வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (18/05/2018)

கடைசி தொடர்பு:20:24 (18/05/2018)

செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் அவசியம் கடைபிடிக்கவேண்டிய 11 வழிமுறைகள்!

நாய், பூனை ஆகியவற்றுடன் நெருக்கமாக இருப்பது ஆபத்தானது. பல நோய்களுக்கு அது வழிவகுக்கும்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் அவசியம் கடைபிடிக்கவேண்டிய 11 வழிமுறைகள்!

வீட்டின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக, வலம்வருபவை செல்லப்பிராணிகள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல... பெரியவர்களுக்கும் அவற்றோடு விளையாடுவது பிடிக்கும். நம் குழந்தைக்கு நிகராக செல்லப்பிராணிகளிடம் அன்பு செலுத்துவோம்; கட்டிப்பிடித்து விளையாடுவோம்; படுக்கையறை வரை அனுமதிப்போம். ஆனால், `நாய், பூனை ஆகியவற்றுடன் நெருக்கமாக இருப்பது ஆபத்தானது. பல நோய்களுக்கு அது வழிவகுக்கும்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

செல்லப் பிராணி - நாய்

``செல்லப்பிராணிகளால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன... அவற்றிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?’’ என்று பொதுநல மருத்துவர் வான்மதியிடம் கேட்டோம்.

``நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நம்மில் பலர் அவற்றை வீட்டில் வளர்த்தும் வருகிறோம். அவற்றோடு நெருக்கமாக இருக்கிறோம். அவையும் நம்மையே சுற்றிச் சுற்றி வரும். மேலே விழுந்து தன் அன்பைக் காட்டும். கால்களால் பிறாண்டும். இப்படியெல்லாம் செல்லப்பிராணிகள் நம்மைக் கொஞ்சுவதால், அவற்றின் மீதிருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், ஒட்டுண்ணிகள், புழுக்கள், பூஞ்சைகள் மூலமாக நமக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 
நோய்த்தொற்று இருக்கும் பிராணிகளைத் தொடுவதாலும், அவற்றின் உமிழ்நீர் நம் மீது படுவதாலும் நோய்கள் ஏற்படலாம். அவற்றின் தோலின் மேலிருக்கும் உண்ணிகள் மூலமாகவும் விதவிதமான நோய்கள் உண்டாகலாம். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு உள்ளவர்கள், செல்லப்பிராணிகளிலிருக்கும் கிருமிகளால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

செல்லப்பிராணிகளால் ஏற்படும் ரேபிஸ், நிமோனியா போன்ற நோய்கள் உயிரைக் கொல்லும் அளவுக்கு மோசமானவை. ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால், நம்முடைய மூளை பாதிப்படையும். நாய் கடித்தவுடன் மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.  

பூனை, நாய்களின் மூலமாகப் பரவுவது நிமோனியா. இது குழந்தைகளைத்தான் அதிகமாகப் பாதிக்கும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், நிம்மோனியாவை எதிர்த்துப் போராட முடியாது. இந்த நோயால், மூச்சுவிடுவதில் பிரச்னையும் நுரையீரல் கட்டியும் ஏற்படலாம். செல்லப்பிராணிகளால் வீட்டில் இருக்கும் தண்ணீரில் கிருமிகள் பரவி டைஃபாய்டு, அல்சர் போன்ற நோய்களை உண்டாக்கலாம். நோய்க்குச் சிகிச்சை எடுக்காவிட்டால், மரணம்கூட ஏற்படலாம்.

நாய்

பூனைகளால் உண்டாகும் `டாக்ஸோபிளாஸ்மோசிஸ்’ (Toxoplasmosis) என்ற நோய் மூளையைப் பாதிக்கும். 

செல்லப்பிராணிகளால், `கேம்பைலோபேக்டர்’ (Campylobacter infection) என்ற பாக்டீரியா தொற்று; `கேட் ஸ்க்ராட்ச்’ (Cat scratch disease) எனும் பாக்டீரியா தொற்று; `ரிங்வார்ம்’ (Ringworm) என்ற பூஞ்சைகளால் ஏற்படும் சருமப் பிரச்னைகள் உண்டாகலாம். `டாக்ஸோகேரியாசிஸ்’ (Toxocariasis) ஒட்டுண்ணிப் புழுக்கள் உடலில் பரவுவதாலும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, காய்ச்சலுக்கு மருந்துகள் இருப்பதால், பயப்படத் தேவையில்லை. செல்லப்பிராணிகளின் மீதிருக்கும் உண்ணிகள் சில நேரங்களில் காதுகளில் புகுவதாலும் பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, செல்லப்பிராணிகளுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. 

