'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா..!?' என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்? | Sasikala to be the new General Secretary of ADMK

வெளியிடப்பட்ட நேரம்: 21:29 (10/12/2016)

கடைசி தொடர்பு:23:29 (10/12/2016)

'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா..!?' என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்?

 

என்ன நடக்கிறது அதிமுகவில்?


அதிமுகவில் அடுத்த பொது செயலாளர் யார் என்ற சஸ்பென்ஸ் நீங்கி, பொதுச் செயலாளராக சசிகலாவை முன்னிறுத்தும் பணி அதி விரைவாக நடந்து வருகிறது.சீனியர் அதிமுக நிர்வாகிகள் சசிகலா தான் பொது செயலாளராக வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்


இன்று காலை போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் ஓபிஎஸ்,சசிகலா, அமைச்சர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அங்கிருந்து கிளம்பி தலைமை செயலகம் சென்றனர். இன்று கூடிய அமைச்சரவையிலும், ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா, ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் என்பதை பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா செல்வி ஜெ ஜெயலலிதா நினைவிடம் என்று பெயர் மாற்ற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள்.


தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா, கடந்த 5-ம் தேதி உடல்நலக் குறைவால், அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அப்போதே, கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் பொது செயலாளர் பதவி, கட்சியில் அங்கீகாரம் போன்றவற்றை மையப்படுத்தி சில பேப்பரில் கையெழுத்து வாங்கியதாக  தகவல்கள் வெளியாகின. கடந்த 28 ஆண்டுகளாக, அஇஅதிமுகவின் பொது செயலாளராக இருந்தவர் செல்வி ஜெ ஜெயலலிதா. எந்தவித போட்டியோ, சிக்கலோ இல்லாமல், ஒரு மனதாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை  , பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் ஜெயலலிதா. அதே போல், சசிகலாவும் போட்டியின்றி தேர்வாவதையே விரும்புகிறார் என்கின்றனர் அதிமுக வட்டாரங்கள். அதற்கேற்றாற் போல், காய்களை நகர்த்தி வருகிறார்கள் மன்னார்குடி குடும்பத்தினர்.


 ஆட்சி... கட்சி... அதிகாரம்?


தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் எவ்வித குறுக்கீடும் இல்லாமல், மத்திய அரசின் விருப்படியும் இருக்க வேண்டும் என நினைக்கிறாராம் சசிகலா.முதல்வரின் பதவிகள் பங்கீடு செய்யப்பட வேண்டும் என பேச்சு வந்த போது, ஆளுநர் வித்யாசாகர் ராவின் சாய்ஸாக இருந்தவர் பன்னீர் செல்வம் தான்.முதல்வர் இருந்து இருந்தாலும், அவரின் சாய்ஸும் ஓபிஎஸ்ஸாகத்தான் இருக்கும் என்பதால், அந்த முடிவில் தீர்மானமாக இருந்தாராம் சசிகலா. அதனையொட்டித்தான் மத்திய அரசின் விருப்பப் பட்டியலில் இருந்த  ஓ பன்னீர் செல்வத்துக்கு மீண்டும் தமிழக முதல்வர் பதவி வழங்கப்பட்டதாம். ஆனால், இதை மற்ற மன்னார்குடி குடும்பத்தினர் ரசிக்கவில்லை என்கிறார்கள். கட்சி அதிகாரத்திலும், தம்பிதுரையை முன்னிறுத்தும் வேலைகளில் ஈடுபட்டதாம் மத்திய அரசு. அதே போல், மன்னார்குடி குடும்ப ஆதிக்கத்தால், தனது செல்வாக்கை பெருமளவு இழந்த செங்கோட்டையனும், சசிகலாவுக்கு எதிராக இருந்ததாக செய்திகள் வெளியாகின. இவர்கள் அனைவரையும் சமாதானப்படுத்தி இருக்கிறாராம் சசிகலா. 


இதனை உறுதிப்படுத்தும் விதமாக, செங்கோட்டையன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.இதன்மூலம் சுற்றிவந்த வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் செங்கோட்டையன்


அதே போல் மத்திய அரசிடம் இணக்க போக்கை கடைப்பிடிக்கவே பறக்கும் சாலை திட்டம், சரக்கு மற்றும் சேவை வரி போன்றவற்றிற்கு பரஸ்பர ஒத்துழைப்பை நல்கி இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் பறக்கும் சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. சொத்துக்குவிப்பு வழக்கும், அதன் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதால், மத்திய அரசிடம் சுமூகமான அணுகுமுறையே தொடர வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் சசிகலா.
அடுத்தகட்ட நடவடிக்கையாக, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள், சசிகலாவை முன்மொழிய தொடங்கி இருக்கிறார்கள். மக்களிடம் இருக்கும் சில அதிருப்தியை போக்க, நேற்று அமைச்சர்களுடன், ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று வந்தார் சசிகலா. ஜெயலலிதா மறைவை ஜீரணிக்க முடியாமல் அதிமுக தொண்டர்கள் சமாதியிலும், அவரது போயஸ் கார்டன் இல்லத்திலும் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இன்று காலை, போயஸ் கார்டன் வந்தவர்களை சந்தித்து நேரில் ஆறுதல் கூறினார் சசிகலா. 


அதற்குப்பின்னர் அதிமுக மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், செங்கோட்டையன், வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி, சைதை துரைசாமி, ராஜன் செல்லப்பா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் இன்று திடீரென போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தனர். அவர்கள் அனைவரும் ஒரு சேர, கட்சியை தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்ற ஜெயலலிதாவின் நிழலாக இத்தனை ஆண்டுகள் இருந்த சசிகலா கட்சியின் பொது செயலாளராகி, கட்சியையும் தங்களையும் வழிநடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டர. கட்சியின் அரணாக இருந்து வழி நடத்த வேண்டும். கட்சியின் மையப்புள்ளியாக செயல்பட வேண்டும். தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

 

வரும் டிசம்பர் 20-ம் தேதிக்குள், அதிமுக பொது செயலாளராக சசிகலா போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்கிறார் அதிமுகவின் சீனியர் நிர்வாகி ஒருவர். 


ஜெயலலிதா மறைவு சோகம் ஒரு புறம் இருந்தாலும், கட்சி தன் அடுத்த கட்ட பணிகளில் வேகமாக சுழன்று கொண்டு இருப்பதையே இது காட்டுகிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

-நமது நிருபர்

-படம்: தே.அசோக் குமார்,மி.நிவேதன்

 

இந்நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவளித்துள்ளார். 

அதிமுக-வில் உருவாகியுள்ள வெற்றிடத்தை நிறைவு செய்யும் பொருட்டு ஆதரவு தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். 

அம்மா அவர்கள் வைத்திருந்த அதே கட்டுக்கோப்புடன் ஒரு ராணுவ அமைப்பு போல் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னால், அதற்கு ஒரே வழி சின்னம்மா அவர்கள் இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆகி வழிநடத்துவது ஒன்றே ஆகும்.

இந்தக் கருத்திற்கு ஒரு மாற்றுக் கருத்து இந்த இயக்கத்தில் இல்லை. அப்படி ஒரு மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர் எவரேனும் இருந்தால், அவர் இந்த இயக்கத்தின் தொண்டன் இல்லை என்று கூறியுள்ளார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்