வெளியிடப்பட்ட நேரம்: 10:32 (09/05/2017)

கடைசி தொடர்பு:10:31 (09/05/2017)

ரோட்டுக்கடையில் இலவச வைஃபை... உதாரணம் காட்டிய மார்க் சக்கர்பெர்க்!

ரோஹித் மார்க்

இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் எந்தத் திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை எளிதாக எல்லாப் பொருளாதார நிலை கொண்ட மக்களிடமும் சோதித்துப் பார்க்க முடியும் என்பதை உலக நிறுவனங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளன. இதற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கும் விதிவிலக்கல்ல. சமீபத்தில் மார்க் சக்கர்பெர்க் தனது ஃபேஸ்புக் பதிவில் பதிவிட்டிருந்த ரோஹித் பற்றிய செய்தியும் அப்படிப்பட்ட ஒன்று தான்.

அவரது ஃபேஸ்புக் பதிவில் இந்தியாவில் Facebook Express Wi-Fi-ஐ பாரதி ஏர்டெல்லுடன் இணைந்து விரிவுபடுத்த உள்ளோம். இந்தியாவில் மேலும் 22000 ஹாட் ஸபாட்டுகள் மூலம் இணையச் சேவையை வழங்க முடிவு செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவில் இந்தியாவில் Facebook Express Wi-Fi மூலம் பயன்பெற்ற ரோஹித் பற்றியும் குறிபிட்டுள்ளார்.

ரோஹித் ஓர் உணவக உரிமையாளர். சிறிய அளவில் சாலையோரக் கடை வைத்திருக்கிறார். தனது தந்தையின் தொழிலை வழிநடத்தி வருபவர். முன்பு இந்த உணவகத்துக்கு வழிப்போக்கர்களும், சுற்றுலா செல்பவர்களும் மட்டுமே வந்து சென்றுள்ளனர். ரோஹித் Facebook Express Wi-Fi-ஐ தனது உணவகத்தில் நிறுவியிருக்கிறார். அதன் பின் பல்கலைக்கழக மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. மாணவர்களின் தேவை என்ன என்பது புரிய துவங்கியது. அவர்களுக்கு நல்ல உணவும், நல்ல இணையமும் தான் தேவை.

”அவர்களது இணையத் தேவையை பூர்த்தி செய்ய தான் Facebook Express Wi-Fi டவரை நிறுவினேன். முன்பு 30 நிமிடம் உணவகத்தில் செலவழித்த மாணவர்கள். தற்போது 2-3 மணி நேரம் செலவழிக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல உணவும், இணையமும் ஏற்படுத்தி தந்திருக்கிறேன் என்ற திருப்தி எனக்கு கிடைத்துள்ளது” என்கிறார் ரோஹித்.

 

ரோஹித் உணவகம் தற்போது மேம்பட்டுள்ளது. அங்கு சாப்பிட வரும் மாணவர்கள் இங்கு எங்களுக்கு அதிவேக இணைய சேவை கிடைக்கிறது. எங்களால் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது என்று தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். 

இந்தியாவில் இந்தச் சேவையை அதிகப்படுத்த வேண்டும். தொழில்முனைவோர்களுக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இந்த சமூகத்தால் மட்டுமே அனைவருக்கும் இணைய சேவையை கொண்டு சேர்க்க முடியும் என்கிறார் மார்க். இதனை மேலும் 50 மில்லியன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே ஃபேஸ்புக்கின் இலக்கு என்றும் கூறியுள்ளார். இதே போன்று பல உண்மைக் கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மார்க் ஒரு புத்திசாலி சிஇஓ என்பதை மணிக்கு ஒருமுறை நிரூபித்து வருகிறார். ஃபேஸ்புக் லைவ் துவங்கிய போதும் சரி, தற்போது இதுபோன்ற விஷயங்களுக்கும் சரி மார்க் மேற்கோள் காட்டும் நாடு இந்தியாவாக தான் உள்ளது. ஃபேஸ்புக் கனெக்ட் என்ற தத்துவத்தின் கீழ் இயங்குகிறது என்பதற்கு இந்திய கோவில்களில் இருந்து தான் இதனை கற்றுக்கொண்டேன் என்று மார்க் கூறியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதுமட்டுமல்ல இந்தியாவில் ஃப்ரீ பேசிக்ஸ் சேவையைத் தடை செய்த போது ஃபீலிங்ஸ் காட்டி இந்தியாவை நம்பி தான் மார்க்கின் பிசினெஸ் உள்ளது என்பதை உறுதி செய்தார்.  இந்தியா தான் இணையச் சந்தைக்கான மையம் என்பதை மார்க்கும் நன்கு அறிந்துள்ளார். இன்னும் பல ரோஹித் கதைகளை மார்க் இந்தியாவை வைத்து தான் கூறப்போகிறார் என்பது உண்மை.


டிரெண்டிங் @ விகடன்