கென்யாவின் மிஸ்டர் வி.ஐ.பி.!

மாண்டோக்கள் பெரிய துப்பாக்கிகளோடு 24 மணிநேரமும் ஒருவரைச் சுற்றி பாதுகாக்கிறார்கள் என்றால் அவர் நிச்சயம் வி.ஐ.பி.தான். இதில் ஏதும் சந்தேகம் இல்லை. தனி டாக்டர்கள், தனி வேலையாட்கள் என்று கென்யா காட்டில் ராஜஉபசாரத்தை அனுபவிக்கும் வி.ஐ.பி. யார் என்கிறீர்களா, அவர்தான் மிஸ்டர் காண்டாமிருகம்.

காண்டாமிருகத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்? என்று கேட்பவர்களுக்கு...

உலகத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆண் வெள்ளை காண்டாமிருகம் (Northern white rhino) இதுதான். இதை வேட்டைக்காரர்களிடம் இருந்து காப்பாற்றவும், வேறு எந்த விதமான ஆபத்தும் வராமலும் பாதுகாப்பதற்காகவும் கென்யா அரசாங்கம் துப்பாக்கி ஏந்திய கமண்டோக்களை நியமித்துள்ளது.

இந்தக் காண்டாமிருகம் மேய்ச்சலுக்குச் சென்றாலும், புல் வெளிகளில் சுற்றித் திரிந்தாலும் அதன் பின்னாலேயே சென்று 24 மணி நேரமும் கண்காணித்துப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது கமாண்டோக்களின் வேலை. வெள்ளை காண்டாமிருகங்களின் கொம்புகளின் மதிப்பு லட்சக்கணக்கில் இருப்பதால் வேட்டைக்காரர்களால் இதற்கு ஆபத்து இருப்பது அறிந்து கென்யா அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது உலகில் நார்த்ரன் ஒயிட் ரைனோக்கள் ஐந்து மட்டுமே உள்ளன. இதில் ஆண் காண்டாமிருகம் இது ஒன்றுதான். 'சூடான்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆண் காண்டாமிருகத்தின் வயது 42. சுமார் 50 வயது வரை வாழக்கூடிய இந்த ஆண் காண்டாமிருகம், இறப்பதற்குள்ளாக இனப்பெருக்கம் செய்யவேண்டும் என்பதற்காக பெண் வெள்ளை காண்டாமிருகங்களுடன் புழங்க விடப்பட்டுள்ளார் நம் மிஸ்டர் விஐபி..!

-என்.மல்லிகார்ஜுனா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!