வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (20/03/2015)

கடைசி தொடர்பு:17:11 (20/03/2015)

அரசியலை உள்ளே கொண்டு வராதீர்கள்! ( ஜெ. வழக்கு விசாரணை -2)

சுப்ரமணியசாமியை அடுத்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் குமரேசன் எழுந்தார்...

குமரேசன்: இந்த வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உதவியாகவும், சிறப்பு நீதிமன்றம் அனுமதித்தைப்போல இந்த வழக்கில் எங்களை 3 ம் தர வாதியாக சேர்த்துக்கொண்டு எங்களுடைய எழுத்துபூர்வமான வாதத்தை பதிவுசெய்ய வேண்டும்.

நீதிபதி: இந்த வழக்குக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?
குமரேசன்: 2004 -ல் சென்னையில் இருந்து இந்த வழக்கு பெங்களுக்கு மாற்ற என் மனுதாரர் அன்பழகன்தான் காரணம்.

நீதிபதி: யார் அந்த அன்பழகன்?
குமரேசன்: திமுக பொதுச்செயலாளர். உச்சநீதிமன்றம் எங்களையும் 3 ம் தர வாதியாக சேர்த்துக்கொள்ள அனுமதித்திருக்கிறது.

நீதிபதி: நீதிமன்றத்துக்குள் அரசியலைக் கொண்டுவராதீர்கள். அரசியல் பேச பாராளுமன்றம் இருக்கிறது. சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதித்து இருக்கலாம். மேல்முறையீட்டு மனுவில் ஏற்கெனவே வாதி, பிரதிவாதி இருக்கிறார். உங்களைப்போல பலரும் வருவார்கள். மேல்முறையீடு என்பது கீழ்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் குற்றச்சாட்டுகள் தவறானது என்பதை வாதிடுவதும், அதை மறுப்பதும்தான் வேலை. 3 ம் தரப்புக்கு இங்கு வேலை இல்லை. 

குமரேசன்: இதுபற்றி விரிவாக பேச எங்கள் சீனியர் வழக்கறிஞர் ராகேஷ் நாளை வருவார்.
நீதிபதி: "அவர் வருவதற்காக காத்திருக்க முடியாது. அவர் உள்ளூரைச் சேர்ந்தவர்தானே? உடனே வரவழைக்க முடியாதா? இந்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் வந்து விவரிக்கட்டும் பார்க்கலாம்’’ என்றவர், பவானிசிங்கைப் பார்த்து, ‘‘என்ன இது? பலரும் உங்களுக்குப் பதிலாக வாதிட கேட்கிறார்கள். ஆட்சேபணை தெரிவிக்கவில்லையா?’’ என்றார்.

பவானிசிங், ‘‘அவர்கள் கேட்கிறார்கள். நான் அனுமதிக்க கூடாது என்று எழுத்துபூர்வமாக மனு கொடுத்திருக்கிறேன்’’ என்றார். 
 
மதியத்துக்கு மேல் அன்பழகனின் தரப்பு மனுவை வாங்கிக்கொண்டு அரசு தரப்பையும், ஜெ தரப்பையும் ஆட்சேபணை மனு தாக்கல் செய்ய சொன்னார்.

ஒழுங்கீனமாக செயல்பட கூடாது

நீதிமன்றத்துக்குள் நீதிபதி குமாரசாமி தலைமையில் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, நீதிமன்றத்துக்குள் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் கும்பலாக நின்றுகொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து கடுப்பான நீதிபதி குமாரசாமி, ‘‘நீதிமன்றத்துக்கு என்று ஒரு மாண்பு இருக்கிறது. இப்படி ஒழுங்கீனமாக கும்பல் கும்பலாக நிற்கக் கூடாது. இருக்கைகள் இருக்கிறது. அதில் அமர்ந்து அமைதி காக்க வேண்டும்’’ என்றார்.

கம்பெனி வழக்கு ஏற்கப்பட்டது

‘‘ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மெடோ அக்ரோ ஃபார்ம், லெக்ஸ் பிராப்பர்டீஸ், சைனோரா பைனாஸ்ஸ் உட்பட ஆறு கம்பெனிகள் குற்றவாளிகளுக்குச் சொந்தமானதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உண்மையில் குற்றவாளிகளுக்கும் இந்த கம்பெனிகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆக, கம்பெனிகளின் சொத்துகள் குற்றவாளிகளுக்குச் சொந்தமானது என்ற தீர்ப்பை ரத்துசெய்ய வேண்டும். கம்பெனிகள் சார்பாக நாங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை இந்தச் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையோடு சேர்த்து விசாரிக்க வேண்டும்’’ என்று கம்பெனிகள் சார்பாக ஆஜரான உதயஹொள்ளா வாதிட்டார்.

