பிரபல எழுத்தாளர் கல்பர்கி சுட்டுக் கொலை: கர்நாடகாவில் பரபரப்பு! | Karnataka: Rationalist and scholar MM Kalburgi shot dead

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (30/08/2015)

கடைசி தொடர்பு:17:00 (30/08/2015)

பிரபல எழுத்தாளர் கல்பர்கி சுட்டுக் கொலை: கர்நாடகாவில் பரபரப்பு!

தார்வாட்: மூத்த எழுத்தாளரும், ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்பர்கி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தார்வாட் நகரில் உள்ள கல்பர்கியின் வீட்டுக்கு இன்று காலை 9 மணியளவில் ஒரு மர்ம நபர் வந்துள்ளார். கதவு தட்டும் சத்தம் கேட்டு கல்பர்கியின் மனைவி திறந்துள்ளார். கல்பர்கி எங்கே என்று அவரிடம் அந்த நபர் கேட்டுக் கொண்டிருந்தபோது, கல்பர்கி வெளியே வந்துள்ளார். அப்போது கல்பர்கி மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் அந்த நபர் தப்பியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கல்பர்கி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கல்பர்கி உயிரிழந்தார்.

அப்போதைய பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்த யரகல் கிராமத்தில் பிறந்தவர் கல்பர்கி. தற்போது இந்த ஊர் கர்நாடக மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ளது. ஹம்பி பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றியவர் கல்பர்கி. அவரது வீட்டிற்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு அளித்து வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தான், கல்பர்கி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

வலது சாரி இந்துத்தவா அமைப்புகளால் இவரது உயிருக்கு ஆபத்து இருந்து வந்தது. இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக தீவிரமாக பேசி, எழுதி வந்தவர் கல்பர்கி. கடந்த ஆண்டு ஜூன் மாதம் மறைந்த எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி மற்றும் கல்பர்கி ஆகியோர் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக கூறி ஒரு இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர் புகார் கூறியிருந்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

அனந்தமூர்த்தி கூறிய கருத்தை ஆதரித்து கல்பர்கி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பஜ்ரங் தளம், வி.எச்.பி. மற்றும் ஸ்ரீராம் சேனே ஆகிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதுதொடர்பாக பஜ்ரங் தளத்தினர் போராட்டம் நடத்தியபோது கல்பர்கி வீட்டையும் தாக்கினர். தற்போது நடந்துள்ள கொலைக்கும் இந்துத்துவா அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

கல்பர்கி கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், கொலையாளியை தேடி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்