மோடியைச் சந்தித்தது ஏன்? பன்னீர்செல்வம் விளக்கம்! | Panneerselvam meets Modi

வெளியிடப்பட்ட நேரம்: 18:32 (19/05/2017)

கடைசி தொடர்பு:20:22 (19/05/2017)

மோடியைச் சந்தித்தது ஏன்? பன்னீர்செல்வம் விளக்கம்!

தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்தவருமான பன்னீர்செல்வம், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். பன்னீர்செல்வம் பிரதமரைச் சந்திப்பதற்கு முன்பே, அ.தி.மு.க அம்மா அணியைச் சேர்ந்த தம்பிதுரை, பிரதமரைச் சந்தித்தார். இதனால், சற்று பரபரப்பு ஏற்பட்டது. 

Panneerselvam

மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பருவமழை பொய்த்ததால், தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது. எனவே, வறட்சி நிவாரணம் வழங்கவும், குடிநீர் பிரச்னையைச் சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், விவசாயிகள் வாங்கிய கடனை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்.


அதேபோல, அத்திக்கடவு அவினாசி திட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு, கூடுதல் நிதி வழங்கக் கோரினோம். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மீனவர்கள் பிரச்னை போன்றவை தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தினோம்.


 ஜெயலலிதா மரணத்தில், சிபிஐ விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளோம். மக்களின் பிரச்னைகளை மட்டுமே பேசினோம். அரசியல்குறித்து பேசவில்லை. பி.ஜே.பி இந்திய நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது, மாநிலத்துக்குத் தேவையான  உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற நிலையில் மத்திய அரசு இருக்கிறது.


எனவே, மத்திய அரசிடமிருந்து மாநிலத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்ய, அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் முயற்சிகளை மேற்கொள்ளவே, பிரதமரைச் சந்தித்தோம்" என்றார்.