`ஏழு பேரும் நிச்சயம் விடுதலை ஆவார்கள்!’ - அமைச்சர் சி.வி.சண்முகம் ஆரூடம்

`பேரறிவாளன் உட்பட ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள்; இதற்கான நடவடிக்கையைத் தமிழக அரசு நிச்சயம் எடுக்கும்' எனத் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

சி.வி சண்முகம் பேரறிவாளன்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட ஏழு பேர். `இவர்களைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்' என மத்திய அரசுக்கு இரண்டு கடிதங்களை எழுதியிருந்தது தமிழக அரசு. இந்தக் கடிதங்களை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இந்நிலையில், ஏழு பேரின் விடுதலை தொடர்பாகத் தமிழக அரசின் கோரிக்கையைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், `ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனைப் பெற்று வருபவர்களை, கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, மத்திய அரசு தமிழக அரசின் தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், சில தெளிவுரைகள் வழங்கப்பட்டது. தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், `விடுதலை தொடர்பாகத் தமிழக அரசு மூன்று மாதங்களுக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும்' என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதற்குத் தமிழக அரசும் விளக்கம் அனுப்பியது. இந்தச் சூழலில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைபடி, தமிழக அரசின் கோரிக்கை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இருந்தாலும், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால், விசாரணைக்கு வரும்போது தமிழக அரசின் சார்பில், எங்களுடைய விளக்கத்தைத் தெளிவாக முன்வைப்போம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனைப் பெற்று வருபவர்கள் நிச்சயமாக விடுதலை செய்யப்படுவார்கள்' என்றார் உறுதியாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!