ஏ.கே. செட்டியாருக்கு நாம் செலுத்தும் மரியாதை இதுதானா?’ - பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு! | A K Chettiyar Birthday Special Article

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (03/11/2016)

கடைசி தொடர்பு:10:43 (04/11/2016)

ஏ.கே. செட்டியாருக்கு நாம் செலுத்தும் மரியாதை இதுதானா?’ - பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு!

நீங்கள் இப்போது தான் படிப்பை முடித்து இருக்கிறீர்கள்...? உங்களுக்கு முன் இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று நீங்கள் எதிர்பார்க்காத சம்பளத்தில் வேலை. இன்னொன்று உங்கள் மனதுக்கு பிடித்தமான பணி. ஆனால், அந்த பணி உங்கள் வாழ்வாதாரத்துக்கு உதவுமா என்றெல்லாம் தெரியாது. அதுமட்டுமல்லாமல், அந்த ஒரு அசுர உழைப்பை வேறு கோருகிறது. இப்போது நீங்கள் எதனைத் தேர்வு செய்வீர்கள்...? அதிக சம்பளத்திலான வேலையையா அல்லது உங்கள் மனதுக்கு விருப்பமான பணியையா...?  நிச்சயம் நம்மில் பெரும்பாலானவர்கள் மனம் ஆயிரம் நினைக்கும். அது சொல்வதை எல்லாம் கேட்க முடியுமா...? என்று தம் விருப்பங்களை தாமே கொன்று, அதிக சம்பளம் அளிக்கும் பணியைத் தானே தேர்வு செய்வோம். ஆனால், அந்த மனிதர் அவ்வாறு யோசிக்கவில்லை... மனதின் குரலுக்கு காது கொடுத்தார்... அது சொல்லும் பாதையில் சென்றார். அந்த மனதின் குரல், அவரை அலைக்கழித்தது... கொஞ்சமல்ல நஞ்சமல்ல... ஏறத்தாழ ஒரு லட்சம் கிலோ மீட்டர் அவரைப் பயணம் செய்ய வைத்தது... நான்கு கண்டங்களிலும் அவமானத்தை சந்திக்க வைத்தது. அவர் தன் விருப்பங்களுக்காக அனைத்தையும் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டார். தன் விருப்பத்தை ஒரு ஆயுள் உழைப்பு கொடுத்து நிறைவேற்றினார்.  அந்த மனிதர் அ.ராம.அண்ணாமலை கருப்பன் செட்டியார் என்ற ஏ.கே.செட்டியார்.

காந்தி குறித்து படம் எடுக்கலாமா...?

ஏ.கே. செட்டியார்  1937-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி நியூயார்க்கிலிருந்து  டப்லினுக்கு கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். அவரது திட்டம் அக்டோபர் இரண்டு, டப்லினுக்கு சென்று விட வேண்டும்... அங்குள்ள இந்தியர்களுடன் காந்தியின் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்பது. ஆனால், சில காரணங்களால் பயணம் தாமதமாகிறது. அவருக்குக் கப்பலில் இருப்பு கொள்ளவில்லை. அந்த கப்பலில் இருவர் மட்டும் தான் இந்தியர்கள்... அவரிடம் கேட்கிறார், “கப்பலிலேயே அவர் பிறந்த நாளை கொண்டாடலாமா...?” அவர் சம்மதிக்கிறார்.  சில வெளிநாட்டவரும் அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இணைந்து கொள்கிறார்கள். அப்போதுதான் அவருக்கு அந்த விருப்பம் உண்டாகிறது. “ஏன் காந்தி குறித்து ஒரு ஆவணப்படம் எடுக்கக் கூடாது...?” அந்த விருப்பம் அவரை அன்றிரவு கப்பலில் தூங்கவிடவில்லை... காலை எழுந்தவுடன், சக இந்தியரிடம் சொல்கிறார்... அவர் சிரித்தே விட்டார்.  ‘என்ன ஆகுகிற காரியமா இது...?’ என்றவர், செட்டியாரின் விருப்பத்தைக் கண்டு, அதற்கு மேல் எதுவும் சொல்லாமல்... "படம் எடுப்பதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்...?" என்கிறார். செட்டியார் தன் திட்டத்தை விவரிக்கிறார். காந்தி குறித்த முதல் படத்துக்கான திட்டமிடல் இவ்வாறாகத் தான் துவங்கியது...!

செட்டியார் இந்தியா வந்தவுடன், ஸ்டுடியோ ஸ்டுடியோவாக ஏறி இறங்குகிறார்... “காந்தி குறித்த ஆவணப்படம் எடுத்துத் தருகிறேன்... நீங்கள் தயாரிக்கிறீர்களா...?” எல்லோரும் சிரிக்கிறார்கள்... "ஆவணப்படத்தை யாராவது பார்ப்பார்களா...?  வேண்டுமானால் எங்கள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துவிடுங்கள் நீங்கள் எதிர்பார்க்காத சம்பளம் தருகிறோம்" என்கிறார்கள். அவர்கள் செட்டியாரை அழைத்ததற்குக் காரணம்... செட்டியார் அமெரிக்கா மற்றும் டோக்கியோவில் சினிமா பயின்றவர். திறமையானவர். ஆனால், செட்டியார் அந்த வாய்ப்பை மறுக்கிறார்.  சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், செட்டியார் வெளிநாட்டில் பயின்றதால், எதார்த்தமற்ற விஷயங்களை யோசிக்கிறார் என்று எள்ளி நகையாடியது. சென்ற இடங்களில் எல்லாம் இந்த அவமானங்களை அவர் எதிர்கொண்டார். இறுதியில்,  அவர் விருப்பத்துக்கு அவரே உயிர் கொடுக்க முடிவுசெய்தார். அவரே ‘டாக்குமெண்டரி பிலிம்ஸ் லிமிடெட்’ என்ற பெயரில் நிறுவனத்தை துவங்குகிறார்.

‘உலகம் சுற்றிய தமிழன்’

நிறுவனத்தை துவங்கினால் மட்டும் போதுமா...? டாக்குமெண்டரி படம் எடுக்க வேண்டும் என்றால், காந்தி குறித்த பழைய புகைப்படங்கள்,  வீடியோக்கள் தேவை... அதை சேகரிக்க வேண்டும். அதுக்காக அவர் உலகம் முழுவதும் சுற்றுகிறார்... இரண்டாண்டுகளில் நான்கு கண்டங்களில் ஒரு லட்சம் மைல்கள் கப்பலிலும், விமானத்திலும் பயணிக்கிறார். அதுவும் அது, இரண்டாம் உலகப்போர் வெடிக்க இருந்த நெருக்கடியான தருணம். அவர் அது குறித்து கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல் ரோம், பாரீஸ், லண்டன், அமெரிக்கா, ஜெர்மன் என்று சுற்றினார் .  இவருக்கு படச்சுருளை தர லண்டன் மறுத்தது. தென் ஆப்ரிக்க கப்பல், இவரை மட்டும் தனி இடத்தில் அமர வைத்து உணவளித்து தன் இனவாதத்தை கக்கியது... அனைத்தையும், தான் மேற்கொண்டிருக்கும் ஒரு உன்னத பணிக்காக, பொறுத்துக் கொண்டு.... பழைய வீடியோக்களை திரட்டி, புதிதாக சில விஷயங்களை எடுத்து, ஏறத்தாழ 50,000 அடி நீளமுள்ள பட சுருள்களை திரட்டினார். அதிலிருந்து 12,000 அடி நீளமுள்ள படமாக தொகுத்து 1940-ம் ஆண்டு வெளியிட்டார்.  வெளியிட்டதுடன் அவர் பணி முடியவில்லை... காந்தி குறித்த படத்தை அழிக்க, பிரிட்டன் அரசாங்கம் திட்டமிடுகிறது என்பதை அறிந்து... அதை ஆறு பிரதிகள் எடுத்து வெவ்வேறு இடங்களில்  ஒளித்து வைத்துக் காப்பாற்றினார். அதை, 'Mahatma Gandhi: Twentieth Century Prophet' என்று ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து அமெரிக்காவில் திரையிட்டார். இதில், அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் தொடங்கி, ஐ.நா.வின் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளின் தூதுவர்களும் கலந்துகொண்டு இருக்கிறார்கள். படத்தைப் பார்த்து சிலாகித்து, அமெரிக்க பத்திரிக்கைகள் எழுதி இருந்தன.

எவ்வளவு மகிழ்வான ஒன்று.... காந்தி குறித்து முதல் படம் எடுத்தது தமிழர்... அதுவும் அமெரிக்க அதிபரே பார்த்து பாராட்டி இருக்கிறார்...? என்ன பெருமைப் பட்டுக்கொள்ளலாமா...?   நிச்சயம் முடியாது... நாம் உண்மையில் வெட்கப்பட வேண்டும்...?

ஏன்..?

நம்மிடம் அவர் எடுத்த ஆவணப்படத்தின் பிரதி ஒன்று கூட இல்லை. அது எங்கு இருக்கிறது என்றும் தெரியவில்லை. ஆம்.... காந்தி ஆவணப் படத்தை தொலைத்து விட்டோம்.

நாம் தமிழர்கள் வெற்றுப் பெருமைகளை மட்டுமே பேசி, நம் வரலாறை, நம் முன்னோர்களின் உழைப்பைப் பாதுகாக்கத் தவறி விட்டோம். செட்டியார் எடுத்த  ஆவணப்படத்தை தான் தொலைத்தோம்...  குறைந்தபட்சம் அவர் குறித்தாவது நம் பிள்ளைகளுக்கு சொல்வோம்...!
காந்தி குறித்து படம் எடுக்க உலகம் சுற்றியவன் தமிழன் என்று...!

இன்று ஏ.கே. செட்டியார் பிறந்த நாள்.

- மு. நியாஸ் அகமது

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்