விருதை திருப்பித் தந்த எம்.ஜி.ஆர்!

ன்னட எழுத்தாளர் கல்புர்கி படுகொலை இந்தியா முழுவதும் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும்  பல்வேறு கட்சித்தலைவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு மத்திய அரசை குற்றஞ்சாட்டி எழுத்தாளர்கள் பலர்,  தாங்கள் மத்திய அரசிடமிருந்து பெற்ற விருதுகளை திருப்பித் தந்து பரபரப்பை கூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

பொதுவாக கோபம் என்பது உணர்ச்சியை உடனே காட்டிவிடத் துடிக்கும் ஒரு உணர்வு. தேசத்தின் மீதான கோபம் எழும் போதெல்லாம், காந்தி மேற்கொள்கிற விஷயம் உண்ணாவிரதம். அடிப்படையில் அது அஹிம்சை வடிவம் என்றாலும், அதுதான் காந்தியின் உச்சக்கட்ட கோபம். இதை பின்பற்றித்தான் எழுத்தாளர்களும் தங்களுக்கு பெருமையளித்த விருதுகளை திருப்பித்தருவதும்.

ஆனால் இவ்வாறு விருதுகளை திருப்பி அளிப்பதற்கு எதிரான விமர்சனங்களும் எழுகின்றன.

இந்த நிலையில், சற்றேறக்குறைய 42 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் பிரபலமாக விளங்கிய நடிகர் ஒருவர், உள்ளுர் அரசியலில் உருவான ஒரு உஷ்ணமான சூழ்நிலையில்,  'சிறந்த நடிகர்'  என தனக்கு அளிக்கப்பட்ட பாரத் விருதை திருப்பியளித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்த  நடிகர் எம்.ஜி.ஆர்.

அதுசரி பாரத்  பட்டத்தை திருப்பியளிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆரை உஷ்ணத்திற்குள்ளாக்கிய விஷயம் என்ன...

இதோ... எம்.ஜி.ஆரே பாரத் பட்டத்தை திருப்பியளித்து, அப்போதைய மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சருக்கு எழுதிய கடிதம் எல்லாவற்றையும் விளக்குகிறது.

திரு. ஐ.கே.குஜ்ரால், மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர், புதுடில்லி, 21.3.73.

மதிப்பிற்குரிய மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு,

கடந்த 1972-ஆம் ஆண்டுக்கான “பாரத்” விருதைப் பெற்றவன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் பெருவிழிப்பை நீங்கள் அறிவீர்கள் என்றும், இந்த உணர்ச்சி வெள்ளத்தின் நீரோட்டத்திற்கு ஆட்பட்டுவிட்டவர்களில் நானும் ஒருவன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றும் நம்புகிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், ஆளும் தி.மு.க.கழகத்திற்கும் இடையே எழுந்த வாக்குவாதத்தில் மாநிலகல்வி அமைச்சரான திரு நெடுஞ்செழியன் பின்கண்ட பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார்.

“பாரத் விருதை வேறொரு நடிகருக்கு வழங்க தேர்வுக்குழு முடிவு செய்தது. இதை அறிந்த
நமது முதல்வர்  கலைஞர்,  திரு ஏ. எல். சீனிவாசனை அழைத்து,  எம்.ஜி.ஆருக்கு இந்த விருது கிடைக்க முயற்சி செய்யுமாறு கூறினார். இதற்காக திரு ஏ.எல். சீனிவாசன் கடும் முயற்சிகள் மேற்கொண்டார். சாதகமான கருத்து கூறுவதற்காக பலரை தன்பக்கம் மாற்றினார். ஆனால், தேர்வுக்குழு தலைவரான திரு. வி.கே. நாராயணமேனன் எளிதில் இணங்கவில்லை. நமது முதல்வரான கலைஞர், இதனை அடைய வைக்க பல வழிகளைக் கையாண்டார். இந்த முயற்சிகள் எல்லாம் எதற்காக? மற்ற நடிகருக்கு கிடைப்பதற்கு முன் எம்.ஜி.ஆருக்கு விருது கிட்டவேண்டும் என்பதற்காகதானே? அந்த இன்னொரு நடிகர் யார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை”

இந்த அறிவிப்பு 8.2.1973 தேதியிட்ட ஒரு வார ஏட்டில் வெளிவந்தது. மிக அதிகமாக விற்பனை ஆகும்  தமிழ் வார ஏடு அது. இந்த செய்தி,  அந்த இதழின் வாசகர் ஒருவரின் கிண்டலான விமர்சனத்திற்கு இரையானது. அந்த வாசகரின் கடிதம் 15.2.73 தேதியிட்ட இதழில் பிரிக்கப்பட்டிருந்தது. அதை இங்கு மீண்டும் தருகிறேன்.

