வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (13/06/2018)

கடைசி தொடர்பு:20:44 (13/06/2018)

பீலே, ரொனால்டோ, குளோஸ்... உலகக்கோப்பையின் டாப் ஸ்கோரர்கள்! #WorldCup

`டாப் ஸ்கோரர்கள்’ என்றாலே, இந்தத் தலைமுறை கால்பந்து ரசிகர்களின் நினைவுக்குவருவது `மெஸ்ஸியும் ரொனால்டோவும்’ மட்டுமே. ஆனால், அவர்கள் இருவருக்குமே இந்த லிஸ்ட்டில் இடம் இல்லை.

பீலே, ரொனால்டோ, குளோஸ்... உலகக்கோப்பையின் டாப் ஸ்கோரர்கள்! #WorldCup

நாளை தொடங்கவுள்ளது ஃபிஃபா உலகக்கோப்பை. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த உலகக்கோப்பைத் தொடரானது, 1930-ம் ஆண்டு முதல் ஃபிஃபாவால் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவருகிறது. உருகுவே சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய அந்த முதல் உலகக்கோப்பையிலிருந்து, ஜெர்மனி சாம்பியன் பட்டத்தை முத்தமிட்ட கடைசி 2014 உலகக்கோப்பை வரை, உலகின் தலைசிறந்த வீரர்களால் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. பிற்காலத்தில் வந்த சிறந்த வீரர்களால் அவை முறியடிக்கப்பட்டும் இருக்கின்றன.

`டாப் ஸ்கோரர்கள்’ என்றாலே, இந்தத் தலைமுறை கால்பந்து ரசிகர்களின் நினைவுக்குவருவது `மெஸ்ஸியும் ரொனால்டோவும்’ மட்டுமே. ஆனால், அவர்கள் இருவருக்குமே இந்த லிஸ்ட்டில் இடம் இல்லை. அந்த வகையில், முதல் ஐந்து இடங்களைப் பிடித்திருக்கும் `உலகக்கோப்பையின் ஆல்டைம் டாப் ஸ்கோரர்கள்’ பற்றியதே இந்தக் கட்டுரை.

#5 – பீலே (PELÉ)

14 உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாடி 12 கோல்கள் அடித்துள்ள, `கால்பந்து உலகின் பிதாமகன்’ பீலே, `உலகக்கோப்பையின் ஆல்டைம் டாப் ஸ்கோரர்கள்’ லிஸ்ட்டில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். 1958 உலகக்கோப்பையில் பிரான்ஸுக்கு எதிரான அரை இறுதியில் `மாற்றுவீரராக’ களமிறங்கிய பீலே, இரண்டாம் பாதியில் `ஹாட்ரிக்’ கோல் அடித்தார். அதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் கோல் அடித்த இளம் வீரரானார். அந்தத் தொடரில் ஸ்வீடனுக்கு எதிரான ஃபைனலில், பீலே இரண்டு கோல்கள் அடிக்க, 5-2 என்ற கோல்கணக்கில் கோப்பையை வென்றது பிரேசில். அந்தப் போட்டியில் பீலே, பந்தை டிஃபெண்டரின் தலைக்கு மேலே `ஃப்ளிக்’ செய்து, சூப்பரான `வாலி’ கோல் அடித்தார். பீலேவின் அந்த முதல் கோல், உலகக்கோப்பை வரலாற்றின் சிறந்த கோல்களில் ஒன்றாக இன்றும் விளங்குகிறது.

பீலே - உலகக் கோப்பை

1962 உலகக்கோப்பையில், மெக்ஸிகோவுக்கு எதிரான முதல் போட்டியில் நான்கு டிஃபெண்டர்களைக் கடந்து, அந்தப் போட்டியின் இரண்டாவது கோலை அடித்தார் பீலே. காயத்தால் துரதிர்ஷ்டவசமாக அந்தத் தொடரிலிருந்து பீலே விலகினாலும் கோப்பையை பிரேசிலே வென்றது. 1966 உலகக்கோப்பையில் பல்கேரியாவுக்கு எதிரான முதல் போட்டியில் `ஃப்ரீகிக்’ மூலம் கோல் அடித்த பீலே, பிறகு பல்கேரிய டிஃபெண்டர்களால் காயப்படுத்தப்பட்டார். அடுத்தடுத்த போட்டிகளில் தோற்றதால், தொடரைவிட்டு வெறியேற்றப்பட்ட பிரேசில், முதல் சுற்றோடு நடையைக்கட்டியது.

