Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏழாம் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 10 தன்னார்வலர்கள் பற்றிய அறிமுகம்...

'அறம் செய விரும்பு’ திட்டத்துக்கு என ஏழாம் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 10 தன்னார்வலர்கள் பற்றிய அறிமுகம்...

கோபிநாத்

'நீயா? நானா?’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர்; 'நீயும் நானும்’, 'பாஸ்வேர்டு’ உள்பட ஆறு புத்தகங்களின் ஆசிரியர்; 'சிறந்த தொகுப்பாளருக்கான’ விகடன் விருதுகள், சிங்கப்பூர் நேஷனல் பல்கலைக்கழகத்தின் 'யூத் ஐகான்’ விருது வென்றவர். ''வேலைக்குச் சென்றுகொண்டே படிக்கும் ஏழை மாணவர்கள்தான் என் உதவிக்கான இலக்கு. வாழ்க்கையில் தன் முத்திரையை அழுத்தமாகப் பதிக்க வேண்டும் என்ற லட்சிய வெறி, அவர்களுக்குள் அதிகம் இருக்கும். அப்படியான மாணவர்கள் பலர் சின்ன வழிகாட்டலுக்கும் தூண்டலுக்கும் காத்திருப்பார்கள். அவர்களின் எதிர்காலத்துக்கு என்னாலான சின்ன முயற்சியைச் செய்வேன்'' என்கிறார் கோபிநாத்!


அனிதா பால்துரை

இந்தியக் கூடைப்பந்து பெண்கள் அணியின் கேப்டன்; சர்வதேசக் கூடைப்பந்து போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்கள் வென்றவர். உலகின் சிறந்த 10 வீரர்களில் ஒருவராகத் தேர்வுபெற்றவர். ''நான் செல்லும் இடங்களில் திறமையான விளையாட்டு வீராங்கனைகளைப் பார்க்கிறேன். வறுமையான குடும்பச் சூழலால் சரியான விளையாட்டு உபகரணங்கள்கூட இல்லாமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்குத் தேவையான டி-ஷர்ட், காலணி, விளையாட்டு உபகரணங்களை வாங்கித் தர விருப்பம்'' என்கிறார் அனிதா!   


செல்வா

இந்திய மாணவர் சங்க முன்னாள் நிர்வாகி. தமிழ்நாடு தழுவிய மாணவர் போராட்டங்களின் முகம். சமச்சீர் கல்விக்கான போராட்டம், கல்வி வியாபாரமயமாக்கலுக்கு எதிரான போராட்டம் எனத் தீவிரமாகக் களத்தில் இயங்கிவருபவர். ''மாநிலம் முழுக்க ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளே செய்துகொடுக்கப்படுவது இல்லை. குறிப்பாக, அறிவியல் ஆய்வுக்கூடங்கள் பற்றாக்குறை வசதிகளோடு இருக்கின்றன. அவற்றைச் சீர்படுத்த சில முயற்சிகள் மேற்கொள்வேன்'' என்கிறார் செல்வா!  


 விஜயலட்சுமி

கண்ணமங்கலம் அரசுப் பள்ளி ஆசிரியர்; கற்றல் முறைகளில் நவீன உத்தியைப் பயன்படுத்துபவர்; அரசு ஆசிரியர் பயிற்சி மையங்களில் நவீன கற்றல் முறை குறித்து வகுப்பு எடுப்பவர். சுட்டி விகடனில் இது தொடர்பாக தொடர்ந்து எழுதிவருகிறார். ''அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே கணிப்பொறிக்கூடங்கள் உள்ளன. 6-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கணினி வசதி கொடுக்கப்படுவது இல்லை. முடிந்தவரை சில இடங்களில் அந்த வசதிகளை அமைக்க விருப்பம்!'' என்கிறார் விஜயலட்சுமி!


அதியமான்

இந்து அறநிலையத் துறையின் தணிக்கை ஆய்வாளர். சேலத்தில் இவர் நடத்திவரும் 'அதியமான் நிர்வாகப் பயிற்சி மையம்’ மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு, அரசுப் பணித் தேர்வுக்கான பயிற்சிகளை இலவசமாக அளித்துவருகிறார். இதுவரை 15 மாற்றுத்திறனாளிகள் இவரிடம் பயிற்சிபெற்று அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். ''படிக்கும் ஆற்றல் குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு பாக்கு மட்டை தயாரிப்பு உள்ளிட்ட சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க விரும்புகிறேன். அது பொருளாதாரரீதியாக அவர்களை மேம்படுத்தி, தற்சார்பும் தன்னம்பிக்கையும் அளிக்கும்'' என்கிறார் அதியமான்!


