நக்மாவுக்கு எம்.எல்.ஏ. முத்தம்; நானாக இருந்தால் அடித்திருப்பேன்: நடிகை குஷ்பு ஆவேசம்! | MLA Kiss Nagma; if this happens to me i have beaten him: Khushboo furious

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (27/03/2014)

கடைசி தொடர்பு:12:00 (27/03/2014)

நக்மாவுக்கு எம்.எல்.ஏ. முத்தம்; நானாக இருந்தால் அடித்திருப்பேன்: நடிகை குஷ்பு ஆவேசம்!

சென்னை: காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் நக்மாவுக்கு முத்தமிட்டதுபோல் எனக்கு நடந்திருந்தால் அடித்திருப்பேன் என்று நடிகை குஷ்பு ஆவேசப்பட்டு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு பிரசாரம் செய்ய உள்ளார். அவர், 17 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்வார் என்று தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு குஷ்பு அளித்த பேட்டி வருமாறு:

கடந்த ஆண்டு உங்கள் வீடு மீது தி.மு.க.வினர் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு பிறகு தி.மு.க.வுடனான உங்கள் உறவு எப்படி உள்ளது?

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். தி.மு.க.வுடனும், தி.மு.க. தலைமையுடனான எனது உறவு எப்போதும் நன்றாகவே உள்ளது. திருச்சி மாநாட்டில் எனக்கு பேச வாய்ப்பு தரப்பட்டது. எனவே தி.மு.க.வுடனான எனது பணிகள் எப்போதும் போல தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

மு.க.ஸ்டாலின்தான் அடுத்த வாரிசு என்ற விஷயம் தொடர்பாக கடந்த ஆண்டு நீங்கள் தெரிவித்த கருத்துக்கு பிறகு, நீங்கள் தி.மு.க.வில் ஓரம் கட்டப்படுவதாக சொல்லப்படுகிறதே?

அடிப்படையற்ற இத்தகைய வதந்திகளுக்கு பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை. யூகத்தின் பேரில் கேட்கப்படும் இத்தகையை கேள்விகளுக்கு நான் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. கட்சியில் எனக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தால் நான் தி.மு.க.வில் இருந்து விலகி இருப்பேன். ஆனால் இன்னமும் நான் தி.மு.க.வில்தான் இருக்கிறேன். சூறாவளி சுற்றுப் பயணத்துக்கு தயாராகி வருகிறேன்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் நக்மாவுக்கு முத்தமிட்டார் என்று வந்த செய்தி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நக்மா அந்த நபரை நிச்சயம் அடித்து இருக்க வேண்டும். நானாக இருந்தால் அடித்து இருப்பேன். அரசியலில் நக்மா என்னை விட மூத்தவர். இதையெல்லாம் எப்படி கையாள வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதிர்ஷ்டவசமாக இத்தகைய நிலை எனக்கு இதுவரை ஏற்படவில்லை. தி.மு.க.வில் என்னை போன்ற தொண்டர்கள் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளோம்.

நீங்கள் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவீர்கள் என்று முன்பு தகவல்கள் வெளியானது. நீங்கள் ஏன் போட்டியிட விண்ணப்பிக்கவில்லை?

எனது தலைவரும், கட்சி மூத்த நிர்வாகிகளும் நான் சரியான வேட்பாளராக இருப்பேன் என்று நினைத்து இருந்தால், நிச்சயமாக இவர்கள் என்னை தேர்ந்து எடுத்து இருப்பார்கள்.

உங்களது தேர்தல் பிரசாரம் எப்படி அமையும்?

2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் தி.மு.க. செய்த சாதனைகளை சொல்லி நான் வாக்குகள் கேட்பேன். மேலும், கடந்த 9½ ஆண்டுகளில் மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க.வின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வேன்.

இவை தவிர தற்போதைய அ.தி.மு.க. அரசின் தோல்விகள் பற்றியும் கூட்டங்களில் பேசுவேன். தி.மு.க. என்ன செய்யவில்லை. அ.தி.மு.க. என்ன செய்தது? என்பது பற்றி அ.தி.மு.க.வில் இருந்து யாராவது வந்து என்னிடம் கேட்டால் நிச்சயமாக அவர்களை பாராட்டி, பதில் சொல்ல காத்துக் கொண்டிருக்கிறேன்.

17 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்ய உங்கள் பயணத்திட்டம் வகுக்கப் பட்டுள்ளது. எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?

என் மகள்களை விட்டு பிரிய முடியாததால் தற்போது நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டேன். ஆனால் பாராளுமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருதடவை வருவதாகும். சூறாவளி பிரசாரத்துக்காக 17 நாள் அர்ப்பணிப்பது கஷ்டமானதுதான். என்றாலும் கட்சிக்காக கஷ்டங்களை தாங்கிக் கொண்டு இதை செய்ய தயாராக உள்ளேன்.

2ஜி ஊழலுடன் தொடர்புபடுத்தி, எதிர்க்கட்சிகள் தி.மு.க. மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்களே?

எதிர்க்கட்சிகாரர்களுக்கு தி.மு.க.வை குறை சொல்ல வேறு எதுவுமே இல்லை. எனவே அவர்கள் 2ஜி ஊழல் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள்.

விஜயகாந்த், சரத்குமார் இருவரும் உங்கள் தலைவரை விமர்சித்து பேசி வருகிறார்கள். நீங்கள் அவர்கள் இருவருக்கும் எதிராக பேசி பிரசாரம் செய்வீர்களா?

எனது கட்சிக்கோ அல்லது எனக்கோ விஜயகாந்தும், சரத்குமாரும் தனிப்பட்ட முறையில் எதிரானவர்கள் அல்ல. தனிநபர் விமர்சனத்தில் தி.மு.க.வுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, நான் தி.மு.க.வின் சாதனைகளையும், அ.தி.மு.க. அரசின் தோல்விகளை பற்றி மக்களிடம் சொல்லி வாக்குகள் கேட்பேன்.

இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்