பீலேவின் கடைசி உலகக்கோப்பையான 1970 உலகக்கோப்பையில், செக்கோஸ்லொவாக்கியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கோல் அடித்த பீலே, ஜெர்சன் கொடுத்த `லாங் பாஸை’, தனது மார்பில் சூப்பராகக் கட்டுப்படுத்தி பிறகு ஸ்கோர் செய்தார். ரோமானியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இரண்டு கோல்கள் அடித்த பீலே, இத்தாலிக்கு எதிரான ஃபைனலில் இத்தாலிய டிஃபெண்டர் பர்க்னிச்ஸை முந்திக்கொண்டு `ஹெட்டிங்’ செய்து, பிரேசில் சாம்பியனாக வாகை சூடிய அந்தப் போட்டியின் ஓப்பனிங் கோலையும் அடித்தார்.   

பிரேசிலுக்காக 92 போட்டிகளில் விளையாடி, 77 கோல்கள் அடித்துள்ளார் பீலே. நான்கு முறை உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ள பீலேதான், `பிரேசிலின் ஆல்டைம் டாப் ஸ்கோரர்.’

#4 – ஜஸ்ட் ஃபோன்டைன் (JUST FONTAINE)

வெறும் ஆறு உலகக்கோப்பைப் போட்டிகளில் களமிறங்கி, 13 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார் முன்னாள் பிரான்ஸ் ஸ்டிரைக்கரான ஜஸ்ட் ஃபோன்டைன். 1958 உலகக்கோப்பையில் களமிறங்கிய ஃபோன்டைன், பாராகுவேக்கு எதிரான தனது முதல் போட்டியிலேயே, `ஹாட்ரிக்’ கோல் அடித்தார். தனது இரண்டாவது போட்டியிலும் இரண்டு கோல்கள் அடித்த ஃபோன்டைன், ஸ்காட்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் ஒரு கோல் அடித்தார். பிறகு, வடக்கு அயர்லாந்துக்கு எதிரான கால் இறுதியில் இரண்டு கோல்கள் அடித்தவர், பிரேசிலுக்கு எதிரான அரை இறுதியின் முதல் பாதியில் ஒரு கோல் அடித்தார். அந்தப் போட்டியில் தோற்றதால் பிரான்ஸ் அரை இறுதியோடு வெளியேறியது.

ஜஸ்ட் ஃபான்டெய்ன் - உலகக் கோப்பை

உலகக் கோப்பையில் 10 கோல்களுக்கு மேல் அடித்தவர்கள் யார்? ஆல்பம்

தனது முதல் ஐந்து போட்டிகளில் ஒன்பது கோல்கள் அடித்திருந்த ஃபோன்டைன், மூன்றாம் இடத்துக்கான போட்டியில் வடக்கு ஜெர்மனிக்கு எதிராகக் களமிறங்கி நான்கு கோல்கள் அடித்தார். அதன்மூலம் ஓர் உலகக்கோப்பையில் 11 கோல்கள் அடித்திருந்த ஹங்கேரியின் சாண்டோர் கோக்சிஸ்சின் சாதனையை முறியடித்தார். தான் விளையாடிய, ஒரே ஓர் உலகக்கோப்பையில் 13 கோல்கள் அடித்த ஃபோன்டைன், தொடரின் `டாப் ஸ்கோரர்’ பட்டத்தை தட்டிச் சென்றார். `ஓர் உலகக்கோப்பைத் தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர்’ என்ற சாதனையும் இவருடையதே!

