வெளியிடப்பட்ட நேரம்: 17:46 (20/09/2016)

கடைசி தொடர்பு:17:45 (20/09/2016)

‘‘100 நாட்களில் நான் கற்று கொண்டது என்ன?’’ - கிரண்பேடி கடிதம்

 '‘இ யற்கையின் தன்மை துளியும் குறையாத இந்தப் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக 100 நாட்களைக் கடந்துள்ளேன். இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டபோது, எனக்கு முன்னமே அறிவுறுத்தப்பட்டதன்படி நான் என்னென்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது. மேலும், அங்கு நடப்பவற்றைத் தெரிந்துகொள்ள, அரசின் கொள்கை சார்ந்த செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த மாற்றத்தைக் கொண்டுவர சற்றே கூடுதலாகச் சக்தி தேவை. இதில், எனக்கிருந்த கேள்வி என்னவென்றால்... இதையெல்லாம் நான் எவ்வளவு சீக்கிரமாக நிறைவேற்றப் போகிறேன் என்பதே. காரணம், புதுச்சேரி எனக்குப் பழக்கப்பட்ட பகுதி இல்லை. இங்கு யாரிடம் நான் தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும்... யாரிடம் என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும்... யார் எனக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவார்கள்? எல்லாவற்றையும்விட முக்கியமாக எனக்குத் தமிழ் புரியாது... பேசவும் தெரியாது. அப்படியென்றால், நான் சாமானியர்களை எப்படிச் சந்திக்க முடியும்... எப்படி அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக முடியும்?

என் அனுபவத்தின் உண்மை!

எனக்காக ஒதுக்கப்பட்டிருந்த ‘ராஜ் நிவாஸ்’ பிரெஞ்சு பாரம்பர்யக் கட்டடம். அதன் கறுப்பு வெள்ளை, கடந்த காலங்களின் சாட்சியமாக... அதன் சுவர்களில் எனக்கு முன்னால் அங்கு இருந்தவர்களின் புகைப்படங்கள் நிரம்பி இருக்கும். என் ஆதர்சமான பண்டித ஜவஹர்லால் நேரு, அரவிந்தர் ஆஸ்ரம அன்னையுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படமும் அடக்கம். என் பங்களாவின் பல அடுக்குப் பாதுகாப்புகளைக் கடந்துதான் மக்கள் என்னைச் சந்திக்க வரவேண்டும். ஆனால், அவர்களாக வரட்டும் எனக் காத்திருக்கும் அளவுக்கு, எனக்குக் கால அவகாசம் இல்லை. அதுவும், முதல் சில காலங்களுக்குள் மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தால்தான் அவர்களுடன் இணைந்து செயல்பட முடியும் என்பது இதுவரையிலான என் அனுபவத்தில் உணர்ந்த உண்மை. குறுகிய காலத்துக்குள் நான் நட்பாகப் பழகுபவர்; எளிதில் அணுகக்கூடியவர்; நன்றாகப் பேசுபவர்; விவரமறிந்தவர்; தீர்வளிப்பவர் என்கிற புரிதலை ஏற்படுத்தியாக வேண்டும்.

இதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? செயல்படத் தொடங்கினேன். முதற்கட்டமாக என்னை உடல் அளவிலும் மனதளவிலும் வலுப்படுத்திக்கொள்ள முனைந்தேன். காலை நான்கு மணி என் நிரந்தரத் துயில் எழும் நேரமானது. 4:30 மணிக்குத்தான் உடலும் மனமும் சுறுசுறுப்பாக இயங்கும் என என்னுடைய யோகாசன குரு கூறியிருந்தார். நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்யவேண்டிய தேவை இருந்த எனக்கு விடியற்காலையில் விபாசனம் செய்வது அத்தியாவசியமாக இருந்தது. தியானம் செய்தேன்... மனதை ஒருமுகப்படுத்தினேன். அதன் பயனாக, என்னால் தெளிவாகச் சிந்திக்கவும் புதிய யோசனைகளைப் பெறவும் முடிந்தது.

செயற்பாட்டுக் களம்!

தினமும் காலை 10 மணிக்கு அதிகாரிகளுடன் சந்திப்பு எனத் திட்டமிட்டேன். அவர்களும் விவேகமானவர்களாகவும், சுறுசுறுப்பானவர்களாகவும், நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் இருந்தார்கள். தினசரி நாளேடுகளில் தெரிவிக்கப்படும் பிரச்னைகளை அணுகுவதிலிருந்துதான் என்னுடைய முதற்கட்டப் பணிகள் தொடங்கின. நாளேடுகள் தொடர்ந்து வெளியிடும் மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணத் தொடங்கினோம். மக்களுடன் மக்களாக எப்படி ஒன்றுபட முடியும் என்னும் சந்தேகத்தில் இருந்த நான், அவர்களுடைய பிரச்னைகளின் தீர்வுக்கான செயற்பாட்டுக் களத்தை அமைத்தேன். செயல்பாடுகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை அதிகாரிகளுடனான ஒவ்வொரு சந்திப்பிலும் தெரிந்துகொள்வேன். இது, பிரச்னைகளுக்கான தீர்வு எட்டப்பட்டுவிட்டதா என்பதைத் தெரிந்துகொள்ள உதவியது.

மக்களுடன் நெருக்கம்!

