Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடல் பூதம் தந்த மகிழ்ச்சி!

``மழையும் வெள்ளமும் எங்களுக்குப் புதுசு இல்லை. எங்க குழந்தை களுக்கு இயற்கையோடு போராடும் மனதைரியம் இருக்கு. ஆனா, இந்த வருஷ மழை, அவங்களை ரொம்பவே உலுக்கிருச்சு. நீங்க நடத்தின நிகழ்ச்சி, கொஞ்ச நாளா தொலைஞ்சுபோயிருந்த எங்க குழந்தைகளோட சிரிப்பை, சந்தோஷத்தை மீட்டுக்கொடுத் துச்சு... ஆனந்த விகடனுக்கும் ராகவா லாரன்ஸ் சாருக்கும் மிகப் பெரிய நன்றி'' - நெகிழ்ந்து பேசினார் தியாகவல்லி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரூபி மனோராணி. 

ஆனந்த விகடனும் ராகவா லாரன்ஸும் இணைந்து செயல்படுத்தும், `அறம் செய விரும்பு' திட்டத்தின் ஒரு பகுதியாக, மழை வெள்ளத்தில் மனதாலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதுவை பல்கலைக்கழக நாடகத் துறை பேராசிரியரும் குழந்தை நாடகக் கலைஞருமான வேலு சரவணனின் கலகலப்பான `கடல்பூதம்’ நாடகத்தை நடத்தி, உதவிப்பொருட்கள் வழங்கத் திட்டமிட்டோம்.
டிசம்பர் 31-ம் தேதி கடலூர் மாவட்டம் - தியாகவல்லி, வடகுத்து ஊர்களில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார் தியாக வல்லியைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் சாமி.

மக்களின் வாழ்வாதாரங்களைச் அடித்துச் சென்ற மழை வெள்ளம், மாணவர்களையும் மனரீதியாகச் சுருட்டிச் சென்றுவிட்டது. புத்தகங்களை இழந்ததால், எப்படிப் படிப்பது என்ற குழப்பம் ஒரு பக்கம், புதுப் புத்தகங்கள் கேட்டால், பெற்றோர் திட்டுவார்களோ என்ற அச்சம் மறு பக்கம்... என அவர்களுக்குத்தான் பெரும் மன உளைச்சல்.   

காலை, கடலூர் மாவட்டம், பரவனாற்று தீவுப் பகுதியைச் சுற்றி உள்ள திருச்சோபுரம், நஞ்சலிங்கப்பேட்டை, தம்மனம் பேட்டை, சித்திரப்பேட்டை, நொஞ்சிக்காடு, தியாகவல்லி ஆகிய கிராமங்களின் எட்டு அரசுப் பள்ளி மாணவர்கள் 650-க்கும் மேற்பட்டோரை தியாகவல்லி அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்றுகூட்டினோம்.

 ``ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...'' என உற்சாகக் குரல் கொடுத்தவாறு, கோமாளி வேடத்தில் வேலு சரவணன் நுழைந்ததும், குழந்தைகளின் முகங்களிலும் மனங்களிலும் தொற்றிக்கொண்டது உற்சாகச் சிரிப்பூ.
``என் பேரு கோரி. எனக்கும் படிக்கப் பிடிக்கும். கடலுக்குப் போய் மீன் பிடிக்கணும்னு ஆசை. ஆனா, அம்மா என்னைத் துணி துவைக்கிற தொழிலுக்கு அனுப்புறாங்க. இன்னைக்கு அவங்களுக்குத் தெரியாம நான் கடலுக்குப் போய் மீன் பிடிக்கப்போறேன். நீங்களும் என்னோட வர்றீங்களா?’’ என்றபடி, குழந்தைகளையும் நாடகத்தில் மீன்களாக்கி மகிழ்ச்சியில் நீந்தவிட்டார்.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் கோரி, மீன்கள் எதுவும் கிடைக்காமல் வருந்துகிறான். அப்போது அவனுக்கு வாய் கட்டப்பட்ட ஒரு சொம்பு கிடைக்கிறது. அதை வீட்டுக்குக் கொண்டுவந்து திறந்ததும் ஒரு பூதம் வெளியே வருகிறது.  `உங்க எல்லோரையும் சாப்பிட்டிருவேன்’ எனப் பயமுறுத்தும் பூதத்திடம் தந்திரமாகப் பேசி, அதை மீண்டும் சொம்புக்குள் போகவைக்கிறான் கோரி.