#3 – ஜெர்ட் முல்லர் (GERD MUELLER)

13 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி 14 கோல்கள் அடித்துள்ளார் ஜெர்ட் முல்லர். 1970 உலகக்கோப்பையில் மொராக்கோவுக்கு எதிரான முதல் போட்டியில் ஒரு கோல் அடித்த முல்லர், பல்கேரியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஒரு `பெனால்டி’ உள்பட `ஹாட்ரிக் கோல்’ அடித்தார். பெருவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில், முதல் பாதி முடிவதற்குள்ளேயே மீண்டும் ஒரு `ஹாட்ரிக் கோல்’ அடித்து பட்டையைக் கிளப்பிய முல்லர், இங்கிலாந்துக்கு எதிரான கால் இறுதியில், `இன்ஜுரி டைமில்’ ஒரு `வின்னிங் கோல்’ அடித்து, தனது அணியை அரை இறுதிக்கு அழைத்துச் சென்றார். ஆனால், இத்தாலிக்கு எதிரான அரை இறுதியில் முல்லர் இரண்டு கோல்கள் அடித்திருந்தாலும்கூட, நூலிழையில் தோற்று வெளியேறியது மேற்கு ஜெர்மனி.

ஜெர்ட் முல்லர்

1974 உலகக்கோப்பையின் முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஒரு கோல் அடித்தவர், இரண்டாவது சுற்றில் யூகோஸ்லாவியா மற்றும் போலந்து அணிகளுக்கு எதிராகவும் தலா ஒரு கோல் அடித்தார். கடைசியாக, நெதர்லாந்துடனான இறுதிப்போட்டியில் வெற்றிக்கான இரண்டாவது கோலை அடித்து, மேற்கு ஜெர்மனியை சாம்பியனாக்கினார் முல்லர்.

இரண்டு முறை ஜெர்மனியின், `ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை’ வென்றிருக்கும் முல்லர், ஜெர்மனிக்காக 62 போட்டிகளில் விளையாடி 68 கோல்கள் அடித்துள்ளார். 1970 உலகக்கோப்பையின் டாப் ஸ்கோரருக்கான விருதையும் வென்றிருக்கிறார்.

#2 – ரொனால்டோ நசாரியோ (RONALDO NAZARIO)

19 உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாடி 15 கோல்கள் அடித்துள்ள பிரேசிலின் `உச்ச நட்சத்திரமான’ ரொனால்டோ நசாரியோ, உலகக்கோப்பையின் ஆல் டைம் டாப் ஸ்கோரர்கள் லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 1994 உலகக்கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்தாலும், ஒரு போட்டியில்கூட விளையாடாத ரொனால்டோ 1998 உலகக்கோப்பையில் சிறந்த வீரருக்கான விருதை வென்றார். அந்தத் தொடரின் இறுதிப்போட்டிக்குப் பிரேசில் முன்னேற, நான்கு கோல்கள் அடித்து உதவிசெய்த ரொனால்டோ, பிறகு `உடல்நலக் குறைபாடு’ காரணமாக இறுதிப்போட்டியில் அவதிப்பட, அந்தப் போட்டியில் பிரான்ஸிடம் தோற்றது பிரேசில்.

ரொனால்டோ

2002 உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான கால் இறுதியைத் தவிர அனைத்துப் போட்டிகளிலுமே கோல் அடித்த ரொனால்டோ, ஜெர்மனிக்கு எதிராக ஃபைனலில் அடித்த இரண்டு கோல்கள் உள்பட மொத்தம் எட்டு கோல்கள் அடித்து, அந்தத் தொடரின் `டாப் ஸ்கோரர்’ விருதைத் தட்டிச்சென்றார். அத்துடன் உலகக்கோப்பைத் தொடர்களில் 12 கோல்கள் அடித்திருந்த பீலேவின் சாதனையையும் சமன் செய்தார். மேலும், அந்தத் தொடரில் பிரேசில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முக்கியக் காரணமாகவும் விளங்கினார் ரொனால்டோ.

