வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (18/05/2018)

கடைசி தொடர்பு:22:30 (18/05/2018)

`ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் வேண்டும்!’ - ஊட்டி தாவரவியல் பூங்காத் தொழிலாளர்கள் தர்ணா

மலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா தினக் கூலி பண்ணைப் பணியாளர்கள் எதிர்ப்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரத்தை அறிவிக்காத ஏமாற்றத்தால் அரசு தாவரவியல் தினக் கூலி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா தினக் கூலி பண்ணைப் பணியாளர்கள் எதிர்ப்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரத்தை அறிவிக்காத ஏமாற்றத்தால், அரசு தாவரவியல் தினக் கூலி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தர்ணா

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் அரசு தாவரவியல் பூங்கா, காட்டேரிப் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா என ஏராளமான பூங்காக்கள் உள்ளன. இதில் பராமரிப்பு மற்றும் மலர் நாற்றுக்கள் உற்பத்தி செய்யும் பணிக்காக தினக் கூலி அடிப்படையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகின்றனர். இரவு பகல் பாராது மழை, கடும் குளிர் என எதையும் பொருட்படுத்தாது பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, கடந்த 3 ஆண்டுகளாக, ஒரு நாள் கூலியாக ரூ.250 வழங்கப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு மேலாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பணியாற்றி வருபவர்கள் பணி நிரந்தரம் வேண்டும், ஊதிய உயர்வு வேண்டும் என்ற கோரிக்கையை ஒவ்வோர் ஆண்டும் கோடை விழாவின் போது முன்வைத்து வருகின்றனர்.

இது குறித்து 27 ஆண்டுகளாக தினக் கூலி அடிப்படையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பணியாற்றிவரும் பெண் ஒருவர் கூறுகையில்,``ஆண்டுதோறும் கோடை விழாவின்போது பணி நிரந்தரம் செய்வதாகக் கூறி பெயர் பட்டியலை அதிகாரிகள் தயார் செய்கின்றனர். நாங்களும் அதை நம்பி இதுநாள் வரை ஏமாந்து வருகிறோம். இம்மாதம் முதல் வாரத்தில் பணி நிரந்தரம் வேண்டும் ஊதிய உயர்வு வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தினக்கூலி ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து 7 நாள்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எங்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில், `உங்களுக்கான ஊதியம் மிகவும் குறைவாக உள்ளதை உணர்கிறேன், ஊதிய உயர்வுக்காக அரசுக்குப் பரிந்துரை செய்கிறேன்’ என்று உறுதியளித்ததையடுத்து எங்கள் போராட்டத்தைக் கைவிட்டோம்.

இந்நிலையில், மலர்க் கண்காட்சியின் தொடக்க நாளான இன்று, தமிழக முதல்வர் எங்கள் கோரிக்கைகளை ஏற்று நல்ல முடிவை அறிவிப்பார் என எதிர்ப்பார்த்தோம். ஆனால் அவர், தற்போது வழங்கி வரும் ரூ.250 கூலி, ரூ.300ஆக வழங்கப்படும் என அறிவித்தது ஏமாற்றமளிக்கிறது. எங்களுக்காகப் பணி நிரந்தரம் மற்றும் உரிய ஊதியம் வழங்கும் வரை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க