வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (18/05/2018)

கடைசி தொடர்பு:08:52 (19/05/2018)

`நான் அரசியலுக்கு வர்றேன்!’ - ஆர்ஜே பாலாஜி நடிக்கும் எல்.கே.ஜி. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆர்.ஜே பாலாஜியின் அரசியல் பிரவேசத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியானது

கடந்த சில நாள்களாக ஆர்.ஜே. பாலாஜியிடம் அரசியல் நெடி தென்பட்டது. தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் பாலாஜியை அரசியலுக்கு வரவேற்பதுபோல் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டன. சமூக அக்கறை கொண்ட பாலாஜி, அரசியலில் இறங்கப்போகிறாரா என்ற கேள்வியும் உதித்தது. இதனிடையில், வைகோவுடன் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்தது இந்தக் கேள்வியை மேலும் வலுவாக்கினார், ஆர் ஜே பாலாஜி. கடைசியாக, இந்த பில்டப்பில் ஒரு பகுதியாக தனது முக்கிய முடிவை கிரிக்கெட் வீரர்கள் அறிவிப்பார்கள் என்றார். அப்படி என்னதான் செய்யப்போகிறார் பாலாஜி? என்ற எதிர்பார்ப்பை, மொக்கையாக முடித்துவைத்திருக்கிறார், ஆர்ஜே பாலாஜி.

ஆர்ஜே பாலாஜி

ஆம், இதுவரை செய்த விளம்பரங்கள் எல்லாமே ஆர்ஜே பாலாஜி அரசியல்வாதியாக நடிக்கவிருக்கும் `எல்.கே.ஜி' என்ற படத்திற்காகவாம்! இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டரில் வெளியிட்டு, ``ஆம், நான் அரசியலுக்கு வருகிறேன். திரைப்படத்தின் வாயிலாக!" எனச் சொல்லி, இதுவரை பரப்பிய வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இப்படத்துக்கு கதை, திரைக்கதையை ஆர்ஜே பாலாஜி எழுதியிருக்கிறார். போஸ்டரில் ஆர்ஜே பாலாஜியின் மோதிரம் மற்றும் பேட்ஜில் நாஞ்சில் சம்பத் படங்கள் இடம்பெற்றிருப்பதால், அவரும் இப்படத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இப்படத்தில் பாலாஜி ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்திருக்கிறார். `இதைத்தான் ராத்திரி பூரா ஒட்டிக்கிட்டிருந்திங்களா?' என்பதுபோல முடிந்திருக்கிறது, பாலாஜியின் அறிவிப்பு.

ஆர்.ஜே பாலாஜி | எல் கே ஜி