`கோபாலபுரத்தில் குவிந்த தொண்டர்கள்!’ - கருணாநிதி உடலுக்கு மம்தா பானர்ஜி, ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

சென்னை கோபாலபுரம் இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்ட மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலுக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நடிகர் ரஜினிகாந்த், திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலிசெலுத்தினர். 

கருணாநிதிக்கு ஏற்பட்ட ரத்த அழுத்தக் குறைபாடு காரணமாகக் கடந்த மாதம் 28-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.

மம்தா பானர்ஜி

அதையடுத்து, 9 மணி அளவில் காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரத்திலுள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு அவரது உடல் கொண்டுசெல்லப்பட்டது. தி.மு.க தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்ததால், கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லம் வருவதற்கு சுமார் இரண்டு மணி நேரம் தேவைப்பட்டது.

கோபாலபுரம் இல்லத்தில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நடிகர் ரஜினிகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் ஆகியோர் அஞ்சலி செலுத்திச்சென்றனர். கோபாலபுரம் இல்லத்தைச் சுற்றி, தி.மு.க தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்ததால், தலைவர்கள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலேயே அஞ்சலிசெலுத்த முடிந்தது. 

கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய பிறகு பேசிய திருமாவளவன், 'அரசியல், சமூகம், இலக்கியத்துறைகளில் சாதனை படைத்த கருணாநிதிக்கு, மத்திய அரசு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும். ஜெயலலிதா உடலைப்போல கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம்செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!