வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (26/09/2015)

கடைசி தொடர்பு:15:37 (26/09/2015)

விடியலுக்காக காத்திருக்கும் விவசாயிகள்: ரூ. 33 கோடியில் எழுப்பப்படும் விசுவக்குடி அணை!

றண்டு கிடக்கும் மண்ணின் செழுமையை மீட்டெடுக்க உதயமாகிறது ஒரு அணை. இயற்கையின் எழிலையும், பசுமையின் அரவணைப்பையும் ஒருங்கே கொண்டு விளங்குகிறது, விசுவக்குடி கிராமம். இக்கிராமத்தில் பச்சைமலையும் செம்மலையும் இணையும் இடத்தில் இரண்டு மலைகளுக்கு நடுவில் உதயமாகிறது கல்லாறு அணை.

விசுவக்குடி அணை!

செங்காட்டு பட்டிக்கு வடக்கேயுள்ள பச்சைமலை தொடர்ச்சி, புதூர், நாவூர், வாழையூர் போன்ற மலை கிராமங்களில் உற்பத்தியாகும் மழை நீர், வெள்ளமாக பெருக்கெடுக்கிறது. வெள்ளப் பெருக்கானது வெண்கலம் ஏரி நீர் பிடிப்பு வழியாக சின்னாறு சென்று, தொழுதூரிலுள்ள வெள்ளாற்றில் கலக்கிறது. மொத்த நீர் முழுவதும் கடலில் கலந்து வீணாகிறது. இப்படி வீணாகும் நீரை சேமித்து, விவசாயிகளை வாழ வைக்க காத்திருக்கிறது விசுவக்குடி அணை. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அணையின்  இறுதிப்பணிகள், இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது. அணைக்கான மொத்த நிதித்தொகை சுமார் 33 கோடி.

இந்த அணையின் மூலம் 40.1 மில்லியன் கன அடி நீரை சேமிக்க முடியும். இந்த அணை 665 மீட்டர் நீளத்தையும், 10.3 மீட்டர் ஆழத்தையும் கொண்டது. மேலும் 2 மதகுகளும் உள்ளன. இதன் மூலம் 1400 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் என்கிறார் இதன் பொதுப்பணித்துறை பொறியாளர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் கட்சி மாநில தலைவர் ராம்ராஜ் கூறுகையில், "
கிட்டத்தட்ட 70-80 வருட காலமாக இத்திட்டம் கிடப்பிலேயே கிடந்தது. இத்திட்டத்தின் மூலம் செங்காட்டுப் பட்டிக்கு வடக்கேயுள்ள பச்சை மலை தொடர்ச்சி, புதூர், நாவூர், குறிச்சி, வாழையூர் போன்ற கிராமங்களில் உற்ப்பத்தியாகும் நீரை சேமிக்க முடியும். இத்திட்டம் 21.7.2005 ல் விவசாயிகளுடைய நலன் கருதி, அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் 7.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து,  அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

தற்போது, திட்டப்பணிகள் தமிழக அரசின் உதவியோடு, மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது அவர்களின் மேற்பார்வையில், பொதுப்பணித்துறை திருச்சி மண்டல பொறியாளர்  அசோகன் தலைமையில் திட்டப்பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்த ஆண்டு பருவமழை நிச்சயமாக வீணாகாது. தமிழக அரசு நீர்ப்பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


பச்சைமலையில் இயற்கையான மேடுகள் இருப்பதால், நீர் பிடிப்பு குறைவாக ஏற்படும் எனக் கருதி, கூடுதலாக 3 கோடி 30 லட்சம் தமிழ்நாடு திட்டக்குழு மூலம் பெற்று பணியை முடித்துள்ளனர்" என்றார். 



இது குறித்து விவசாயி சண்முகம் கூறுகையில்,"  கிணறுகள் 100 அடி ஆழம் வரை போய் விட்டது.என்னுடைய விளை நிலம் 5 ஏக்கரில் குச்சி வள்ளி கிழங்கை மட்டுமே பயிர் செய்துள்ளேன். விவசாயத்தின் ஆதாரம் தண்ணீர். தண்ணீர் இல்லாததால் நெல் பயிர் செய்யவில்லை. இந்த அணை வந்ததால் இனி தண்ணீர் பஞ்சம் இருக்காது. இனிமே, நாங்க நெல்,கரும்பு என அனைத்தும் பயிர் செய்ய முடியும்" என்கிறார்.

இந்த அணையின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர், இப்பகுதி விவசாயிகள்.

'அன்னை மனிதனுக்கு உயிர் கொடுப்பாள், அணை மண்ணுக்கு உயிர் கொடுக்கும்!'.  நீர் வளத்தை பெருக்குவோம், விவசாயத்தை செழிக்கச் செய்வோம்.

- சு.அகிலாண்டேஸ்வரி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்