2006 உலகக்கோப்பையில் ஜப்பானுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இரண்டு கோல்களும், கால் இறுதியில் கானாவுக்கு எதிரான போட்டியில் ஒரு கோலும் அடித்த ரொனால்டோ, ஒட்டுமொத்தமாக 15 உலகக்கோப்பை கோல்களுடன் ஜெர்ட் முல்லரின் சாதனையை முறியடித்தார். ரொனால்டோவின் இந்தக் கடைசி உலகக்கோப்பைத் தொடரில் கால் இறுதியிலேயே வெளியேறியது பிரேசில்.

பிரேசிலுக்காக 98 போட்டிகளில் கலந்துகொண்டு 62 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ, இரண்டு முறை உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

#1 – மிரோஸ்லேவ் குளோஸ் (MIROSLAV KLOSE)

24 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி 16 கோல்கள் அடித்துள்ள, ஜெர்மனியின் முன்னாள் ஸ்டிரைக்கரான குளோஸ்தான் உலகக்கோப்பையின் டாப் கோல்ஸ்கோரர். 2002 உலகக்கோப்பையில் சவுதி அரேபியாவுக்கு எதிரான முதல் போட்டியில் `ஹாட்ரிக் கோல்’ அடித்த அவர், அயர்லாந்து மற்றும் கேமரூன் அணிகளுக்கு எதிரான தனது அடுத்த போட்டிகளில் தலா ஒரு கோல் அடித்தார். அவர் அடித்த அந்த ஐந்து கோல்களுமே `சூப்பர் ஹெடர்கள்’. அதன்மூலம் ஓர் உலகக்கோப்பையில் ஐந்து `ஹெடர்கள்’ அடித்த முதல் வீரரானார்.

2006 உலகக்கோப்பையில் கோஸ்டாரிகாவுக்கு எதிரான முதல் போட்டியில் இரண்டு கோல்களும், ஈக்வடாருக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இரண்டு கோல்களும் அடித்தவர், அர்ஜென்டினாவுக்கு எதிரான கால் இறுதியில் ஒரு `ஈக்வலைஸர்’ கோல் அடித்தார். ஜெர்மனி மூன்றாவது இடத்தைப் பிடித்த அந்தத் தொடரில் மொத்தம் ஐந்து கோல்கள் அடித்த குளோஸ், தொடரின் `டாப் ஸ்கோரர்’ விருதைப் பெற்றார்.

குளோஸ்

2010 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இரண்டாவது கோலை அடித்தவர், இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த சுற்றுப் போட்டியில் `ஓப்பனிங் கோல்’ அடித்தார். அர்ஜென்டினாவுக்கு எதிரான கால் இறுதியில் இரண்டு கோல்கள் அடித்து, 14 உலகக்கோப்பை கோல்களுடன் ஜெர்ட் முல்லரின் சாதனையையும் சமன்செய்தார். 2014-ல் தனது இறுதி உலகக்கோப்பையில் விளையாடிய குளோஸ், கானாவுக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் அடித்து ரொனால்டோவின் சாதனையைச் சமன்செய்தார்.

மேலும், `நான்கு வெவ்வேறு உலகக்கோப்பைகளில் கோல் அடித்த மூன்றாவது வீரர்’ என்ற சாதனையையும் படைத்தார். பிறகு பிரேசிலுக்கு எதிரான அரை இறுதியில் 23-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து, மொத்தம் 16  உலகக்கோப்பை கோல்களுடன், ரொனால்டோவின் சாதனையை முறியடித்து, `உலகக்கோப்பை வரலாற்றில் ஆல்டைம் டாப் ஸ்கோரர்கள்’ பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். அந்தத் தொடரில் ஜெர்மனியும் அர்ஜென்டினாவை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ஜெர்மனியின் `ஆல்டைம் டாப் ஸ்கோரரான’ இவர், ஜெர்மனிக்காக 137 போட்டிகளில் விளையாடி 71 கோல்கள் அடித்துள்ளார்.


டிரெண்டிங் @ விகடன்