வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (15/06/2018)

கடைசி தொடர்பு:12:35 (15/06/2018)

புதுச்சேரிக்கு ஒருநீதி, தமிழகத்துக்கு ஒரு நீதியா? - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேள்வி

``டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பது சந்தர்ப்பவாத தீர்ப்பு” என புதுச்சேரி  முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி

`தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை' எனக் கூறி ஆளுநரிடம் மனு அளித்த 18 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார். அதையடுத்து, அந்த 18 எம்.எல்.ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார் சபாநாயகர் தனபால். அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில், ’சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது’ என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், ‘தகுதி நீக்கத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாததால் சபாநாயகரின் உத்தரவு செல்லாது’ என அதே அமர்வில் இருந்த நீதிபதி சுந்தரும் தீர்ப்பளித்தனர். நீதிபதிகளின் இந்த இருவேறு கருத்துகளால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு அனுப்பப்படுகிறது என்று அறிவித்திருக்கிறது நீதிமன்றம்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள்

இந்நிலையில், புதுச்சேரி அரசின் வக்பு வாரியம் சார்பில் அதன் அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ``புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் புதுச்சேரி சபாநாயகர் முடிவில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டது. ஆனால், இன்றைய தினம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று ஒரு நீதிபதியும், சபாநாயகர் உத்தரவு செல்லாது என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். இது சந்தர்ப்பவாத தீர்ப்பாக தெரிகிறது. சபாநாயகரின் அதிகாரத்தில் புதுச்சேரி மாநிலத்துக்கு ஒருநீதி ? தமிழகத்துக்கு ஒரு நீதியா ?” என கேள்வி எழுப்பினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க