ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகள்!

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்து ஆண்டுகள் முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகள்

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்து ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து, 5 மாதங்கள் கடந்தும் இன்னும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதற்காக கமிட்டி அமைத்து அனைத்து ஆய்வுகளும் முடித்த பின்பும், விடுதலைக்கான கோப்பில் ஆளுநர் கையொப்பமிட தாமதித்து வருவதால், 1,850 ஆயுள் தண்டனைக் கைதிகளின் விடுதலை கேள்விக்குள்ளாகி வருகிறது என்று சொல்லப்படுகிறது. 

ஆளுநர் பன்வாரிலால்

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் இது சம்பந்தமாக ஆளுநரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அவரிடம் பேசினோம், ``என் மகன் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று 12 ஆண்டுகளாக மதுரை சிறையில் இருக்கிறார். வயதான காலத்தில் மகன்  துணையில்லாமலும், அவருடைய குடும்பமும் மிகவும் கவலையோடு காலம் கழித்து வருகிறோம். பத்து வருடங்களுக்கு மேல் சிறையில் காலத்தைக் கழித்து வரும் ஆயுள் தண்டனைக் கைதிகளை தலைவர்களின் பிறந்த நாள்களில் விடுதலை செய்வது வழக்கமாக இருந்து வந்தது. இந்தநிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்தாண்டுகள் சிறையில் கழித்த 1,850  கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கடந்தாண்டு டிசம்பர் 30 ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் அறிவித்தார். இதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதில் எந்தத் தலையீடும் இல்லாமல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கைதிகளைத் தேர்வு செய்திருக்கிறார்கள். தற்போது இந்தக் கோப்பில் ஆளுநர் கையெழுத்து இட வேண்டும். ஆனால், அவர் இன்னும் கையெழுத்திடாமல், காலதாமதமாகி வருகிறது. என்ன காரணமென்று தெரியவில்லை. அதற்காக அவரிடம் மனு கொடுத்துள்ளேன்'' என்றார். பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் நன்னடத்தையுடன் இருப்பவர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ, அரசு வழங்கும் கருணையை ஆளுநர் தாமதிக்காமல் நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!