வெளியிடப்பட்ட நேரம்: 12:47 (15/06/2018)

கடைசி தொடர்பு:13:17 (15/06/2018)

அந்நியர்களிடமிருந்து தெரு மக்களைக் காத்த நாய்கள்! - நள்ளிரவில் நடந்த கொடூரம்

நாய்கள்

சென்னை நீலாங்கரையில் நான்கு நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளதோடு, ஆத்திரம் தீராத கும்பல், நாய்களைத் தீ வைத்து எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி-யில் சாலை அமைக்கும்போது உயிரோடு உள்ள ஒரு நாயின் மீது தார் ஊற்றப்பட்டது. இதனால், சாலையின் ஓரத்தில் நாய் சிக்கிக் கொண்டது. மேலும், சாலையிலிருந்து  நகர முடியாமல் நாய் உயிரிழந்தது. இதுதொடர்பான செய்தி புகைப்படத்துடன் வெளியானதும் விலங்குநல ஆர்வலர்களும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சூழ்நிலையில் சென்னை நீலாங்கரையில் நான்கு நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளன. மேலும், அதில் ஒரு நாய் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

சரிதா

இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர் சரிதா கூறுகையில்,``நீலாங்கரைப் பகுதியில் உள்ள தெரு நாய்கள் குறித்து சமீபத்தில் கணக்கெடுக்கப்பட்டது. அதில் 74 நாய்கள் இருப்பது எங்களுக்குத் தெரியவந்தது. நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றுக்கு குடும்பக்கட்டுப்பாடு தடுப்பு ஊசி போடப்பட்டது. அதுதொடர்பாக அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். நாய்களால் அந்நியர்கள், திருடர்கள் யாரும் அங்கு செல்ல முடியாத நிலை இருந்தது. இந்தச் சமயத்தில்தான் நான்கு தெரு நாய்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளன. இரண்டு நாய்களின் தலைப் பகுதி சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாயை எரித்துள்ளனர். இது, எங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷம் வைத்து நள்ளிரவில் நாய்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதனால், கால்நடை மருத்துவமனையில் நான்கு நாய்களுக்கும் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. அதன்முடிவில்தான் நாய்களின் இறப்புக்கான காரணம்  தெரியவரும். மேலும், நாய்களைக் கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் ரிக்காடோ என்பவர் புகார் கொடுத்துள்ளார். மேலும், அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். நாய்களைக் கொன்றவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்'' என்றனர். 

விஷம் வைத்துக்கொல்லப்பட்ட நாய்கள்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர், 4-வது தெற்கு குறுக்குத் தெருவில் நான்கு நாய்கள் இறந்து கிடப்பதாக எங்களுக்கு புகார் வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினோம். எங்களிடம் புகார் கொடுத்தவர், நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்றபோது, ஒரு நாய் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் கருகிய நிலையில் எலும்புக்கூடாக அந்த நாய் உள்ளது. இதனால், நாயைக் கொன்றவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம். இதற்கு முன்பும் அந்தப் பகுதியில் நாய்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. நாய்களைக் கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.