மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு! | Outrage on social media after Sabarimala board wants machine that scans menstruating women

வெளியிடப்பட்ட நேரம்: 10:18 (24/11/2015)

கடைசி தொடர்பு:13:18 (24/11/2015)

மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு!

ந்தியாவில் பெரும்பாலான கோவில்களில், மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்ற அறிவிப்பினை பார்க்க முடியும்.

ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள்  மட்டும் மாதவிலக்கு காலங்களில் மட்டுமல்ல, குழந்தை பெற்றுகொள்ள தகுதியுடைய எந்த பெண்ணும் கோவிலுக்குள் வரக் கூடாது என்று அதன் இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதாவது, "கடவுள் ஐயப்பன் ஒரு நித்திய பிரம்மாச்சரி.  அதனால் 10 வயதில் இருந்து 50 வயதுடைய மற்றும் மாதவிலக்கு நிற்காத பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று கூறப்பட்டிருக்கும்.

அதையும் மீறி கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால், அவர்கள் கோவில் நிர்வாகத்தால், வெளியேற்றப்படுவார்கள்.

 பிரபல கன்னட நடிகை ஜெய்மாலா,  தான் 2006-ம் ஆண்டு சபரிமலைக்குள் சென்று கடவுள் ஐயப்பனை தொட்டு வழிபட்ட தகவலை 2010-ம் ஆண்டு கூறி சர்ச்சையில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து, கேரள தேவசம் போர்டு அவர் மீது வழக்கும் தொடர்ந்தது.

இந்நிலையில் கொல்லம் நகரில் தேவசம் போர்டு தலைவர் கோபால கிருஷ்ணன் செய்தியாளர்கள் பேசினார்.

அப்போது  அவரிடம்,  சபரிமலை கோவிலுக்குள் பெண்கள்  அனுமதிக்கப்படுவார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கோபாலகிருஷ்ணன், மனிதர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் அதனை கண்டுபிடிக்க நவீன கருவிகள் உள்ளன. அதேபோல் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டிருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க கருவிகள் வந்த பிறகு, பெண்கள் சபரிமலைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும்,  குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதியுடைய பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறினார்.

இதையடுத்து கோபாலகிருஷ்ணனின் இந்த பேச்சுக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைதளங்களில், அவருக்கு எதிராக பெண்கள் கடுமையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்காக ஃபேஸ்புக்கில்  #HappyToBleed  என்ற பெயரில்  தனி பக்கத்தை உருவாக்கியுள்ளனர்.

'ஆணாதிக்கத்தை அழிப்பேன்... என்ற தலைப்பில்', "மாதவிலக்கு என்பது பெண்களின் உடல் இயக்கம் சம்பந்தப்பட்டது. இந்த ஆணாதிக்க சமுதாயம் அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது. அதோடு 'மாதவிலக்கு குறித்து மகிழ்ச்சியடைகிறேன் ' என்று நாப்கின் போன்றவற்றில் எழுதி,  தங்களை பற்றிய விபரங்களுடன் ஏராளமான இளம் பெண்கள் ஃபேஸ்புக்கில் தங்கள்  புகைப்படங்களை பதிவேற்றி வருகின்றனனர்.

அதேபோல் ட்விட்டரிலும் கோபாலகிருஷ்ணனுக்கு எதிராக ட்ரெண்ட் தொடங்கப்பட்டுள்ளது. அதிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

'மாதவிலக்கு பற்றி பேசுவோம்' என்ற அமைப்பினை தோற்றுவித்த அர்ஜுன் உன்னிகிருஷ்ணன் என்பவரும்,  கோபாலகிருஷ்ணனுக்கு எதிராக பெண்கள் கிளர்ந்தெழ முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

மாதவிலக்கு பற்றி பேசுவதே தவறு என்ற பொதுவான கருத்து இந்தியாவில் நிலவி வருகிறது. பெரும்பாலோனார் மாதவிலக்கு பற்றி வெளிப்படையாக பேசுவதில்லை. ' மாதவிலக்கு பற்றி பேசுவோம்' அமைப்பு , மாதவிலக்கு என்பது பெண்கள் உடல்  இயக்கத்துடன் தொடர்புடையது என்றும், ஆண்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாத விஷயமும், பேசக் கூடாத விஷயமும் இல்லை  என்பது போன்ற கருத்துக்களையும் பரப்பி வருகிறது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்