`மாற்றுப் போராட்டத்தை முன்னெடுப்போம்!’ - கொதிக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் | If government tries to suppress our protest, we will change method of protest says anti sterlite movement

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (18/05/2018)

கடைசி தொடர்பு:20:20 (18/05/2018)

`மாற்றுப் போராட்டத்தை முன்னெடுப்போம்!’ - கொதிக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்

``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான முற்றுகைப் போராட்டத்தை அரசு தடுக்குமானால், மக்கள் மாற்றுப் போராட்ட வழிமுறையை முன்னெடுப்பார்கள்" என ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் தெரிவித்துள்ளார். 

Thamilmanthan press meet

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி வரும் மே-22ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தைப் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என, தூத்துக்குடி மாநகர, கிராம மக்கள் கூட்டமைப்பின் முடிவின்படி, மத்திய அரசையும், மாநில அரசையும் வலியுறுத்தி வருகிற மே-22ம் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு, அன்றைய தினம் தூத்துக்குடியில் முழுக்கடை அடைப்பு நடத்திட வணிகர் சங்கங்களும் முடிவெடுத்துள்ளன. வரும் 22ம் தேதி காலை 9 மணி முதல் மக்கள் அவரவர் வீடுகளிலிருந்து புறப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கியும், ஸ்டெர்லைட் ஆலை முன்பும் அறவழியில் எந்த வன்முறைக்கும் இடம் தராமல் ஜனநாயக நெறியுடன் பெருந்திரளாகப் போராட்டம் நடத்தவிருக்கிறார்கள்.

மக்களின் இப்போராட்டத்தைச் சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் தடுத்து நிறுத்தவும், மக்களை ஒன்று கூட விடாமல் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. எனவே, அறவழியில் நடைபெறும் இந்த முற்றுகைப் போராட்டத்தை அரசும் காவல்துறையும் தடுத்தால், தூத்துக்குடி வட்டாரத்தில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களையும்,  மாநில அரசுகளின் அலுவலகங்களையும் ஆங்காங்கே மக்கள் முற்றுகையிட்டு தூத்துக்குடி வட்டாரத்தையே ஸ்தம்பிக்க வைக்கும், மாற்றுப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிதாகப் போராட்டம் நடத்தினால், போராட்டக்காரர்கள் மீதும் மக்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும் என அச்சுறுத்தும் வகையில் எச்சரிக்கும் காவல்துறையின் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த முற்றுகைப் போராட்டம் சில தனிநபர்களின் தலைமையில் நடைபெறும் போராட்டம் அல்ல. மக்கள் தலைமை ஏற்று, நடைபெறும் ஒரு வழிப் போராட்டமாகும். இது போன்ற மிரட்டல்களைக் கண்டு யாரும் அஞ்ச மாட்டோம். போராட்டக் களத்திலிருந்து பின் வாங்கவும் மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

இந்நிலையில், மே-22ம் தேதி நடைபெறவுள்ள மக்களின் முற்றுகைப் போராட்டத்தினால் ஸ்டெர்லைட் ஆலைப்பகுதியில் 1 கி.மீ., தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரிய வழக்கில், சூழ்நிலைக்கு ஏற்றவாறும் சட்டம் ஒழுங்கு பாதிக்காத படியும் வரும் 21ம் தேதிக்குள் ஆட்சியர் நடவடிக்கை எடுத்திட வேண்டும். அத்துடன்,  ஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு அளித்திடக் கோரி மாவட்ட காவல்துறைக்கும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க