Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உச்சநீதிமன்ற கெடுபிடி தாண்டி எடியூரப்பா எப்படி மெஜாரிட்டியை நிரூபிப்பார்?  - சில கூட்டல் கழித்தல் கணக்குகள்

எடியூரப்பாவின் தலைவிதி மே 19-ம் தேதி சனிக்கிழமை மாலை தெரிந்துவிடும். கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலா கொடுத்த 15 நாள்கள் காலக்கெடுவை முன்று நாள்களாக் குறைத்து, ‘மே 19-ம் தேதி மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆட்சியைக் காப்பாற்ற பி.ஜே.பி போராடும். எடியூரப்பாவைக் கவிழ்த்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற காங்கிரஸ் - மதச் சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி போராடும். இறுதியில் என்ன ஆகும்? யார் ஜெயிப்பார்கள்?


224 பேர் கொண்ட கர்நாடக சட்டசபையில் 222 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட பெங்களூரு நகரின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி தேர்தல் மே 28-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பி.ஜே.பி வேட்பாளர் விஜயகுமார் இறந்ததால், பெங்களூரு நகரின் ஜெயநகர் தொகுதி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மதச் சார்பற்ற ஜனதா தளத் தலைவரும், காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான குமாரசாமி, ராமநகரா, சென்னபட்னா என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டு இடங்களிலும் வென்றார். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் ஒரு ஓட்டுதான் போடமுடியும். எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது 221 பேர்தான் அவையில் இருப்பார்கள். இதில்  111 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவைக் காட்டினால், எடியூரப்பா தனக்கு பெரும்பான்மை இருப்பதாக நிரூபித்துவிட முடியும். 

பி.ஜே.பி-க்கு இருப்பது 104 எம்.எல்.ஏ-க்கள். சுயேச்சைகள் இருவர், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் என மூவரையும் இழுத்துவிட முடியும் என்று கணக்கு போடுகிறார்கள் பி.ஜே.பி தலைவர்கள். சுயேச்சைகள் இரண்டு பேரையும் இப்போது காங்கிரஸ் தனது முகாமில் வைத்திருக்கிறது. ம.ஜ.த-வுடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலைச் சந்தித்தது என்பதால், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ இப்போது ம.ஜ.த எம்.எல்.ஏ-க்களோடு பாதுகாப்பாக இருக்கிறார். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இரண்டு பேரை இதுவரை பி.ஜே.பி வளைத்திருக்கிறது. விஜயநகரம் எம்.எல்.ஏ ஆனந்த சிங், மாஸ்கி தொகுதி எம்.எல்.ஏ பிரதாப்கவுடா பாட்டீல் ஆகியோரை பி.ஜே.பி தன் பாதுகாப்பில் வைத்திருக்கிறது. எனவே, இப்போதைய கணக்குப்படி பி.ஜே.பி-யிடம் 106 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் - ம.ஜ.த பலம் 115.

இவர்களில் சுயேச்சைகள் இருவர், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் என மூவரும் அணி மாறினாலும் தங்கள் எம்.எல்.ஏ பதவியை இழக்க மாட்டார்கள். ஆகவே, அவர்களை எப்படியும் வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் என நினைக்கிறது பி.ஜே.பி. அப்படி வந்தால், பி.ஜே.பி-யிடம் 109 பேரும், காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி வசம் 112 பேரும் இருப்பார்கள். 

அப்படி எல்லாம் எதிர்பார்த்தபடி நடந்தால், காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணியில் நான்கு எம்.எல்.ஏ-க்களை மட்டும் அவைக்கு வரவிடாமல் செய்துவிட்டால், எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்துவிட முடியும்.

இதற்குத்தான் பி.ஜே.பி சில ரகசியத் திட்டங்களை வைத்திருந்தது. ஆனால், மே 16-ம் தேதி நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விசாரணையில் அது வெளிப்பட்டுவிட்டது. ‘எடியூரப்பாவுக்கு கர்நாடக கவர்னர் பதவிப் பிரமாணம் செய்துவைக்கத் தடை விதிக்க வேண்டும்’ என காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி சார்பில் போடப்பட்ட அவசர வழக்கை அந்த நள்ளிரவில் உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘‘எம்.எல்.ஏ-க்கள் பதவிப்பிரமாணம் எடுத்தபிறகுதான், கட்சித் தாவல் தடை சட்டத்தின் வரம்புக்குள் வருவார்கள். அதற்குமுன் அவர்கள் எடுக்கும் முடிவுகள் குறித்து கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் தெளிவாக ஏதும் சொல்லப்படவில்லை’’ என்றார். ‘சில எம்.எல்.ஏ-க்களை முதல்நாளில் அவைக்கு வந்து பதவியேற்க விடாமல் செய்துவிட்டு, அப்படிப்பட்ட சூழலில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்கப் பார்க்கிறார்’ என்பதை இதன்மூலம் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி வழக்கறிஞர்கள் புரிந்துகொண்டனர். ‘‘ஒருவர் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிமிடத்திலிருந்தே கட்சித்தாவல் தடை சட்டத்தின் வரம்புக்குள் வந்துவிடுகிறார்’’ என காங்கிரஸ் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி வாதாடினார். நீதிபதிகளும் அப்போது, ‘‘பதவிப்பிரமாணம் எடுப்பதற்கு முன்பு கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கமுடியாது என்பது அபத்தமான வாதம். இது குதிரைப்பேரத்துக்கு வெளிப்படையாக அழைப்பு விடுவது மாதிரி ஆகிவிடும்’’ என்று கடுமையாகக் குறிப்பிட்டனர்.

இதனால்தான், மே 18-ம் தேதி தீர்ப்பு தரும்போது, ‘‘அனைத்து எம்.எல்.ஏ-க்களும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதனால், எடியூரப்பாவுக்கான வழிகள் அடைபட்டுவிட்டன.

முதல்வராகப் பதவியேற்றதுமே எடியூரப்பா அவசரமாக ஒரு முடிவு எடுத்தார். சட்டமன்றத்தில் ஆங்கிலோ இந்திய சமூகத்திலிருந்து ஒருவரை நியமன எம்.எல்.ஏ-வாக நியமிக்கும் வழக்கம் உண்டு. முதல்வரின் பரிந்துரைப்படி கவர்னர் இந்த முடிவை எடுப்பார். எடியூரப்பா அவசரமாக வினிஷா நீரோ என்பவரை நியமிக்க முடிவெடுத்தார். இந்த நியமனம் உடனே நிகழ்ந்தால், அவரின் வாக்கையும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது திட்டம். ஆனால், இதை எதிர்த்தும் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டது. அனைத்திந்திய ஆங்கிலோ இந்தியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் க்ளைவ் மைக்கேல் வான் என்பவரும், ‘இந்த எண் விளையாட்டில் எங்கள் சமூகத்தின் நியமன எம்.எல்.ஏ-வைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது’ என வழக்கு போட்டார். அதனால் இந்த வழியும் அடைபட்டு விட்டது. 

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், பி.ஜே.பி-யினர் வசம் இருக்கும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் சனிக்கிழமை சட்டமன்றத்துக்கு வந்து பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் எடியூரப்பாவுக்கு ஆதரவாக வாக்களித்தால், அவர்களின் எம்.எல்.ஏ பதவி பறிபோகும். 

‘‘வாக்கெடுப்பில் வெற்றிபெறுவேன்’’ என்று சொல்லும் எடியூரப்பா என்ன செய்யப் போகிறார்? கர்நாடக அரசியல் இந்த இரண்டு நாள்களும் ஏகப்பட்ட திருப்பங்களை சந்திக்கப் போகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement