வெளியிடப்பட்ட நேரம்: 16:36 (05/07/2015)

கடைசி தொடர்பு:16:36 (05/07/2015)

வியாபம் ஊழல் விவகாரம்: ஜபல்பூர் மருத்துவமனை டீன் மர்ம மரணம்!

புதுடெல்லி: மத்திய பிரதேசம் வியாபம் ஊழல் விவகாரத்தில், ஜபல்பூர் மருத்துவமனை டீன் டெல்லியில் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

மத்திய பிரதேச தொழில்நுட்ப தேர்வு வாரியம் (வியாபம்) கடந்த 2013 ஆம் ஆண்டு நடத்திய மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் கல்வி அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மா உள்பட இதுவரை 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 700 பேரை போலீஸ் தேடி வருகிறது.

இந்த ஊழலில் தொடர்புடைய குற்றவாளிகளும், சாட்சிகளும் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்த வருவதாலும், தற்கொலை செய்து கொள்வதாலும் இந்தப்பிரச்னை பூதாகரமாகி உள்ளது. மத்திய பிரதேச கவர்னர் ராம்நரேஷ் யாதவ் மகன் சைலேஷ் யாதவ் (வயது 50) கடந்த மார்ச் மாதம் லக்னோவில் உள்ள தனது தந்தையின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் 25 பேர் இதுவரை மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

டெல்லியில் இயங்கும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராக பணிபுரிந்த அக்ஷ்ய் சிங், தேர்வு வாரிய முறைகேட்டில் உயிரிழந்த நர்மதா தாமோர் என்ற பெண்ணின் பெற்றோரிடம் பேட்டி எடுத்துவிட்டு திரும்பும் போது வாயில் நுரை தள்ளி நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஜபல்பூர் மருத்துவமனை டீன் அருண் சர்மா டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று காலை மர்மான முறையில் இறந்துள்ளார்.

இவர், மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் மருத்துவமனையின் டீனாக கடந்த மாதம் தான் பொறுப்பேற்றார். மருத்துவர் அருண் சர்மா, இந்திய மருத்துவ கவுன்சிலின் உறுப்பினராகவும் உள்ளார். அகர்தலாவில், மருத்துவ கவுன்சில் நடத்தும் ஆய்வில் கலந்து கொள்வதற்காக நேற்று அருண் சர்மா டெல்லி வந்துள்ளார். அங்கு, உப்பால் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்த அவர், இன்று காலை தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அருண் சர்மாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அருண் சர்மாவின் படுக்கைக்கு அருகே சில மருந்துகளை போலீசார் கண்டெடுத்து உள்ளனர். சர்மாவின் மரணம் குறித்து அவரது மகனுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய போலீசார், அருண் சர்மாவின் மகன் டெல்லி வந்ததும், பிரேத பரிசோதனை தொடங்கும் என்று தெரிவித்தனர்.

அருண் சர்மாவுக்கு முன் ஜபல்பூல் மருத்துவமனையில் டீனாக பணியாற்றிய மருத்துவர் டி.கே.சகல்லேவும், கடந்த ஓராண்டுக்கும் முன் உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசத்தில், ‘வியாபம்’ ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள் ஒவ்வொருவரும் மர்மமான முறையில் உயிரிழந்து வருவது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்