வெளியிடப்பட்ட நேரம்: 12:48 (21/07/2015)

கடைசி தொடர்பு:16:37 (21/07/2015)

சேது சமுத்திரத் திட்டம்: நேற்று இன்று நாளை...? ( மினி தொடர்- பகுதி - 1 )


து ஒரு நூற்றாண்டு கால கனவு. சேது கால்வாய் திட்டம்... இத்திட்டத்தை  நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லாத அரசியல் கட்சிகளே ஒரு காலத்தில் இல்லை. சுதந்திர இந்தியாவில் நடந்த அத்தனை தேர்தல்களிலும் தமிழக அரசியல் கட்சிகளின் அஜெண்டாவில் இந்த கோரிக்கை நிச்சயம் இடம் பெற்றிருக்கும். 

சேது சமுத்திரத் திட்டத்தை மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு 2004-ல் துவக்கியது. இத்திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என்று ஆரம்பத்தில் பிரச்னை கிளம்பினாலும், அதற்கு பொறுப்பான அப்போதைய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், திட்டம் நிறைவேறினால் போதும் என மக்கள் ஆர்வத்துடன் இருந்தனர். இறுதியில் குற்றச்சாட்டுகளால் முடக்க முடியாத இந்த திட்டத்தை மத நம்பிக்கை முட்டுக்கட்டை போட்டு நிறுத்தியது.
 
ராமேஸ்வரமும் இலங்கையும் ராமாயண காலத்தில் தொடர்பு உடையதாக பெரும்பான்மை இந்திய மக்களால் நம்பப்படுவதால், அப்போது ராமர் கட்டிய பாலம் (ராம சேது) கடலுக்கடியில் இப்போதும் உள்ளது என்றும், அதை உடைத்து சேது கால்வாய் திட்டம் உருவாக்க வேண்டாம் என்று பாஜகவின் ஆசிபெற்ற இந்துத்வா  அமைப்புகள் பிரசாரத்தில் ஈடுபட்டன. அதற்கு மத்திய அரசும், கடலியல் ஆய்வாளர்களும் எவ்வளவோ விளக்கம் சொல்லியும், இந்துத்துவ தலைவர்கள் கேட்பதாக இல்லை. இறுதியில் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று, மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற அறிவுரையுடன், சேது கால்வாய் திட்ட பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு மாற்றுப் பாதையில் இத்திட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு,  டாக்டர் பச்சோரி தலைமையில் கமிட்டி ஒன்றை நியமித்தது. அவர்களும் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி, மாற்று பாதை ஒன்றை சிபாரிசு செய்தனர். ஆச்சர்யமாக தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவும், ராமர் பாலத்துக்கு சேதமில்லாமல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

திட்டம் செயலுக்கு வர வேண்டும் என்பதில் மிக ஆர்வமாக இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியும், எந்த வடிவிலாவது சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் போதும் என்று கேட்டுள்ளார். அது திமுகவின் முயற்சியில் கொண்டுவந்த திட்டம் என்பதால் அதிமுக அரசு அதில் கவனம் கொள்ளாமல் உள்ளது.

தென் மாவட்டங்களில் நடைபெறும் சாதி மோதல்கள், வேலையில்லா திண்டாட்டத்தால்தான் உருவாகிறது. அதைத் தடுக்க வேண்டும் என்றால் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் முதல் பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்து வருகின்றன. அப்படியிருக்கும்போது மக்களின் மத நம்பிக்கையால் ஒரு மிகப்பெரிய திட்டம் நிறுத்தப்பட்ட நிகழ்வு உலகிலேயே இதுவாகத்தான் இருக்கும்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே செயல்படுத்த முடிவெடுத்த இத்திட்டம், ஆய்வு... ஆய்வு என்று இழுத்துக்கொண்டே வந்து விட்டது. அப்போதே இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று வறட்சி மாவட்டமாக குறிப்பிடப்படும் ராமநாதபுரம், வளமான மாவட்டமாக ஆகியிருக்கும். கடலில் மீன் வளம் பெருகி, மீனவர்கள் எல்லை கடந்து மீன்பிடிக்கச் சென்று, இலங்கை ராணுவத்திடம் சிக்கும் கொடுமை நடந்திருக்காது. ராமேஸ்வரம், பாம்பன் போன்ற ஊர்கள் சர்வதேச நகரங்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும். மக்களின் மதநம்பிக்கையும், அதை பயன்படுத்திக்கொண்ட அரசியல்கட்சிகளாலும் இத்தனையும் தவிர்க்கப்பட்டுவிட்டது சோகம்தான்.

சேது சமுத்திர திட்டம் குறித்து ஆரம்பத்தில் இருந்து கொஞ்சம் நீந்திப்பார்ப்போம்...