கடலில் துடுப்பு போடுவது, வலையில் மீன்கள் மாட்டாமல் தப்புவது, பூதத்தோடு மல்லுக்கட்டுவது... என ஒவ்வொரு குழந்தையும் நாடகத்தோடு ஒன்றி, அந்த இடத்தையே மகிழ்ச்சிக் கடலாக மாற்றிவிட்டனர். நாடகம் முடிந்த பிறகு, ஒவ்வொரு மாணவருக்கும் பென்சில் பாக்ஸ், கிரேயான், ஸ்கெட்ச் பென்கள், பலூன் மற்றும் சாக்லேட் அடங்கிய ஒரு செட் கொடுக்கப்பட்டது. டென்னிகாய்ட் (ரிங் பால்), கூடைப்பந்து, த்ரோ பால், வாலிபால் என விளையாட்டுப் பொருட்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.

அதே நாளின் பிற்பகலில் பொன்னங்குப்பம், சந்தைவெளிப்பேட்டை, இந்திரா நகர், வடக்குத்து ஊர்களைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளின் 740 மாணவர்களை, வடக்குத்து எஸ்.கே.எஸ் திருமண மண்டபத்துக்கு வரவைத்திருந்தோம். அங்கும் வேலு சரவணனின் நாடக உற்சாகம் குழந்தைகளைத் தொற்றிக்கொண்டது. அவர்களுக்கும் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

இப்படி ஒரு நல்ல நிகழ்ச்சியை நடத்துகிறோம் என அறிந்ததும் நம்மோடு இணைந்தார் மதுரை, கீழவாசல் ஈஸ்டர்ன் ஜவுளிக்கடை உரிமையாளர் கேசவன். ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு 1,713 ஆடைகளை அனுப்பிவைத்தார்.

 ``எப்பவுமே எங்க ஊர் ஓடையில தண்ணி வராது. ஆனா இந்த முறை, மழைத் தண்ணியோடு நெய்வேலி தண்ணியும் சேர்ந்து ஊரையே மூழ்கடிச்சிருச்சு.  ஊர்ல  இருந்த  அண்ணன்கள்தான் எங்களைப் பத்திரமா ஊருக்கு வெளியில கொண்டுபோய் விட்டாங்க. டவுசர் மட்டும்தான் மாட்டிக்கிட்டுப் போனேன். தண்ணி வடிஞ்ச பிறகு வந்து பார்த்தா, என் புத்தகப் பை,  சட்டை,  டவுசர் எதுவுமே இல்லை. ரொம்ப சோகமாகிட்டேன். எங்க மனநிலையைச் சரியாப் புரிஞ்சுகிட்ட மாதிரி `கடல்பூதம்' நாடகம் நடத்தி சந்தோஷப்படுத்திட்டீங்க’’ என மகிழ்ச்சிக் குரலில் சொன்னார் சந்தைவெளிப்பேட்டை பள்ளி மாணவர் ஒருவர்.

இதற்குத்தானே ஆசைப்பட்டோம்!

பயன்பெற்ற பள்ளிகளும் மாணவர்களுக்குக் கொடுத்த உதவிப் பொருட்களும்

அரசு ஆரம்பப் பள்ளி - திருச்சோபுரம், அரசு ஆரம்பப் பள்ளி - நஞ்சலிங்கப்பேட்டை, அரசுத் தொடக்கப் பள்ளி - தம்மனப்பேட்டை, அரசு ஆரம்பப் பள்ளி - சித்திரப்பேட்டை, அரசு ஆரம்பப் பள்ளி - நொஞ்சிக்காடு, அம்பேத்கர் நகர் ஆதி திராவிடர் நலப் பள்ளி - தியாகவல்லி, அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் - தியாகவல்லி, அரசு மேல்நிலைப் பள்ளி -இந்திரா நகர் மாற்றுக் குடியிருப்பு, அரசு ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளி - பொன்னங்குப்பம், அரசு ஆரம்பப் பள்ளி - வடக்குத்து மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி - சந்தைவெளிப்பேட்டை.

மாணவர்களுக்கு... பென்சில் பாக்ஸ், கிரேயான் பாக்ஸ், ஸ்கெட்ச் பென் பாக்கெட், பலூன், சாக்லேட் ஆகியவையும், பள்ளிகளுக்கு... டென்னிகாய்ட் (ரிங் பால்), கூடைப்பந்து செட், த்ரோ பால், வாலி பால், கால்பந்துகள் செட் வழங்கப்பட்டன!


`அறம் செய விரும்பு' திட்டத்தின் செயல்பாடுகள் ஆனந்த விகடனில் பகிரப்படும். திட்டம் தொடர்பான தகவல்களை www.vikatan.com/aramseyavirumbu என்ற வலைதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement