Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

'போட்டோஷாப்' தமிழன்

ல்யாணம், காது குத்து முதல் ஃபேஸ்புக் வரை பல அலப்பறைகளையும், அட்ராசிட்டிகளையும் உண்டாக்க மிக முக்கிய காரணம் போட்டோஷாப். தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய சக்சஸுக்கு காரணம் இந்த  போட்டோ ஷாப் சாப்ட்வேர் தான். அப்துல் கலாமுடன்,  மகேந்திர சிங் தோனியுடன், நடிகர் ரஜினிகாந்துடன், கூகுள் 'சுந்தர் பிச்சை' உடன் என யாருடன் வேண்டுமானாலும் நாம் இணைந்து நிற்கும்படியான புகைப்படம் ரெடி பண்ண போட்டோஷாப் தான் உதவி புரியும்.

அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப்  சாப்ட்வேர் தான் முதன் முதலில் வெகுஜன மக்கள் பயன்படுத்தும் விண்டோஸ் ஓ.எஸ்.-ல் வந்து இன்றளவும் டாப்பில் இருக்கிறது. ஒவ்வொரு முறை போட்டோஷாப் இயக்கும்போதும், சீதாராமன் நாராயணன் என்ற பெயர் வரும். யார் இந்த சீதாராமன் நாராயணன் என்று என்றைக்காவது  நீங்கள் தேடியிருக்கிறீர்களா?

அவர் வேறு யாரும் இல்லை, நமது  தஞ்சாவூர்காரர் தான். போட்டோஷாப்பில் புரட்சியை ஏற்படுத்தியவர். இன்றைக்கு நாம் பயன்படுத்தும் போட்டோஷாப்பை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் இவர். சமீபத்தில் தமிழகம் வந்திருந்த அவருடன் சில நிமிடங்கள் உரையாடியதில் இருந்து சில துளிகள் இங்கே.


தமிழ்நாடு ஓவர் டூ போட்டோஷாப் எப்படி சாத்தியமானது?

கும்பகோணம் அடுத்துள்ள ஸ்ரீவாஞ்சியம் தான் என் சொந்த ஊர். வளர்ந்தது எல்லாம் மெட்ராஸில் தான். சென்னை சாந்தோம் பள்ளியில் தான் எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்சேன். பிறகு, திருச்சி என்.ஐ டி-யில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்  முடிச்சேன். 1980களில், அப்போது தான் கம்ப்யூட்டர் வளர்ச்சி அடுத்தகட்ட நிலைக்கு தாவிக்கொண்டு இருந்தது. மெக்கனிக்கல் படிச்சாலும் எனக்கு கம்ப்யூட்டர் மேல் இருந்த மோகம் அடங்கவில்லை.

அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர் சைன்ஸ் குரூப்பே கிடையாது. வெளிநாடுகளில் தான் படிக்க வேண்டும் என்ற நிலை. அப்பாவும், அம்மாவும் கவர்மென்ட் வேலையில் இருந்தார்கள். எனக்கு 4 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன். கணினி மேல் இருந்த ஆர்வத்தில் பி.இ. முடிச்சவுடனே அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு அப்ளை செஞ்சேன்.

மெரிட்டில் சதர்ன் இல்லினோயிஸ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடச்சுது. ஆனால் மெக்கானிக்கல் படிக்க தான் சீட் கொடுத்தாங்க. அதனால, வேற வழியில்லாம எம்.எஸ். மெக்கானிக்கல் பண்ணிட்டு  பிறகு எம்.எஸ். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சேன். அதன் பிறகு கிறிஸ்டல் கிராஃபிக்ஸ் நிறுவனத்தில் 3டி கிராபிக்ஸ் செய்யும் வேலையில் இருந்தேன். அடுத்த இரண்டு வருடத்தில் அடோப் நிறுவனத்தில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்.


இன்றைய நவீன முறையில் பயன்படுத்தப்படும் போட்டோஷாப் மென்பொருளை எப்படி கட்டமைத்தீர்கள்?

தாமஸ் நோல், ஜான் நோல் என்ற இருவரும் தான் உலகிலேயே முதன் முதலில் கருப்பு-வெள்ளை படங்களை ஸ்கேன் செய்ய 'பார்னி ஸ்கேன்' என்ற சாப்ட்வேரை வடிவமைத்தார்கள். பின்னர் அந்த சாப்ட்வேரை அடோப் நிறுவனத்திற்கு அவர்கள் விற்று விட்டார்கள். விண்டோஸ் நிறுவனம், அதன் இயக்க மென்பொருளுக்கு ஏற்றவாறு போட்டோஷாப்  சாப்ட்வேரை மாற்ற அடோப் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தது.

அடோப்பின் முயற்சிகள் தோற்றுபோய் கொண்டிருந்த சமயத்தில் நானும், பீட்டர் மெரில் இருவரும் இணைந்து பல கட்ட சோதனைகளுக்கு பிறகு விண்டோசில் சி ++ மொழி உதவியுடன் நிரல் எழுதி வெற்றிகரமாக இயக்க வைத்தோம். அப்போது அது வரவேற்பை பெற்றாலும், மிக பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை.

டிஜிட்டல் கேமரா வந்த பிறகு தான் ஒரு மாபெரும் தாக்கத்தை அது உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. நாங்கள் முதன் முதலில் விண்டோசில் பயன்படுத்தப்படும் போட்டோஷாப் 2.5ஐ உருவாக்கி ஏறக்குறைய 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும், என் தலைமையிலான குழு ஒவ்வொரு வெர்சனிலும் புது புது மாற்றங்களை கொண்டுவந்து கொண்டே இருக்கிறோம் .