செல்லப்பிராணிகள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க, அவற்றை வளர்ப்பவர்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டியவை...

* செல்லப்பிராணிகளுக்குக் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய காலத்தில் தடுப்பூசிகள் போட வேண்டும்.

* மருத்துவர் பரிந்துரைப்படி குறிப்பிட்ட நாள்களுக்கு ஒரு முறை குளிப்பாட்ட வேண்டும்.

* ஒட்டுண்ணிகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். செல்லப்பிராணிகளின் உடலில் காயமேற்பட்டிருந்தால், அதற்கு சிகிச்சையளிக்க வேண்டும்.

* ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை செல்லப்பிராணிகளை அண்டவிடக் கூடாது. 

* செல்லப்பிராணிகளைத் தொட்டால், கைகளைச் சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.

* அவற்றுக்கு முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடிப்பதைத் தவிர்க்கலாம்.

* அவற்றின் உமிழ்நீர் நம்மீது படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* நாய், பூனைத் தங்குமிடங்கள் சுத்தமாக இருக்கவேண்டியது அவசியம்.

* நாம் அருந்தும் உணவு, தண்ணீர் ஆகியவற்றின் அருகே செல்லப்பிராணிகளை வர அனுமதிக்கக் கூடாது.

* குழந்தைகள் விளையாடும் இடங்களில் செல்லப்பிராணிகள் நுழைவதைத் தடுக்க வேண்டும்.

* செல்லப்பிராணிகளை அவ்வப்போது கால்நடை மருத்துவரிடம் காட்டி, எந்த நோய் பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

செல்லப் பிராணி - பூனை

நாம் வாழும் சமூகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம். நிலம், நீர், காற்று எல்லாம் நாளுக்குநாள் மாசுபட்டு வருகின்றன. உணவில் கலப்படம், ஊட்டச்சத்துக் குறைபாடு, போன்ற பிரச்னைகளும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் நாம், செல்லப்பிராணிகளால் ஏற்படும் நோய்களிலிருந்து, தற்காத்துக்கொள்ளவேண்டியதும் அவசியம்’’ என்கிறார் மருத்துவர் வான்மதி. 

செல்லப்பிராணிகளைச் சுத்தமாகப் பராமரிப்பது எப்படி? - கால்நடை மருத்துவர் ராஜ ராஜ சோழனிடம் கேட்டோம். ``வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நாய்களை குறைந்தது 10 நாள்களுக்கு ஒரு முறை அவற்றுக்கென இருக்கும் சோப்புகள், ஷாம்பூகள் போட்டுக் குளிப்பாட்ட வேண்டும். குளிக்கவைக்கும்போது நாய்களின் காதுகளில் தண்ணீர் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் காதுகளில் தண்ணீர் போனால், எளிதாக வெளியே வந்துவிடும். ஆனால், நாய்களுக்குக் காதுகளுக்குள்ளேயே மாட்டிக்கொண்டு, நோய்த்தொற்று ஏற்படக் காரணமாகிவிடும். அதனால் கவனமாகக் குளிப்பாட்ட வேண்டும். பொதுவாக பூனைகளை யாரும் குளிப்பாட்ட மாட்டார்கள். பூனை தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்ளும். வீட்டில் வளர்க்கப்படும் கிளி, லவ் பேர்ட்ஸ் போன்றவற்றின் அருகே தண்ணீரை வைத்துவிட்டால் போதும். அவை தானாகக் குளித்துக்கொள்ளும். செல்லப்பிராணிகள் இருக்கும் இடங்களைச் சுத்தமாக வைத்திருந்தாலே போதும்... அவற்றுக்கும் நோய்கள் ஏற்படாது; அவற்றால் நமக்கும் நோய்கள் ஏற்படாது’’ என்கிறார் ராஜ ராஜ சோழன்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க