“எம்.ஜி.ஆருக்கு பாரத் விருது பெற்றுத் தருவதற்காக தேர்வுக்குழு தலைவரான திரு நாராயண மேனன் விஷயத்தில் பலவழிகளை முதல்வர் கலைஞர் கையாண்டதாக நெடுஞ்செழியன் கூறியுள்ளார். இந்த செய்தி என்னை வியப்பிலாழ்த்தியது, இந்த காரியத்திற்காக ஒருவரை இணங்க வைப்பது குற்றமல்லவா? அதுவும் ஒரு முதலமைச்சர் இப்படியெல்லாம் செய்யலாமா?
இந்த.... அதை ஒரு மாநில அமைச்சர் பெருமையாக கூறிக்கொள்வது வேடிக்கையாக இல்லையா?”- இவ்வாறு அந்த வாசகனின் கடிதம் இருந்தது.

இத்தகைய கருத்துக்கள் வெளிவந்த பின்னரும் முதல்வரிடமிருந்தோ, தேர்வுக்குழு அதிகாரிகளி டமிருந்தோ இதனை மறுத்து மறுப்புரை வரவில்லை. முதல்வர் ஓர் கூர்மையான அரசியல்வாதி என்பதால் அவர் மறுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தேர்வுக்குழு அதிகாரிகளின் மவுனம் எனக்கு வியப்பைவிட கலக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

தேசிய அளவில் நுண்கலைத்திறனை தேர்வு செய்வதற்காக அமர்த்திடும் குழுவின் நடுநிலைத் தன்மையின் மீது எனக்கு மெத்த மதிப்பும், மரியாதையும் உண்டு. நீதியின் அடிப்படையிலும், பேதமற்ற நிலையிலும்தான் அந்தக்குழு செயல்படுகிறது என்பதே எனது நிச்சயமான அபிப்பிராயமாகும்.

இப்போது அந்தக் குழுவின் மீதும் அதன் தலைவர் மீதும் சுமத்தப்பட்டிருக்கிற உள்நோக்கம், முறைகேடான நடைமுறைகள் இவற்றை மென்மையாகக் குறிப்பிடவேண்டுமானால்,  'நான் அதிர்ச்சியடைந்தேன்' என்றுதான் கூறுவேன். எனது உண்மையான உழைப்பின் காரணமாக இந்த விருது பெறும் தகுதி எனக்கு உண்டு என்று நான் நம்புகிறேன்.

இந்த அங்கீகாரம் எனக்கு அளிக்கப்பட்ட உயர்ந்த கவுரவம் என்றும் நான் மதிக்கிறேன். ஆனால், நடுநிலை தவறாத தீர்ப்புக் காரணமாக இந்த விருது கிடைத்தால் மட்டுமே நான் பெருமிதம் கொள்ளமுடியும். தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியும் ஊழல் அற்றதாக விளங்கவேண்டும் என்று நான் கூறி வருகின்ற காரணத்தால், தமிழக அரசியலில் நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றேன்.

ஆனால், முறையற்ற வழிகளால் எனக்கு ஒரு கவுரவம் கிடைத்தது என்பதை என்னால் எண்ணிப் பார்க்கவும் இயலவில்லை. இந்தச் சம்பவங்கள் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது.
இந்த விருதின் தன்மைகள் பாதிக்காத வகையில், தகுதியை தீர்மானிக்க கையாளப்பட்ட வழி முறைகளைப் பற்றி மட்டுமே கருத்தில் கொண்டு பார்க்கும்போது இனியும் இந்த விருது என்வசம் வைத்திருப்பது நியாயமில்லை என்று நான் கருதுகிறேன்.

எனவே இந்த விருதினை திருப்பி அனுப்புகிற நேரத்தில் எனது செயலை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எனது முடிவின் பின்னால் உள்ள உணர்வை பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் பிரதான பாத்திரம் வகிக்கும் ஒரு நியாயமற்ற சர்ச்சையிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள அனுமதிக்குமாறு வேண்டுகிறேன். தேர்வுக்குழு போன்ற உயர் இலக்கிய மதிப்பு வாய்ந்த நிறுவனங்களை அரசியல் தலைவர்களின் தந்திரோபாயங்களுக்கு ஆட்படவிடாமல் காத்து வருவதுடன், நீதி வழுவாமுறையில் கலைஞர்களின் தகுதிகள் நிர்ணயிக்கப்படவும், உரியமுறையில் அவர்கள் உற்சாகம் பெறவும் வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

தங்கள்  அன்பன் எம்.ஜி.ராமச்சந்திரன்

                                                                                                                                                                   - எஸ்.கிருபாகரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!