உங்கள் குடும்பம் பற்றி?

அப்பா இறந்துவிட்டார், அம்மா சென்னையில இருக்காங்க. சகோதரிகள், சகோதரன் எல்லாருமே நல்ல நிலையில் இருக்காங்க. அமெரிக்காவில் வேலை பார்த்தபோதே ஆன்நெட்டை காதலிச்சேன். வெற்றிகரமா விண்டோசில் போட்டோஷாப்பை இயக்கிவிட்டு பிறகு வீட்டில் அம்மாகிட்ட சொன்னப்ப அவங்க ஒப்புக்கல. அப்பறம் அம்மாவை நைஸ் பண்ணி ஒருவழியா ஆன்நெட்டை கரம் பிடிச்சேன். இப்ப எங்களுக்கு 3 குழந்தைங்க. அம்மாவை பார்ப்பதற்காக எப்படியும் ஒவ்வொரு வருடமும் இந்தியா வந்துருவேன்.

தமிழகத்தில் தற்போதுள்ள மாணவர்கள் பற்றி கவனிக்கிறீர்களா?

ம்ம்ம். கண்டிப்பா இப்போதெல்லாம் பசங்க ரொம்ப ஆர்வமாகவும், அப்டேட்டட்  ஆகவும் இருக்காங்க. ஆனா, இங்க விரும்பி பொறியியல் படிக்கிறவங்க ரொம்ப கம்மி. படிப்பை பொறுத்தவரை நாம எதை விரும்புறோமோ அதை தான் படிக்கணும். நிறைய பேர் விரும்பாமல் தான் இன்ஜினீயரிங் படிக்கிறாங்க. அதனால தான் பொறியியல் படிச்சவங்களுக்கு 6,000, 8,000 சம்பளம் என்றெல்லாம் நியூஸ் வருது. விரும்பி ஆர்வத்தோடு படிக்கிறவங்க இன்னிக்கும் பெரிய பெரிய உயரங்களை தொட்டுகிட்டே தான் இருக்காங்க.

இதுக்கு மாணவர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது .பெற்றோர்களின் அதீத ஆசையை அவர்கள் பிள்ளைகளிடம் திணிப்பதால்தான் இதெல்லாம் நடக்கிறது. நாங்கள் படித்தபோது தபால் மட்டும் தான், தேடி தேடி படித்தோம். இன்று எல்லாமே உள்ளங்கையில் இருக்கிறது. சிலர் முறையாக பயன்படுத்திக்கிறாங்க, ஆனால் பலர் முறையாக பயன்படுத்துவதில்லை.

ஆர்வமும், திறமையும், தேடலும் இருந்தால்போதும் எந்த காரணியும் முன்னேற்றத்தை பாதிக்காது. இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நானும் பத்தாவது வரை தமிழ் மீடியத்தில் தான் படிச்சேன். அதனால மொழி பற்றியெல்லாம் சாக்கு சொல்லி தப்பிச்சுக்காதீங்க மாணவர்களே. எனக்கு தெரிந்தவரை சிலிக்கன் வேலியில் இன்னும் திறமையானவர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து இருக்கிறது.


இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி  பிரமிப்பாக இருக்கிறதே . மாணவர்கள் சி++ கற்றுக்கொண்டு இருக்கும்போதே ஆண்ட்ராய்ட் வந்துவிட்டதே... மாணவர்கள் எப்படி அப்டேட் செய்து கொள்வது?

நாம் பேசும் மொழி போல தான் கணினி மொழியும். கணினி மொழிகளில் ஏதாவதொன்றை நன்றாக கற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால், சி, சி++, ஜாவா. ஆண்ட்ராய்ட் என  எல்லாவற்றையும் அரைகுறையாக கற்றுக்கொள்வதே பிரச்னை. எந்த வழியில் ஒரு பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடிக்க போகிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி தீர்வு கண்டுபிடிக்க போகிறோம் என்பதே முக்கியம். இதை புரிந்துகொண்டால்போதும். சி++, ஜாவா, ஆண்ட்ராய்ட் என எதை கற்றாலும் நன்றாக கற்று அதிலேயே தீர்வை கண்டுபிடிக்கலாம். புரோக்ராம் நீளம் கொஞ்சம் கூட குறைய இருக்கலாம் அவ்வளவு தான்.

மொபைல் போன்களில் போட்டோஷாப் பயன்பாடு வெற்றி பெறவில்லையே ஏன்?

மொபைல் போன் தொடு திரைகளில் நாம் தொட்டு நகர்த்தும் துல்லியம் போய்விடுகிறது. பெரும்பாலும் ஆண்ட்ராய்டு தொழில்நுட்ப போன்களில் ஸ்டிக் பயன்படுத்தப்படுவதில்லை, ஸ்டிக் பயன்படுத்தினாலும் கூட கணிப்பொறியில் கிடைக்கும் துல்லியம் கிடைக்காது. ஏர் பிளாட்பார்மில் ஆண்ட்ராய்ட் போன்களில் நாங்கள் வெளியிட்டுள்ள அப்ளிகேஷனும் போதிய வரவேற்பு பெறவில்லை. ஆனால் நம்பிக்கை இழக்கவில்லை. விரைவில் கணினியில் பயன்படுத்தும் அதே போட்டோஷாப்பை மொபைலிலும் கொண்டு வருவோம். வெயிட் அண்ட் சீ என்றார்.

வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்!

- பு.விவேக் ஆனந்த்

படங்கள்: தே .தீட்ஷித்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement