Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"இந்த முறை எனக்கு நம்பிக்கை இல்லையேன்னு சொன்னார்" - கலங்கும் சாந்தா பாலகுமாரன்

`பாலா... பாலா' என்று ஊரெல்லாம் கொண்டாடிய எழுத்துச் சித்தர் பாலகுமாரன், தன் குருவின் பாதத்தில் கலந்துவிட்டார். பால குமாரனின் இறுதிப்பயணத்தில், அவர் எழுத்துகளை நேசித்தவர்களுடைய கண்ணீர்த் துளிகளைச் சுமந்து, உலர்ந்துபோன மலர்கள் வழிகாட்ட, அவர் வீட்டுக்குள் நுழைந்தோம். பால குமாரனின் மனைவி கமலாம்மாள், சோபாவில் களைப்புடன் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். மகள் கெளரி வரவேற்றார். 

பாலகுமாரன்

`விகடனிலிருந்து வந்திருக்கிறோம்' என்றதும் மகன் சூர்யாவின் கண்கள் சிவந்து, துக்கத்தில் கண்ணீர் பொங்கி வழிகிறது.  பாலாவின் பேரன்கள் ஆகாஷூம் ஆயானும் வீட்டில் நடந்த இழப்பு தெரியாமல், தாத்தாவுடன் சேர்ந்து சுவரில் ஒட்டி விளையாண்ட வெஜிடபிள் மற்றும் ஃப்ரூட்ஸ் வால்பேப்பரில் இருக்கும் பெயர்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சூழலின் இறுக்கத்தைப் போக்க, `சாந்தாம்மா எங்கே இருக்காங்க?' என்றேன். பாலகுமாரனின் தங்கை சென்று விஷயத்தைச் சொல்ல, ஹாலுக்குள் வந்தார் சாந்தாம்மா.

``அவரு எங்களைவிட்டுப் போவாருன்னு யாருமே எதிர்பாக்கலைம்மா. ஆனா, அவருக்குத் தெரிஞ்சிருக்கு. இதுக்கு முன்னாடி ஒருதடவை உடம்பு முடியாம ஹாஸ்பிடல்ல சேர்ந்தப்போ, `உங்க உடம்பு பற்றி பகவான் (யோகி ராம்சுரத்குமார்) என்ன சொல்றாருன்னு கேட்டுப் பாருங்களேன்' என்றேன். `இருக்கட்டுமா... வரட்டுமான்னு கேட்டேன் சாந்தா. இருனுதான் பதில் வந்துச்சு'னு சொன்னார். நல்லபடியா வீட்டுக்குத் திரும்பிட்டோம். இந்தத் தடவை ஞாயிற்றுக்கிழமை உடம்பு சரியில்லாம ஹாஸ்பிடல்ல சேர்த்தோம். மறுநாள், `பகவான் என்ன சொல்றாரு?'னு கேட்டேன். `பதில் கிடைக்கலையே சாந்தா'னு சொன்னார். என் மனசு அப்பவே கலங்கிப்போச்சும்மா. அன்னிக்கு சாயந்திரம் மகாபாரத புத்தகம் ரெண்டாவது பாகத்தை, விட்ட இடத்திலிருந்து லேப்டாப்ல டைப் பண்ண ஆரம்பிச்சிட்டார். என் மனசு கேட்காம குடும்ப ஜோதிடர் ஷெல்வீகிட்ட கேட்டேன், `செவ்வாழ்க்கிழமை சாயந்திரம் 5 மணி வரை சமாளிச்சுட்டா, அப்புறம் அவருக்கு ஒரு கண்டமும் இல்லை'னு சொன்னார். அன்னிக்கு காலையிலிருந்தே, `5 மணி வரைக்கும்தானே...  சமாளிச்சிடலாம்'னு சொல்லிட்டே இருந்தேன். 'எனக்கு நம்பிக்கையில்லையே சாந்தா'ங்கிறதுதான் என்கிட்ட அவர் பேசின கடைசிப் பேச்சு. 12.40 மணிக்கே கிளம்பிட்டாரு.'' 