பிரச்னைகளில் சில, நேரே சென்று தீர்க்கப்பட வேண்டிய நிலையில் இருந்தன. அதனால், மக்களுடன் களத்தில் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. நாளடைவில் அவர்களுடன் நெருங்கிப்பழக முடிந்தது. அவர்களுக்கு என் மீது நம்பிக்கையும் நன்மதிப்பும் அதிகரித்தது. கூடவே நிறைய எதிர்பார்ப்புகளும். அதன் பலன், நேரில் மனுக்களாக வந்த குறை தீர்ப்புக் கடிதங்கள்... மின்னஞ்சல்கள் மூலமாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் எனக்கு வரத்தொடங்கின. இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க துறைவாரியாகக் கவனம் தேவைப்பட்டது. அடுத்தகட்டமாக, துறைவாரியன நிறைகுறைகளைப் பற்றிக் கவனம் செலுத்தினேன். அதற்காக, தொடர்புடைய அமைச்சர்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. இதன்வழியாக புதுவை அரசுக்கும் எனக்குமான உறவு வலுவடைந்தது. இது, என் வேலையை மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்து எளிதாக்கியது. சில நேரங்களில் உணவுவேளைகளில்கூட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடவேண்டி இருக்கும். இதுபோதாது என்று ஒவ்வொரு நாளும் மாலை 5 முதல் 6 மணி வரை மக்களின் குறை கேட்பதற்காக நேரம் ஒதுக்கினேன்.

அதாவது, குறிப்பிட்ட அந்த நேரத்தில் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் மக்கள் நேரிடையாகவே என்னைச் சந்தித்து மனுக்களைத் தரலாம். இதன் வழியாக அரசு அதிகாரிகளை எளிதில் சந்திக்க முடியாது என்று மக்களிடம் இருந்த பிம்பத்தை உடைத்தேன். நான் செய்ததால் எனக்குக் கீழ் இருந்த அதிகாரிகளும் இதனைப் பின்பற்ற வேண்டியதாகியது. முதலில் அதிகாரிகள் இதற்குச் சம்மதிப்பார்களா என்ற சந்தேகம். ஆனால், அவர்களும் இந்தச் செயலில் என்னுடன் இணைந்துகொண்டார்கள். இவ்வளவு குறைகளைக் கேட்டு மட்டும் என்ன? எப்படி இதற்குத் தீர்வு காணப்போகிறார்கள் என்கிற சிலரின் கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதற்கு ஏற்றது மாதிரியே நகராட்சி விவகாரங்கள் தொடங்கி, பெண்கள் மீதான வன்முறை எனப் பல பிரச்னைகளுக்கு என் அதிகாரிகளின் உதவியுடன் எளிதில் தீர்வு கிடைத்தது. பிரச்னைகள் குவிந்த அதே வேகத்தில் அதற்கான தீர்வுகளும் அதிகரித்தவண்ணம் இருந்தன. அப்போது வரை எனக்குப் பேசுவதற்குப் பிரச்னையாக இருந்த மொழியும் உடனிருந்த இரு அதிகாரிகளின் உதவிக்கரத்தால் தீர்ந்தது. நான் இருந்த ‘ராஜ் நிவாஸ்’ இப்போது ‘சேவா நிவாஸாக’ மாறியுள்ளது.

வார இறுதிச் செயல்பாடுகள்!

 

மாலை ஆறு மணிக்கு மேல் என் உதவியாளர் தேவ நீதி தாஸ் உதவியுடன் என் அலுவலகம் சார்ந்த வேலைகளைச் செய்தேன். அவர் புதுவை அரசின் பல்வேறு துறைகளில் வேலை செய்த அனுபவம் உடையவர் என்பதால், அவரின் உதவி என் அலுவலகம் சார்ந்த செயல்பாடுகளை எனக்கு எளிதாக்கியது.
வாரநாட்களைவிட வார இறுதியில் நான் மேற்கொண்ட செயல்பாடுகள்தான் எனக்கு நெருக்கமானதாக இருந்தன. ஒவ்வொரு வாரமும் வரும் செய்திகள், மனுக்கள், அதன்மீதான செயல்பாடுகள் வார இறுதியில் நாங்கள் செல்ல வேண்டிய களத்தை எங்களுக்குக் காட்டியது. காலை ஆறு மணிக்கே துறைசார்ந்த அதிகாரிகள் நீர்ப்பாசன அலுவலர்கள், முதன்மைப் பொறியாளர்கள், அவருடன் ஓர் அதிகாரி, சுற்றுச்சூழல், காவல், நகராட்சி சேவை, வனத்துறை, குடிசை வாரியம் என ஒவ்வொரு துறை அதிகாரிகளும் எனப் பெரும் குழுவாகக் களத்துக்குச் சென்று தீர்வுகளை எட்டினோம்.

‘தூய்மை இந்தியா’ திட்டம்!

களச்செயல்பாடு எங்களுக்கு ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லவும் வழிவகை செய்தது. அதற்காக மக்களுக்கு மத்தியில் கூடைப்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகளை ஒருங்கிணைத்து அதன் வழியாக தூய்மை பற்றிய விழிப்புணர்வை எடுத்துச் சென்றோம். இவையெல்லாம் இந்த 100 நாட்களில் என் செயல்பாடுகளத் திட்டமிட்ட கட்டெழுமானம்போல பூரணத்துவமாக்கியது. இதோ! செழுமையான புதுவையை உருவாக்க அடுத்த 100 நாட்களுக்காக என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது என் மனதுக்குள் திண்ணமாய்க் கூறிக்கொண்டதும் அதுதான்.’’

- கிரண்பேடி

தமிழில்: ஐஷ்வர்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்