அதைக் கேட்ட நீதிபதி குமாரசாமி, ‘‘இந்த மனுவை ஏற்றுக்கொள்ளுகிறேன். நான் நேரம் கொடுக்கும்போது உங்கள் தரப்பு வாதத்தை வைக்கலாம்’’ என்றார்.

முதல் வார்த்தையே வாய்தா...

சிறப்பு நீதிமன்றம் ஜெ தரப்பு மீது முக்கியமாக வைத்த குற்றச்சாட்டு... ‘நீதிமன்றத்தை நடத்தவிடாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடித்தார்கள்’ என்பதுதான். மேல்முறையீட்டு விசாரணையிலும் ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமார், மணிசங்கரின் முதல் வார்த்தையே வாய்தா வேண்டும் என்பதுதான்.

ஜெயலலிதா தரப்பு மூத்த வழக்கறிஞர் குமார்: 12 ஆம் தேதி வரை எங்களுக்கு வாய்தா வேண்டும்.
நீதிபதி: எதற்கு வாய்தா?

குமார்: டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் வாதிட வர இருப்பதால் 12 ஆம் தேதி வரை ஒத்தி வைக்க வேண்டும்.
நீதிபதி: இந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் மூன்று மாதங்களில் முடிக்கச் சொல்லி இருக்கிறது. அதனால் 1 மணி நேரம்கூட தர முடியாது. நீங்களே மூத்த வழக்கறிஞர்தானே? நீங்களே வாதிடலாம்.

குமார்: மூன்று மாதங்களுக்குள் முடித்துவிடலாம்.
நீதிபதி: வாயால் சொல்வதற்கு நன்றாக இருக்கும், மூன்று மாதங்களில் முடிப்பது கஷ்டம். அதனால் உங்கள் வாதத்தை ஆரம்பியுங்கள். 

இதை கேட்டு குமார் தயங்க... நீதிபதி குமாரசாமி, ‘‘சரி... அவர்கள் வருவதற்குள் வழக்கு பற்றிய வரலாற்றையும், எஃப்.ஐ.ஆர்., குற்றப்பத்திரிகை, சொத்து விவர அட்டவணைகளை வாசியுங்கள்’’ என்றார்.

அதையடுத்து குமார் ஆரம்பத்தில் இருந்து அனைத்தையும் வாசித்தார். இடையிடையே சந்தேகத்தைக் கேட்டு அறிந்துகொண்டார் நீதிபதி. மாலை நிறைவு செய்யும்போது குமார், ‘‘2 நாட்களாவது வாய்தா கொடுங்கள்’’ என்றார்.

நீதிபதி: "இவ்வழக்கு நாள்தோறும் நடைபெறும். நீங்களே நாளைக்கு வரவில்லை என்றால், மற்றவர்கள் வாதிடுவார்கள். எக்காரணம் கொண்டும் வழக்கை தாமதிக்க முடியாது’’ என்றார்.

கன்னடம் தெரியுமா?

குமார்: ஆரம்பத்தில் குற்றப்பத்திரிகையில் பதிவுசெய்த குற்றச்சாட்டுகள், அதற்கான பதில்கள் ஆகியவற்றை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ததில் பிழைகள் இருக்கின்றன. மீண்டும் தெளிவாக ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்.
நீதிபதி: (பவானிசிங்கிடம்) மொழிபெயர்ப்பு எங்கு செய்யப்பட்டது?

பவானிசிங்: தமிழ்நாட்டிலேயே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வந்தது.
குமார்: இல்லை. கர்நாடகத்தில்தான் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

நீதிபதி: (குமாரிடம்) உங்களுக்கு கன்னடம் தெரியுமா?
குமார். எனக்குத் தெரியாது. என் அம்மாவுக்கும், சகோதரிக்கும் கன்னடம் தெரியும். எனக்கு ஒரு விஷயம் தெரியக்கூடாது என்றால் என் முன்பே கன்னடத்தில் பேசிக்கொள்ளுவார்கள் என்றார்.

அதனைக் கேட்டு நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பு.

அதையடுத்து, இந்த ஆவணங்களை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்த்து வரும் 13 ஆம் தேதி கொடுக்க கர்நாடக மொழியாக்கல் துறைக்கு ஆணையிட்டார்.

அறுபதிகளில் கதாநாயகியின் சம்பளம் எவ்வளவு? - நீதிபதி கேட்ட குபீர் கேள்வி பற்றிய விவரம் நாளை...

- வீ.கே.ரமேஷ்

படங்கள்:
ரமேஷ் கந்தசாமி, வி.சதீஷ்குமார்

யார் இந்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி? ( ஜெ. வழக்கு விசாரணை -1) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்