சாந்தாம்மாவின் குரல் உடைகிறது. கண்ணீரை அடக்கமுடியாமல் தவிக்கும் அவரைப் பார்த்து, பக்கத்தில் வயதான குழந்தைபோல உட்கார்ந்திருந்த கமலாம்மாவும் அழ ஆரம்பிக்கிறார். ``அவருக்கு கமலா பத்தின கவலை அதிகம். அவளைப் பத்திரமா பார்த்துக்கணும்பார். கமலாக்கா, வீட்டுக்கு வர்ற ஜோதிடர்கள்கிட்ட எல்லாம், தான் சுமங்கலியாகப் போகணும்னுதான் கேட்பாங்க. அதுக்காகவே தான் வாழணும்னு அவர் ஆசைப்பட்டார்'' என்று பெருமூச்சு விடுகிற சாந்தாம்மாவை, கனிவுப் பொங்கப் பார்க்கிறார் கமலாம்மா.

இருவருடைய மனமும் சற்று அமைதியாகட்டும் என நினைத்து, பாலகுமாரன் நின்ற, நடந்த, எழுதிய, படித்த, தூங்கிய அவருடைய அறைக்குள் நுழைந்தேன். அவர் பயன்படுத்திய வேட்டி, மூக்குக் கண்ணாடி, அங்கவஸ்திரம் எல்லாம் படுக்கையின் மேலே இருந்தன. பக்கத்து டேபிளில் உடையாரும், கங்கைகொண்ட சோழனும் தங்களை எழுத்தில் சமைத்த தலைவன் இல்லாமல் வாடிக்கிடந்தார்கள். அவர் பயன்படுத்தி மிச்சம்வைத்த பெர்ஃபியூம்கள் அலமாரி நிறைய மணம் வீச மறந்து கிடக்கின்றன. ``அப்பா பெர்ஃபியூம் லவ்வர். நல்ல பிராண்ட்களில் புதுசா எந்த பெர்ஃபியூம் வந்தாலும் உடனே வாங்கிடுவார்'' என்றபடி பேச ஆரம்பித்தார் மகன் சூர்யா.

அவர் அறை

``எனக்கு இந்த ரூமுக்கு வந்தாலே உடம்புக்குள்ள ஒரு அதிர்வு வருதுங்க. அவரோட புத்தகங்களை படிக்கிறப்போ எல்லாம் இந்த அதிர்வை ஃபீல் பண்ணியிருக்கேன். அப்பா, மொத்தமா வீட்டைவிட்டு மயானத்துக்குக் கிளம்பின அன்னிக்குக் கிட்டத்தட்ட மூவாயிரம் பேருக்கு மேல, வாசல்ல நிக்கிறாங்க. பாலா... பாலா... னு நாலாப்பக்கமும் கதறல். அவ்ளோ மனுசங்களை, அவங்க பாசத்தை சம்பாதிச்சிருக்காரு அப்பா. அவர் உடம்போடு வண்டியில் போயிட்டிருக்கேன். கண்ணுக்கு எட்டின தூரத்துக்கு வண்டிகளாக வருது. அதுல ஒரு கோல்டன் கலர் இன்னோவா. அது, அப்பாவின் கார். ஒரு நிமிஷம் மனசு நின்னு துடிச்சது. அப்பாவின் காரை விலைக்கு வாங்கின ஒருத்தர் அந்த காரிலேயே அப்பாவின் கடைசி யாத்திரையில் கலந்துக்க வந்திருக்கார்

மறுநாள் விடியற்காலை மூணு மணி இருக்கும். `பாலா'னு அடிவயித்திருந்து ஒரு கதறல் வாசல்ல கேட்குது. ஓடிப்போய் பார்த்தா, மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் பக்கத்துல கொஞ்சம் வயசான ஒருத்தர் கண்ணீரோடு நிக்கிறார். `அப்பாவின் இறுதி யாத்திரையில் கலந்துக்க வேலூர் பக்கத்துல கிராமத்திலிருந்து வந்திருக்கார். இங்கே வழிதெரியாம எங்கெங்கோ சுத்திட்டிருந்தவரை, போலீஸ் கான்ஸ்டபிள் விசாரிச்சு, எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கார். இந்த அன்புக்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யமுடியும்? அப்பாவின் இந்த ரூமை, அவர் பயன்படுத்திய பொருள்களோடு அப்படியே வெச்சுடலாம்னு முடிவுபண்ணியிருக்கேன். அப்பாவை, அப்பாவின் எழுத்துகளை நேசிச்சவங்க இங்கே வரும்போது, இதையாவது பார்த்து ஆறுதல் பட்டுக்கட்டும்'' என்றபடி கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார் சூர்யா.

அந்த அறையெங்கும் நிறைந்து புன்னகைத்துக்கொண்டிருந்தார் பால குமாரன்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement