ரஹ்மான் பதில்: இறைதூதரின் படத்துக்கு இசையமைக்காதது ஏன் என்று அல்லா கேட்டால் என்ன சொல்ல முடியும்? | Music done in good faith: A.R. Rahman

வெளியிடப்பட்ட நேரம்: 12:08 (15/09/2015)

கடைசி தொடர்பு:14:15 (15/09/2015)

ரஹ்மான் பதில்: இறைதூதரின் படத்துக்கு இசையமைக்காதது ஏன் என்று அல்லா கேட்டால் என்ன சொல்ல முடியும்?

றைதூதரின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்றுஅல்லா என்னிடம் கேட்டால் என்னால் என்ன பதில் சொல்ல முடியும் ? என்று தனக்கு விதிக்கப்பட்ட ஃபத்வாவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதிலளித்துள்ளார்.
 

முகமது: மெசஞ்சர் ஆஃப் காட் என்ற  ஈரானிய திரைப்படத்திற்கு இசையமைத்தற்காக தமிழகத்தை சேர்ந்த ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர், ஏ.ஆர். ரஹ்மானுக்கு மும்பையை சேர்ந்த' ரஸா அகாடமி ' என்ற சன்னி முஸ்லிம் அமைப்பு ஃபத்வா விடுத்தது.  இந்நிலையில் தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் ரஹ்மான் தனக்கு விடுக்கப்பட்டுள்ள ஃபத்வாவிற்கு பதிலளித்துள்ளார்.

அதில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' இந்த படத்துக்கு இசையமைத்ததை தவிர நான் வேறு எதுவும் செய்யவில்லை. படத்தை இயக்கியதிலும் தயாரித்ததிலும் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. அந்த பணியில் எனக்கு கிடைத்த ஆன்மீக தொடர்பான ஆத்ம திருப்தியை நான் பகிர விரும்பவில்லை. இது எனது தனிப்பட்ட விஷயம் '' என கூறியுள்ளார்.

ராஸா அமைப்பின் தலைவரான  நூரி , 'இது போன்ற  படத்தை எடுப்பதை ஏன் தடுக்கவில்லை' என அல்லா என்னிடம் கேட்டால் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கும் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் பதிலளித்துள்ள ரஹ்மான், ''இந்தப் படத்துக்கு இசையமைக்க முடிவு செய்ததும் அதே காரணத்திற்காகத்தான். ஒருவேளை அல்லாவை  சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தால், மனித இனத்தை ஒருங்கிணைப்பது, அன்பை பற்றிய போதனைகள், ஏழைகளின் முன்னேற்றம், தர்ம சிந்தனை, எனது பெயரால் அப்பாவி மக்களை கொல்வதை தவிர்த்து விட்டு மனித இனத்துக்கு சேவை செய்வது போன்ற போதனைகளை உள்ளடக்கிய முகமதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?

நபிகளை பற்றிய போதனைகளை முறையாக புரிந்து கொள்ளாமல், தவறான கருத்துகளை இணையங்களில் காண முடிகிறது. காட்சி ஊடகங்கள் வழியாக சரியான விஷயங்களை கொண்டு புரிய வைக்க வேண்டுமென்று நான் நினைத்திருந்தேன்.

மத சுதந்திரம் கொண்டுள்ள இந்திய நாட்டில் வாழும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது. இங்கே வன்முறையற்ற அமைதியான வாழ்க்கை வாழ்வதே நோக்கம். நான் இஸ்லாமியத்தின் அறிவார்ந்த சிந்தனைகளை அறிந்துள்ள அறிஞர் அல்ல. பிரச்னைகளை கருணையோடு எதிர்கொள்வாம். கண்ணியத்தோடு கையாள்வோம் வன்முறை வழியாக அல்ல''

இவ்வாறு ஏ.ஆர். ரஹ்மான் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

மும்பையை சேர்ந்த ரஸா அகாடமி என்ற அந்த அமைப்பு முகமது: மெஸஞ்சர் ஆஃப் காட் படத்திற்கு இசையமைத்தற்காக விடுக்கப்பட்ட ஃபத்வாவில்  புனிதப்படுத்தும் கலீமா உறுதி மொழியை மீண்டும் எடுக்க வேண்டுமென்றும் படத்தின் இயக்குனர் மஜித் மஜிதி , ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் திருமண பந்தத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறியிருந்தது.



 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close