`கருணாநிதியை நேரில் பார்த்தேன்; நலமாக இருக்கிறார்!'- முதல்வர் பழனிசாமி பேட்டி #Karunanidhi | Edappadi palanisamy about Karunanidhi health

வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (30/07/2018)

கடைசி தொடர்பு:13:03 (30/07/2018)

`கருணாநிதியை நேரில் பார்த்தேன்; நலமாக இருக்கிறார்!'- முதல்வர் பழனிசாமி பேட்டி #Karunanidhi

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று கேட்டறிந்தனர்.

எடப்பாடி பழனிசாமி
 

கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் ஓய்வில் இருக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை, வயது முதுமை காரணமாக சற்று நலிவடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நிலையில் நேற்றிரவு தற்காலிகப் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்றிரவு முதலே தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவியத் தொடங்கிவிட்டனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்த வதந்தியால்  தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பதற்றம் நிலவியது. நேற்று நள்ளிரவு மருத்துவமனையைச் சுற்றி அதிகளவில் போலீஸ் குவிக்கப்பட்டது தொண்டர்களின் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியது.

கருணாநிதி

இதையடுத்து `கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு தற்போது அவர் நலமாக உள்ளார்’ என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்பிறகு தொண்டர்கள் சற்று அமைதியாகினர். இதனிடையே சேலத்தில் இன்று நடைபெற இருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவே சென்னை திரும்பினார். இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர்.  

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர்,  `முன்னாள் முதல்வர், பெரியவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோருடன் கருணாநிதியை நேரடியாகச் சென்று பார்த்தேன். அவர் நலமுடன் இருக்கிறார். மருத்துவக்குழு அவரைக் கவனித்து வருகிறது’ என்று தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க