'சின்னம்மா'வை இதற்காகத்தான் அழைக்கிறோம்..! வளர்மதி, சைதை துரைசாமி கலகல பேட்டி | Valarmathi, Saidai Duraiswamy wish Sasikala to be the new General Secretary of ADMK

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (10/12/2016)

கடைசி தொடர்பு:17:40 (10/12/2016)

'சின்னம்மா'வை இதற்காகத்தான் அழைக்கிறோம்..! வளர்மதி, சைதை துரைசாமி கலகல பேட்டி

இந்த இயக்கம் உடைந்து விடக்கூடாது, பாழ்பட்டுவிடக் கூடாது, இந்த இயக்கம் கருணாநிதிக்கு முன்பாக தோல்வி அடைந்தது என்ற ஒரு பெரிய நிகழ்வு நடந்து விடக்கூடாது என்ற அக்கறையில்தான் சின்னம்மாவை தலைமை ஏற்க அழைக்கிறோம் என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள கிரீம்ஸ் சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, கடந்த 5ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவை ஜீரணிக்க முடியாமல் அதிமுக தொண்டர்கள் சமாதியிலும், அவரது போயஸ் கார்டன் இல்லத்திலும் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

இதனிடையே, முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் சசிகலா, முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டு தலைமைச் செயலகம் சென்றனர்.

இந்த நிலையில், போயஸ் கார்டன் செல்லும் வழி எங்கும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்களை கார்டனுக்குள் திடீரென சசிகலா அனுமதித்தார். அனைவரும் வரிசையில் நின்று கொண்டு கார்டனுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு சசிகலா ஆறுதல் கூறினார்.

இதனிடையே, அதிமுக மூத்த நிர்வாகிகள், மதுசூதனன், செங்கோட்டையன், வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி, சைதை துரைசாமி, ராஜன் செல்லப்பா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் இன்று திடீரென போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தனர். அவர்கள், சசிகலாவை சந்தித்தனர். அப்போது, "அம்மாவின் வழியில் கட்சியை வழி நடத்த வேண்டும். கட்சியின் அரணாக இருந்து வழி நடத்த வேண்டும். கட்சியின் மையப்புள்ளியாக செயல்பட வேண்டும். தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

இந்த சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் வளர்மதி அளித்த பேட்டியில், "அம்மாவை தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருந்தவர் சின்னம்மா. சின்னம்மா தலைமை ஏற்க வேண்டும். புரட்சித் தலைவி அம்மா இருந்த காலத்திலேயே சின்னம்மாவை இயக்கத்திலே அறிமுகப்படுத்தி, தலைமை செயற்குழு உறுப்பினராக்கி, பொதுக்குழு உறுப்பினராக்கி இறுகப்படுத்தி வைத்தவர் புரட்சித் தலைவி அம்மா. அப்போதே இந்த இயக்கத்திற்கு வழி நடத்தக்கூடியவர்கள் யார் என்பதை அம்மா அடையாளம் காட்டி இருக்கிறார். இந்த இயக்கம் அம்மாவின் மறைவுக்கு பின்னர் தவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட சின்னம்மா தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்பதுதான் இன்றைய அதிமுக தொண்டர்களின் விருப்பம்" என்றார்.

முன்னாள் மேயர் சைதை துரைசாமி கூறுகையில், "அதிமுகவுக்கு யார் தலைமை ஏற்க வேண்டும் என்பதை தொண்டர்களும், பொதுமக்களும் புரிந்து வைத்து இருக்கிறார்கள். 32 காலமாக அம்மாவுடன், சசிகலா அம்மையார் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அம்மாவின் எண்ணம், சிந்தனை, எல்லாவிதமான கருத்துக்களும், இந்த இயக்கத்திலேயே இன்றைக்கு இருக்கக்கூடியவர்கள் மத்தியில் இவரை (சசிகலா) தவிர வேறு யாருக்கும் இல்லை. நெருக்கடியான இந்த நேரத்தில் இந்த இயக்கத்தை வழிநடத்துகின்ற பெரும் பொறுப்பை அவர் ஏற்றால், இந்த கட்சி உடையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இன்றைக்கு அத்தனை பேர்களும் இந்த இயக்கம் உடைந்து விடக்கூடாது, பாழ்பட்டுவிடக் கூடாது, இந்த இயக்கம் கருணாநிதிக்கு முன்பாக தோல்வி அடைந்தது என்ற ஒரு பெரிய நிகழ்வு நடந்து விடக்கூடாது என்ற அக்கறைதான்.

