பெண்மணி இந்திய ராணுவத்தில் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு எதிராக மணிப்பூரைச் சேர்ந்த 12 பெண்கள் நிர்வாணமாக "இந்திய ராணுவமே எங்களை கற்பழி" என்ற பதாகைகளோடு,  ராணுவத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். 

எங்களுக்கு வேண்டியதைச் செய்யாமல், பெயருக்கு ஒன்றை செய்துவிட்டு அதைப் பெரிய விளம்பரம் செய்வது எங்களுக்குப் பெரும் வலியைத் தருகிறது. இந்தச் சுதந்திர இந்தியாவில் எங்கள் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. அவர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. அடிப்படை உரிமைகள் இல்லை. எங்களைக் காக்க வேண்டிய ராணுவத்தைக் கண்டு நாங்கள் பயப்படுகிறோம். அவர்களின் நடவடிக்கையால் ஒவ்வொரு நாளும் உயிரிழப்பை சந்தித்துக் கொண்டேயிருக்கிறோம். பா.ஜ.க-வும், பா.ஜ.க-வின் ஆதரவாளர்களும் வேண்டுமானால் இதைக் கொண்டாடலாம். ஆனால், வடகிழக்கில் யாரும் இதைக் கொண்டாட்டமாக, வெற்றியாகப் பார்க்கவில்லை. எங்கள் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை." என்று விரக்தியான சிரிப்போடு சொல்கிறார் அஸ்ஸாமைச் சேர்ந்த "போடோ" இன செயற்பாட்டாளர் லிர்டாங். 

இந்தியாவின் வடகிழக்கு

ரஷ்ய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் ஸால்ஜினிட்ஸின் (Aleksandr Solzhenitsyn) 1970ல் நோபல் பரிசு பெற்றபோது இப்படிச் சொன்னார்...

"இங்கு மிருகத்தனமான அதிகாரப் படைகள் மட்டுமல்ல வெல்வது... மூர்க்கத்தனத்துடன் உரக்க அவர்கள் சொல்லும் நியாயமும் கூட வெல்கிறது. இந்த மொத்த உலகமும் அந்த அளவற்ற அதிகாரத்தின் குரல்தான் உண்மை என்றும், சரி என்றும்  நம்புகிறது. அதனால், உண்மையின், நியாயத்தின், 'சரி'யின் குரல் பலவீனமாகவே ஒலிக்கிறது. 

வன்முறையை மறைக்க பொய் அவசியம், அந்தப் பொய்யைப் பாதுகாக்க வன்முறை அவசியம். வன்முறை என்றும் தனித்து இயங்காது. அது பொய்களோடு சேர்ந்தே இயங்கும்..."  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement