வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (07/11/2015)

கடைசி தொடர்பு:16:06 (07/11/2015)

தீபாவளிக்கு மறுநாள் இறைச்சிக் கடைகளை மூடும் உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு!

சென்னை: வரும் 11-ம் தேதி சென்னையில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூட சென்னை மாநகராட்சி அளித்துள்ள  உத்தரவை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று மார்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " சென்னை மாநகராட்சி நிர்வாகம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நவம்பர் 11-ம் தேதி அனைத்து இறைச்சிக்கடைகளும் மூடப்பட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் கவலையளிக்கக்கூடியது.

இதேபோன்று பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளையும் அன்றைய தினம்
விற்பனை செய்யக்கூடாது என்று சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக
செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜைன மதம் உட்பட எந்த மதத்தினரின் உணர்வுகளும் புண்படுத்தப்படக் கூடாது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடாகும். ஆனால்  ஒரு மதத்தினரின் விழாவிற்காக, இதரர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது நியாயமற்றதாகும். மாநகராட்சியின் இந்த நடவடிக்கை உணவுச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.

ஆன்-லைன்  வர்த்தகத்தை அனுமதித்த பிறகு எந்த வகையிலும் இறைச்சி விற்கக்கூடாது என்பதோ,  உண்ணக்கூடாது என்பதோ அமல்படுத்த முடியாததாகும். மேலும் உணவு, உடை ஆகியவற்றை  மதம் மற்றும் பாலினத்தோடு அடையாளப்படுத்துவது பிற்போக்குத்தனமான வலதுசாரிக் கொள்கையாகும். எந்த ஒரு குறிப்பிட்ட தினத்திலும், எந்த ஒரு  உணவையும் உண்ணக்கூடாது என தடை விதிப்பது சட்டத்திற்கு எதிரானதாகும். மத்தியில் பாஜக  அரசு  அமைந்த பிறகு நாடு முழுவதும் உணவை முன்வைத்து சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்களின் பின்னணியில் தமிழகத்தின் தலைநகரத்தில் இந்த  கட்டுப்பாடு கவலையளிக்கக்கூடியதாகும்.

சென்னை மாநகராட்சி உடனடியாக  தனது உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டுமென  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்