வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (03/01/2017)

கடைசி தொடர்பு:17:18 (03/01/2017)

'எம்.ஜி.ஆர் இறந்தப்போ, அம்மாவையும் தான் ஏத்துக்கலை...' தனியரசுவின் சசிகலா லாஜிக்

கரூர் : "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்தபோது, அம்மாவையும்ந் ஏற்கவில்லை. தன்னோட திறம்பட்ட செயல்பாடுகளால் தொண்டர்களையும்,மக்களையும் அம்மா ஏற்க வைத்தார். அதுபோல சின்னம்மாவின் செயல்பாடுகளும், எல்லோரையும் அரவணைக்கும் தன்மையும் அவரை மக்கள் விரும்பும் தலைவராக மாற்றும்," என கொங்கு இளைஞர் பேரவை பொதுச்செயலாளர் தனியரசு தெரிவித்துள்ளார்.

முதல்வர் செயல்பாட்டில் இருக்கும் போது, அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களே முதல்வராக இன்னொருவருக்கு அழைப்பு விடுப்பது என்பது அரசியலுக்கு நிச்சயம் புதியது. எம்.எல்.ஏ.க்களால் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் முதல்வராக செயல்பட்டு வரும் நிலையில், மறுபுறம் சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத்தலைவருமான தம்பிதுரை, சசிகலா தான் முதல்வர் பொறுப்பினை ஏற்க வேண்டும் என அழுத்தமாக பேசி வருகிறார். சசிகலாவுக்கு கொங்கு மண்டலத்தில் தான் கடுமையாக எதிர்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோவையில் சசிகலா தான் தமிழகத்தின் முதல்வராக வர வேண்டும் எனச்சொல்லி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் தம்பிதுரை.

சசிகலாவுக்கு அதிக எதிர்ப்பு இருப்பதாக சொல்லப்படும் கொங்கு மண்டலத்தில் வந்து தம்பிதுரை இப்படி சொல்லியிருக்கிறாரே  என்ற கேள்வியுடன் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தனியரசுவிடம் பேசினோம்.

" எதிர்ப்பு என எதுவும் இல்லை. எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவுக்கு சமமான கட்சியை வலிநடத்தும் திறமை கொண்டவர் சின்னம்மாதான். அவர் முதல்வர் பதவி ஏற்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அவர் மீது எங்கள் மக்கள் மத்தியில் சிறு சந்தேகம் இருப்பது உண்மைதான். ஆனால்,சின்னம்மாவின் வலிமையான, திறமையான செயல்பாடுகளை பார்த்தபின்னர். அந்த சந்தேகங்கள் எல்லாம் பனி போல விலகும்.

நேற்றும், இன்றும், என்றும் தமிழகத்தில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி. அம்மா, அ.தி.மு.கவை எவ்வாறு ராணுவக் கட்டுப்பாட்டோடு நடத்தினாரோ, அதே அளவு கட்டுக்கோப்புடன் சின்னம்மாவும் திறம்பட கட்சியை வழிநடத்தி கொண்டு போவார். அம்மா எப்படி கட்சியையும், ஆட்சியையும் திறம்பட வழி நடத்தி, ஒட்டுமொத்த மக்களின் நன்மதிப்பையும் பெற்றாரோ, அதேபோல் சின்னம்மாவும் மக்கள் ஆதரவை பெறுவார்.

சின்னம்மா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதற்கு எங்கள் அமைப்பு சார்பாக வரவேற்கிறேன். அதோடு,அவங்க முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது எங்களோட விருப்பம், நிலைப்பாடு. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களோட நிலைப்பாடும் அதான். எங்க இன மக்களின் எண்ணமும் அதுதான். அவர்களை நேரடியாக சந்தித்து இந்த கருத்தை எங்கள் அமைப்பு சார்பாக வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

அதோடு,'கொங்கு மண்டலம் வழக்கமாக அ.தி.மு.க.வைதான் ஆதரிக்கும். அதுக்கு நாங்கள் பொறுப்பு' என்று உத்தரவாதம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். அதோடு,ஒவ்வொரு பகுதியாக போய் 'சின்னம்மா முதல்வர் பதவி ஏற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்' என சொல்லி வருகிறேன்.
சின்னம்மா கட்சியை திறம்பட நடத்துவார். கடுகளவு சந்தேகமும்,இடர்பாடுகளும்,குறைகளும் இல்லாமல் செம்மையாக செயல்படுவார். கொங்கு மக்களிடம் அவர் மீது சிறிதளவு சந்தேகமும், அவரை தலைவியாக ஏற்க தயக்கமும் இருப்பது உண்மைதான். உடனே அவரை எற்பதில் சிக்கல் உள்ளது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்தபோது, அம்மாவையும் ஏற்கவில்லை. தன்னோட திறம்பட்ட செயல்பாடுகளால் தொண்டர்களையும்,மக்களையும் அம்மா ஏற்க வைத்தார். அதுபோல சின்னம்மாவின் செயல்பாடுகளும், எல்லோரையும் அரவணைக்கும் தன்மையும் அவரை மக்கள் விரும்பும் தலைவராக மாற்றும்.
ஒட்டுமொத்த கொங்கு மண்டலமும் சின்னம்மா பின்னாடி அணிதிரண்டு இருக்கிறது. இங்குள்ள கொங்கு வேளாளர் சமூகம், அருந்ததியர் சமூகம்,

நெசவாளர்கள், வணிகர்கள், விவசாயிகள் என எல்லா தரப்பு மக்களும் அவர்களை தலைவியாக ஏற்றுக்கொண்டு விட்டார்கள். இதுதான் உண்மை. லேசாக இருக்கும் சந்தேகங்கள் 3 மாதத்திலோ, 6 மாதத்திலோ மறையும். சின்னம்மா மீதான முரண்பாடுகள்,விமர்சனங்கள்.கருத்துவேறுபாடுகள்கூட பனிவிலகுற மாதிரி விலகிடும். அதற்கான முயற்சிகளில் நாங்க தீவிரமா இருக்கோம்," என அ.தி.மு.க.நிர்வாகியைப்போல பேசி முடித்தார் கொங்கு இளைஞர் பேரவை தனியரசு.

- துரை.வேம்பையன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க