போஸ்டர், பேனர் ஏன் தவிர்க்கச் சொல்கிறார் ஸ்டாலின்?

நீண்டகால தமிழக அரசியலை காணும்போது, சமீபகால அரசியல் நிகழ்வுகள் சில ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடும். அதில் முக்கியமானது எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினின் செயல்பாடுகள். எதிர்கட்சித்தலைவராக அறிவிக்கப்பட்டதையடுத்து, முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு செல்கிறார். 12-வது வரிசையில் இடம் கொடுக்கப்பட்டபோதும், வெளியேறாமல் அமர்ந்திருக்கிறார். முதல்வர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது மருத்துவமனைக்கு சென்று பார்க்கிறார். இறப்புக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கரத்தை பிடித்து இரங்கலை தெரிவிக்கிறார். முதல்வரை சந்தித்து மக்கள் பிரச்னைகளை பேசுகிறார். இப்படி மற்றவர்களை எளிதில் கவரும் புதிய அணுகுமுறைகளை கையாளத்துவங்கி இருக்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின் M.K.Stalin

இதன் தொடர்ச்சியாக தனக்கு வைக்கப்படும் ஆடம்பர விளம்பரங்களை தவிர்க்குமாறு கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஸ்டாலின். "நிகழ்ச்சி பற்றிய விவரங்களைத் தெரிவிப்பதற்காக வைக்கப்படும் ஓரிரு பேனர்களில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் ஆகியோரின் படங்கள் மட்டும் இடம் பெற வேண்டும்.  பேனர்களைத் தவிருங்கள். கழகத்தின் இரு வண்ணக் கொடியை அதிகம் பயன்படுத்துங்கள்" எனச்சொல்லி இருக்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின் M.K.Stalin

கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே ஆடம்பர விளம்பரங்களாலே கவனிக்கப்பட்டு வந்தவர் ஸ்டாலின். 'நமக்கு நாமே' பயணமே அதற்கு முக்கிய சாட்சி. நமக்கு நாமே மேடைகள் ஸ்டாலினை மட்டுமே முன்னிறுத்தின. ஸ்டாலின் என்ற முகம்தான் தி.மு.க.வின் முகம் என காட்ட எடுக்கப்பட்ட அடுத்த முயற்சியில், எங்கு பார்த்தாலும் ஸ்டாலின் முகம் மட்டுமே பேனர்களிலும், போஸ்டர்களிலும் தென்பட்டன. மேடையில் ஸ்டாலின் மட்டுமே பேசினார்.  விளம்பரங்களும் ஸ்டாலினை மட்டுமே முன்னிறுத்தின.  

வழக்கமாக வெள்ளை வேஷ்டி, சட்டையில் வலம் வரும் ஸ்டாலின், பல வண்ணங்களில் உடை அணிந்து வந்தார். அமெரிக்க தேர்தலில் போட்டியிடுபவர் போல,  விதவிதமான ஆடைகளையும், ஒளிரும் ஷூக்களையும் அணிந்து கொண்டார். நமக்கு நாமே பயணம் துவங்கி தேர்தல் பிரசாரம் வரை தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக்கொண்டார். இப்படி எல்லா வகையிலும் விளம்பரங்கள் மூலமாக தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டார் ஸ்டாலின்.

இப்படி தன்னை ஒரு ப்ராண்டாக ப்ரமோட் செய்து கொண்ட ஸ்டாலின் திடீரென  'தனக்கு பேனர்களோ, ஆடம்பர முகம் சுளிக்கும் வார்த்தைகளை கொண்ட பதாகைகளையோ வைக்க வேண்டாம். அதற்கு பதிலாக, அண்ணா கண்ட லட்சியக் கொடியை உயர்த்துங்கள்' எனச்சொல்லி இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இளைஞர்கள் போராட்டம் தான் இதற்கு காரணம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.  'ஆடம்பர விளம்பரங்களைக் கைவிட்டு, லட்சியத்தை உயர்த்திப் பிடிக்கும்போது பொதுமக்களின் பேராதரவு பெருகும். புதிய இளைஞர்கள் நம்முடன் அணிவகுத்து வருவார்கள்' என ஸ்டாலின் சொல்வது இளைஞர்கள் போராட்டத்தின் விளைவாகத்தான் என்கிறார்கள்.

ஸ்டாலின் M.K.Stalin

இது தொடர்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகரிடம் நாம் பேசினோம். "ஸ்டாலினை வரவேற்று ஆடம்பர பதாகைகள், வருங்கால முதல்வரே என்று விளிக்கும் பதாகைகள் வைப்பது என்பது வாடிக்கைதான். இப்போது அவர் அதற்கு தடா போட்டதற்கு காரணம் இளைஞர்கள் போராட்டம். இனி ஆடம்பர பதாகைகள், ப்ளக்ஸ் போர்டுகள் வைத்து கட்சியை வளர்க்க முடியாது என்ற எண்ணம் தான் இதற்கு காரணம்.

லட்சக்கணக்கான இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக தன்னெழுச்சியாக திரண்டு போராடியதன் மூலம், அரசியல், சமூக விழிப்பு உணர்வு அடைந்திருக்கிறார்கள். அவர்களைக் கவர வேண்டும் என்றால் நிச்சயம் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும். அதைத்தான் ஸ்டாலின் செய்யத்துவங்கி இருக்கிறார். அ.தி.மு.க. பேனர்களில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் படத்தை சிறியதாக போட்டு சசிகலாவின் படத்தை பெரியதாக போடுவது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு கொஞ்சம் மாற்றத்தை உருவாக்கும் என ஸ்டாலின் நம்புகிறார்.

ஸ்டாலின் M.K.Stalin

இந்தச் சூழலில் தன் படத்தை போடாமல், பெரியார், அண்ணா, கலைஞர், அன்பழகன் படங்களை மட்டுமே போடச்சொன்ன பின்னணி இது தான். சசிகலா வெறுப்பு அரசியலுக்கு முன் இது சாஃப்ட் கார்னரை ஏற்படுத்தும் என ஸ்டாலின் நினைத்திருக்கலாம். இது மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" என்றார்.

இது தொடர்பாக  தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனிடம் பேசினோம். "எங்கள் செயல் தலைவரின் இந்த அறிவிப்பை முதல் ஆளாக கைகூப்பி வரவேற்கிறேன். நான் தளபதி அறிவிப்பை ரொம்ப காலமாகவே செயல்படுத்திட்டு வருகிறேன். தளபதியின் இந்த அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இனி அவரின் அன்பு கட்டளையை இம்மி அளவும் குறைக்காமல் கடைபிடிப்போம்" என்றார்.

- துரை.வேம்பையன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!