இந்திய பெருங்கடல் பகுதியில் ராமேஸ்வ‌ர‌ம், பாம்ப‌ன் ப‌குதிக‌ளுக்கும் நாக‌ப‌ட்டின‌த்துக்கும் இடைப்ப‌ட்ட கடல் ப‌குதி பாக். நீரிணை என்றும், பாம்ப‌னுக்குப் பிறகான க‌ன்னியாகும‌ரி வ‌ரையிலான‌ க‌டல் பகுதி பாக். கடல் என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் பாக். கடல் பகுதி கப்பல்கள் சென்று வரத் தேவையான ஆழத்தோடு உள்ளது, இதனால் இங்கு கால்வாய் தோண்ட தேவையில்லை. ஆனால், பாக். நீரிணை பகுதியும், அங்கு உள்ள மணற்திட்டுகளும் கப்பல்கள் செல்வதற்கு தேவையான ஆழமில்லாத பகுதிகள்.

இந்த பாக் நீரிணையையும், மணற்திட்டையும் ஆழப்படுத்தி ஒரு கால்வாய் அமைக்கும் பணியே சேது சமுத்திரத் திட்டமாகும்.

இதேபோல் கடந்த நூற்றாண்டில் வட அமெரிக்காவையும், தென் அமெரிக்காவையும் இணைக்க பனாமா கால்வாயும், எகிப்து நாட்டில் சூயஸ் கால்வாயும் செயற்கையாக உருவாக்கப்பட்டது. இப்போது அவை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதனால், பல சர்வதேச நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களின் பயண நேரம் குறைகிறது. எரிபொருள் செலவு குறைகிறது. மேலும் அந்தந்த நாடுகளுக்கு வருமானம் பெருகுகிறது. இதுபோன்று செயற்கையாக உருவாக்கப்படும் திட்டம்தான் சேது கால்வாய் திட்டம்.

300 மீட்ட‌ர் அக‌ல‌மும், 12.8 மீட்ட‌ர் ஆழ‌‌மும் கொண்ட‌து இந்த சேது சமுத்திர கால்வாய். இந்த‌க் கால்வாய் ஏற்ப‌டுத்தும் ப‌ணிதான் சேது ச‌முத்திர‌த் திட்ட‌ம் என்ற‌ழைக்க‌ப்ப‌டுகிற‌து. இந்தியாவின் மேற்கு, கிழ‌க்கு ப‌குதிக‌ள் இந்த‌த் திட்ட‌த்தின் மூல‌ம் ஒருங்கிணைக்க‌ப்ப‌டும். இதுவ‌ரை மும்பை, கொச்சின் போன்ற அரபிக்கடல் ப‌குதியில் இருந்து ஒரு க‌ப்ப‌ல் சென்னை வ‌ர‌ வேண்டும் எனில், அவை இல‌ங்கையைச் சுற்றிக்கொண்டுதான் வ‌ரும். இப்போதும் அப்படித்தான் வந்துகொண்டிருக்கிறது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் அது த‌விர்க்க‌ப்ப‌ட்டு இந்த‌ கால்வாயின் மூல‌ம் அனைத்து கப்பல்களும் இந்திய‌ க‌டல் ப‌குதி வ‌ழியாக‌வே சென்று சென்னை, விசாக‌ப்ப‌ட்டின‌ம், பார‌தீப் போன்ற‌ கிழ‌க்குப் ப‌குதியில் உள்ள‌ துறைமுக‌ங்க‌ளை சென்ற‌டையும். நேரமும் குறையும். செலவும் குறையும்.

இதை மாற்ற என்ன வழி... நாம் ஏன் இலங்கையைச் சுற்றி இந்தியாவின் இன்னொரு பகுதிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் 1860-ல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேயரான கேப்டன் ஏ.டி.டெய்லரின் சிந்தையில் திட்டம் கருக்கொள்கிறது. அதற்காக அவர் கடலில் ஆய்வு செய்கிறார். பாம்பனுக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை தோண்டினால் என்ன என்று யோசிக்கிறார்.

இவரின் திட்டத்தை 1863-ல்  சென்னை மாகாண ஆளுநராக இருந்த சர் வில்லியம் டெனிசன் ஏற்றுக்கொள்கிறார். பின்பு 1872 - ல் சென்னை துறைமுகப் பொறியியலாளர் ராபர்ட்ஸன் ஓகே சொல்ல, ஆய்வுப்பணிகள் துவங்கி நடந்து வந்தன.

ஆங்கிலேயரின் ஆய்வுகளைப் பின்பற்றி,  நாடு விடுதலையானபின் 1955-ல் பிரதமர் ஜவகர்லால் நேரு நியமித்த ராமசாமி முதலியார் தலைமையிலான ' சேது சமுத்திரத் திட்டக் குழு' ரூ. 998 லட்சம் ரூபாய்க்கான திட்ட மதிப்பீட்டை சமர்ப்பிக்கிறது.

அதன் பின் என்ன காரணத்தாலோ இத்திட்ட மதிப்பீடு தூங்கியது. பிறகு நீண்ட வருடங்களுக்குப் பிறகு 1983-ல்  இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நியமித்த லெட்சுமி நாராயணன் குழு 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கிறது.

அதற்குப் பிறகு...?

தொடர்ந்து நீந்துவோம்...

- செ.சல்மான்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்