யாருக்கு என்ன பதவி என்பது முக்கியமல்ல. இப்போது யாரை நாம் களத்தில் வீழ்த்த நினைக்கிறோமோ, அவர்களுக்கு இந்த வாய்ப்பு ஆதாரமாக வாய்ந்திட கூடாது என்பதற்காகத்தான், எங்களைப்போன்ற தொண்டர்களின் எண்ணம். 1972ஆம் ஆண்டில் இந்த இயக்கம் தொடங்கியபோது எங்களை போன்றவர்கள் உயிரை பணையம் வைத்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்காக நாங்கள் ரத்தம் சிந்தியபோது எந்த உணர்வோடு இருந்தோமோ அதேபோன்றுதான் அந்த உணர்வை கொண்டிருக்கிறோம். ஆகவே, இந்த இயக்கம் சிறப்பாக இருக்க வேண்டுமென்று சொன்னால் அம்மாவின் எண்ணங்களை, சிந்தனைகளை, அவர் என்ன நினைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை இந்த இயக்கத்தில் இருக்கின்ற வேறு யாருக்கும் தெரியாது. அப்படி தெரிந்த ஒருவர் இந்த இயக்கத்தின் மையப்புள்ளியாக இருந்த, இருக்கிற சசிகலா அம்மையார் தான்.அவரால் தான் இந்த இயக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்படும். அவர்களை வேண்டாமென்று சொல்கிறவர்கள் யார், இந்த இயக்கத்தை விட்டு வெளியே சென்றவர்கள். இந்த இயக்கத்தில் அதிகாரம் செலுத்த முடியவில்லை என்கிற அதிருப்தியாளர்கள். அதுவும் கட்சியை விட்டு அம்மாவால் நீக்கப்பட்ட ஒருவர். அவர் இன்று ஊடகங்களில் சொல்லுகின்ற செய்தியை பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஒரு எஃக்கு கோட்டை. இந்த இயக்கத்தை தொடர்ந்து வழிநடத்திச் செல்ல வேண்டும்,  மையப்புள்ளியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம் என்று சொன்னால் இந்த இயக்கம் மக்கள் இயக்கம். இந்த மக்கள் பாழ்பட்டுவிடக்கூடாது. எதிரிகளுக்கு ஆதாயமாக அமைந்துவிடக்கூடாது. அதனால்தான் ஒவ்வொரு வாய்ப்பும், இழப்பும் புதிய சரித்திரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த காலத்தை ஒப்பிட்டு பார்த்தாேமானால் தலைவர்களோடு யார் நெருக்கமாக இருந்தார்களோ, தலைவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டவர்களே வரக்கூடிய வாய்ப்பினை உருவாக்கி இருக்கிறார்கள். அதேபோல்தான் அம்மாவின் வழியில் வந்த சசிகலா அம்மையாரின் ஒருங்கிணைப்புடன் இந்த இயக்கம் இயங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்" என்று கூறினார்.

அதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன் கூறுகையில், "அம்மாவின் அரவணைப்பில் அதிமுக எஃக்கு கோட்டையாக மாறியிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி கட்டிக்காத்த அம்மா அவர்கள், நம்மை விட்டுச்சென்று ஐந்து நாட்கள் கடந்தாலும் கூட கோடானுகோடி மக்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இயக்கம் காப்பாற்றப்பட வேண்டும், ஒற்றுமையோடு இருக்க வேண்டும். இந்த இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டுமென்றால் அம்மாவின் உயிர்த்தோழியான சின்னம்மாவால்தான் முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அம்மாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும், கோட்பாடுகளையும் அறிந்து தெரிந்து அம்மாவுக்கு உறுதுணையாக நின்றவர்கள் சின்னம்மாதான். தமிழ்நாட்டில் இருக்கிற கோடானுகோடி மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். இந்த இயக்கம் அழிய வேண்டும் என்று கருணாநிதி, மார்க்சிஸ்ட் தோழர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களையொல்லாம் சுக்குநூறாக உடைத்து எறிய நாங்கள் எல்லாரும் இருக்கிறோம். அம்மா விட்டுச் சென்ற பணிகளை நான் தலைமையேற்று நடத்திக் காட்டுவேன், ஒற்றுமையுடன் வழி நடத்துவேன் என்று இருக்கின்ற தலைவிதான் இந்த இயக்கத்தை வழி நடத்த முடியும். அந்த பொறுப்புள்ள தலைவியாக நாங்கள் சின்னம்மாவை பார்க்கிறோம். இந்த இயக்கத்தை தலைமைத் தாங்க வாருங்கள் என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறோம். சின்னம்மாவின் முடிவை பொறுத்துத்தான் இந்த இயக்கம் கட்டுப்பாடாக, கண்ணியமாக இருக்குமா என்பது தெரிய வரும். இந்த எஃக்கு கோட்டையை காப்பாற்ற சின்னம்மாவை தர வேறு யாரும் இல்லை" என்றார். 

சகாயராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்