கொடிகட்டிப் பறக்கும் தங்கக்கடத்தல்... திகில் திருச்சி விமான நிலையம்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாட்டுக்கு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சியிலிருந்து வெளிநாடுகளுக்குத் தங்கம் மற்றும் போதை பொருள்கள் கடத்தல் கொடிகட்டிப் பறக்கிறது. அதிலும் கடந்த இரண்டு மாதங்களில் கடத்தல் தங்கம் அதிகம் பிடிபட்டது திருச்சியில்தான்.

தங்கம்

நேற்று இரவு துபாயிலிருந்து திருச்சிக்கு ஏர்இந்தியா விமானம் ஒன்று வந்துசேர்ந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ரகுமான் என்ற பயணியைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று நவீன ஸ்கேன் கருவி மூலம் சோதனை செய்தனர். இதில், அவரின் உள்ளாடைக்குள் மறைத்துவைத்துக் கடத்தப்பட்ட 4.63 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 149 கிராம் தங்கம் சிக்கியது. கடந்த சில நாள்களுக்கு முன்பு அமெரிக்க டாலர் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்ததாக ஏற்கெனவே மலேசிய பெண் உள்பட 2 பேரும் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 6 ம் தேதி மலேசியாவிலிருந்து திருச்சி வந்த தனியார் விமானம் ஒன்றில், பயணம் செய்த மலேசியாவைச் சேர்ந்த தேவசுபத்ரா என்ற பெண் தனது உள்ளாடையில் 268 கிராம் தங்கத்தை மறைத்துவைத்துக் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு 8¼ லட்சம் ரூபாய். இதேபோல் கடந்த 5 ம் தேதி மஜ்துனிசா என்பவர் 1,299 கிராம் தங்கத்தை மலேசியாவிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு 40 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. அடுத்து ஜூன் 2 ம் தேதி ஷார்ஜாவிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், சென்னையைச் சேர்ந்த அருண் என்பவர் கடத்தி வந்த 2.32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 75 கிராம் தங்கம் பிடிபட்டது.

இதேபோல் மே 20 ம் தேதி சிங்கப்பூரிலிருந்து வந்த விமானம் ஒன்றில், புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் 300 கிராம் எடை கொண்ட தங்கத்தை ஸ்டேப்லரில் மறைத்துவைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரிடமிருந்தும் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர் அதிகாரிகள். இதன் மதிப்பு 9 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்.

தங்கம்

அடுத்தடுத்து இதுபோல், தங்கம் கடத்தப்படுவதால் சுங்கத்துறை அதிகாரிகள் அதீத விழிப்புடன் சோதனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். `கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட தங்கம் பிடிபட்டிருப்பதாகவும், இது கடந்த சில வருடங்களோடு ஒப்பிடும்போது மிகவும் அதிகம்' என்கிறார்கள் சுங்கத்துறை அதிகாரிகள். திருச்சி சர்வதேச விமான நிலையம், தமிழகத்தின் மையப்பகுதியாக உள்ளதால், தென் மாவட்டங்களுக்கு மிக முக்கியமான இடமாக விளங்குகிறது. இதனால் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூடவே கடத்தல் சம்பவங்களும் பெருகிவருகின்றன.

தங்கக் கடத்தலுக்கான ஏஜெண்டுகள் நிறையபேர் உள்ளனர். இவர்கள், வறுமையில் வாடும் கிராமப்பெண்கள், வேலையில்லா இளைஞர்களைக் குறிவைத்து காய் நகர்த்துகிறார்கள். டிக்கிலோனா, குருவி, கொக்கு எனும் சங்கேத வார்த்தைகள் தங்கக் கடத்தலில் பயன்படுத்தப்படுகிறது. `விமானத்தில் தங்கம் கடத்திக் கொண்டுவரும் நபர்கள் குருவிகள். வெளியில் இருக்கும் நபர்களான கொக்குகள் எனப்படும் தரகர்களிடம் தங்கத்தைக் கொடுத்துவிட்டால், வேலை முடிந்தது. ஒரு முறை இப்படிப் போய்வந்தால் 10 ஆயிரம் ரூபாய் கூலியாகக் கிடைக்கும். மாதம் 3 முறை இப்படிப் போய்வரலாம்' என அப்பாவி மனிதர்களிடம் நைசாகப் பேசி, பாஸ்போர்ட் எடுக்க வைத்து, அவர்களைக் கடத்தல் தொழிலுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

இதற்கிடையில், `திருச்சியில் தங்கக் கடத்தல் தாராளமாக உள்ளதால், இதன் பின்னணியில் அதிகாரிகள் சிலரும் உடந்தையாக உள்ளனர்' என்கிற குற்றச்சாட்டும் உள்ளது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!