தமிழ்மறை

சுற்றுச்சூழல் ஆர்வலர்; மேற்குத் தொடர்ச்சி மலை வனவிலங்குப் பாதுகாப்புக்கு முனைப்புடன் செயல்படுபவர்; 'அறிவுச்சோலை’ என்ற அமைப்பின் மூலம் கல்வி உதவி செய்துவருகிறார். ''கோவையின் புறநகர் பகுதிகளில் செயல்படும் அரசுப் பள்ளிகளில் சரியான கழிப்பிட வசதி இல்லாமல் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு, சுகாதார வசதிகள் சென்றுசேர வேண்டும்; சுகாதாரம் தொடர்பான உபகரணங்கள் அமைத்து விழிப்புஉணர்வை உருவாக்க வேண்டும்'' என்கிறார் தமிழ்மறை!


மருத்துவர் ஏ.ஆர்.சாந்தி

சென்னை, இ.எஸ்.ஐ மருத்துமவனையின் மகப்பேறு மருத்துவர்; நோயாளிகள் மேம்பாட்டுக்காக அக்கறையோடு செயல்படுபவர்; மருத்துவர் நலன் தொடர்பான போராட்டங்களிலும் தீவிரமாகப் பங்கெடுப்பவர். ''உலகில் ஏழு நிமிடத்துக்கு ஒரு பெண், கர்ப்பப்பை புற்றுநோயால் இறக்கிறார். அது குறித்த விழிப்புஉணர்வை உண்டாக்கும் வகையில், பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு சோதனையை நடத்த வேண்டும். இதற்காக, ஒரு பெண்ணுக்கு 100 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். அது பெரும் மாற்றத்தை உண்டாக்கும்'' என்கிறார் ஏ.ஆர்.சாந்தி!


திலீப்

அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்; கிராமப்புறப் பள்ளிகளில் கணினி மென்பொருள் மேம்பாட்டுக்கான மைக்ரோசாஃப்ட் விருது, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஐ.சி.டி விருதுகளை வென்றவர். ''அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு அறைகளை உருவாக்க வேண்டும். டிஜிட்டல் போர்டு உள்ளிட்ட வசதிகளோடு ஸ்மார்ட் வகுப்பு அறையை உருவாக்கினால், கல்வியின் தரத்தை அபாரமாக உயர்த்தலாம். இதற்கென ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அடிப்படைப் பயிற்சி முதல் உபகரணங்கள் வரை வழங்க ஆசை'' என்கிறார் திலீப்!  


வசந்த்

அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்; நண்பர்கள் சிலரின் உதவியோடு வகுப்பறையில் தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை உண்டாக்கியவர். ''கிராமப்புறங்களில் வறுமை காரணமாக படிக்காமல் இருக்கும் குழந்தைகள் ஏராளமானோர். அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ விருப்பம். குழந்தைகளின் மனநிலை, புரிதலுக்கு ஏற்ப கற்பித்தலிலும் அடுத்த தலைமுறை சிந்தனைகளை விதைக்க வேண்டும். அதற்கென நவீன கல்வி உபகரணங்களைக் கையாள வேண்டும்'' என்கிறார் வசந்த்!


கவாஸ்கர்

'தீக்கதிர்’ பத்திரிகையின் மூத்த நிருபர்; மனித உரிமை ஆர்வலர்; விளிம்புநிலை மக்களுக்கான போராட்டங் களில் களத்தில் நிற்பவர். ''சென்னையில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் ஒரு குழுவாக வசிக்கின்றனர். இந்தக் குடும்பங்களில் படிக்க வசதி இல்லாமல் தவிக்கும் குழந்தைகள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும்'' என்கிறார் கவாஸ்கர்!


'அறம் செய விரும்பு’ திட்டம் பற்றி அறிய...

இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் அவ்வப்போது ஆனந்த விகடனிலும், இதற்கான பிரத்யேக வலைதளம் மூலமும் பகிரப்படும்.

திட்டம் தொடர்பான தகவல்களை www.vikatan.com/aramseyavirumbu  என்ற வலைதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்தத் திட்டம் மூலம் உதவ விரும்புபவர்கள் / உதவி வேண்டுபவர்கள் aram@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம்!


படங்கள்: தி.விஜய், ஜெ.வேங்கடராஜ், பா.காளிமுத்து, எஸ்.தேவராஜன், கா.முரளி, தி.ஹரிஹரன், மீ.நிவேதன், வி.சதீஷ்குமார், என்.விஜயரகுநாதன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement