தலைமை ஏற்க வாருங்கள்..! சசிகலாவிடம் வலியுறுத்திய மூத்த நிர்வாகிகள்

''அதிமுக தலைமையை ஏற்க வாருங்கள்'' என்று அதிமுக மூத்த நிர்வாகிகள், சசிகலாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள கிரீம்ஸ் சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, கடந்த 5ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவை ஜீரணிக்க முடியாமல் அதிமுக தொண்டர்கள் சமாதியிலும், அவரது போயஸ் கார்டன் இல்லத்திலும் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

இதனிடையே, முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் சசிகலா, முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டு தலைமைச் செயலகம் சென்றனர்.

இந்த நிலையில், போயஸ் கார்டன் செல்லும் வழி எங்கும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்களை கார்டனுக்குள் திடீரென சசிகலா அனுமதி அளித்தார். அனைவரும் வரிசையில் நின்று கொண்டு கார்டனுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு சசிகலா ஆறுதல் கூறினார்.

இதனிடையே, அதிமுக மூத்த நிர்வாகிகள், மதுசூதன், செங்கோட்டையன், வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி, சைதை துரைசாமி, ராஜன் செல்லப்பா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் இன்று திடீரென போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தனர். அவர்கள், சசிகலாவை சந்தித்தனர். அப்போது, "அம்மாவின் வழியில் கட்சியை வழி நடத்த வேண்டும். கட்சியின் அரணாக இருந்து வழி நடத்த வேண்டும். கட்சியின் மையப்புள்ளியாக செயல்பட வேண்டும். தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

அவர்களின் கையை பிடித்துக் கொண்ட அவர்களுக்கு, சசிகலா உருக்கமான பதில் அளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!