வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (07/07/2014)

கடைசி தொடர்பு:18:19 (07/07/2014)

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு: தூக்கை எதிர்க்கும் மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்!

தர்மபுரி/புதுடெல்லி: தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளிகள் 3 பேர் தாக்கல் செய்த மனுவை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானல், பிளசன்ட் ஸ்டே ஓட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நீதி மன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, கடந்த 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தீர்ப்பு கூறியது.

இதனையடுத்து அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவ மாணவிகள் பயணம் செய்த பேருந்து, தருமபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் சென்றபோது, அ.தி.மு.க.வினர் பேருந்தை தீ வைத்துக் கொளுத்தினர்.

இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா என்ற மூன்று மாணவிகள் தீயில் கருகி பலியாயினர். இந்த வழக்கில் சேலம் நீதிமன்றம், 2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் முனியப்பன், நெடுஞ் செழியன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு மரண தண்டனையும், 25 பேருக்கு தலா இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் அளித்து தீர்ப்பு கூறியது. இதே ஆண்டு டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்றமும் இந்த தண்டனையை உறுதி செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்கூறிய  3 முக்கிய குற்றவாளிகளுக்கும் வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை உறுதி செய்து கடந்த  2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

ஆனால் தங்களது மனுவை  உச்ச நீதிமன்ற 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது ஏற்புடையதல்ல என்று கூறி, தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை குறைக்கக் கோரி மேற்கூறிய மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, குற்றவாளிகள் 3 பேரும் தாக்கல் செய்த மனுவை, 5 நீதிபதிகள் கொண்ட  அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்